முகப்பு
இளைஞர்மணி

நாளை நான் ஐஏஎஸ்! கேள்விக்கேற்ற பதில்!

ஸ்ரீப்படியும் ஒரு கேள்வி கேட்கப்படலாம்:

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

ஸ்ரீப்படியும் ஒரு கேள்வி கேட்கப்படலாம்:

"ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் தகுதிநிலை - ஆய்க (300 Words)’ குடிமைப்பணித் தேர்வுகளின் எழுத்துத் தேர்வுகளில் வினாவுக்கான விடை கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வார்த்தைகளின் அளவு, வினாவினைப் புரிந்து கொள்ளுதல், பொருத்தமான சொற்களைப் (KEY WORDS) பயன்படுத்துதல் போன்றவை நமக்கு சிறந்த மதிப்பெண்களை எழுத்துத் தேர்வில் பெற்றுத் தரும்.

மேலே கண்ட கேள்வியினை நாம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

1. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை

2. நிரந்தர உறுப்பினர்

3. இந்தியாவுக்கான தகுதிநிலை

4. ஆய்க (Examine)

இறுதியாக உள்ள "ஆய்க' என்னும் வார்த்தையே இக்கேள்விக்கான பதிலை நாம் எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்ற முறையினை விளக்குவதாகும்.

"ஆய்க' என்பதன் பொருள் இதற்கான விடையை நாம் எழுதும் போது உண்மை நிலையினை நடுநிலையோடு கூர்ந்து நோக்கிட வேண்டும். நிறைகளையும் (Merits), குறைகளையும் (Demerits) முறையாக ஆய்வு செய்திட வேண்டும். இறுதியாக ஏதேனும் ஒரு நிலையினை (தகுதி உண்டு அல்லது இல்லை) ஆதரித்து முடிவுரையை அமைத்தல் வேண்டும்.

மேற்கண்ட வினாவுக்கு கீழே கண்டுள்ளவாறு நாம் விடை எழுதலாம்.

"உலக அமைதிக்காக, உயர்ந்த நோக்கங்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் அமைப்பினை நிறுவிய நாடுகளில் ஒன்றாக (Founder member) இந்தியா விளங்குகின்றது. இதன் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சியினை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகின்றது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் நாடுகள் ரத்து அதிகாரம் (Veto Power) எனப்படும் உச்சபட்ச அதிகாரத்தினைப் பெறுகின்றன. அத்தகைய உயர்ந்த அதிகாரத்தினைப் பெறுகின்ற நாடுகளுக்கு மிகப்பெரிய பொறுப்புகளும் முன்நிற்கின்றன.

இந்தியா இத்தகைய அதிகாரத்தினைப் பெறும்போது ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகளுக்கு ஏராளமான நிதியினைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் படைக்கு பயிற்சி பெற்ற சிறந்த ராணுவ வீரர்களையும், நவீன ஆயுதங்களையும், தளவாடங்களையும் அளித்திட வேண்டும்.

ஏற்கனவே கடும் பொருளாதாரச் சுமைகளைக் கொண்டுள்ள இந்தியாவில், சுமார் 26 சதவிகிதம் மக்கள் நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர். வேலை வாய்ப்பின்மை நிலவி வருகின்றது.

ஊழல், மக்கள் தொகைப் பெருக்கம், எல்லைப் பிரச்சனைகள், தீவிரவாதம் போன்றவை நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முட்டுக் கட்டைகளாக இருந்து வருகின்றன.

இருப்பினும், இச்சூழ்நிலைகளை வைத்து மட்டுமே இந்தியா பாதுகாப்பு அவையில் இடம் பெறுவதற்கான தகுதி நிலையை முடிவு செய்துவிடமுடியாது.

ஏனெனில், உலக அமைதி, உலக மக்களின் நலவாழ்வு போன்ற இலட்சிய நோக்கங்களைக் கொண்டது ஐக்கிய நாடுகள் சபை. உலக அளவில் மதங்கள் மற்றும் இனங்களின் பேரில் மனித உரிமைகளுக்கெதிரான பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் இவ்வேளையில் ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் இந்தியா போன்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமயச்சார்பற்ற நாடு இடம் பெறுவது காலத்தின் கட்டாயம்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஐக்கிய அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும் துருவ நாடுகளாகப் பிரிந்தபோது, நடுநிலை நாடுகளின் தேவையை அறிந்து அணிசேரா நாடுகள் அமைப்பினைத் தோற்றுவித்த பெருமையில் பெரும் பங்கு இந்தியாவைச் சாரும்.

பஞ்சசீலக் கொள்கையை முன்வைத்ததன் மூலம் அண்டை நாடுகளுடன் ஒரு நாடு எத்தகைய நட்புறவைப் பேண வேண்டும் என்பதை உலகுக்குப் பறைசாற்றிய நாடு இந்தியாவாகும்.

அத்துடன் அநீதி, அடக்குமுறை போன்றவை உலகின் எப்பகுதியிலேனும் தலைதூக்கும் போதும் அதனை உடனே எதிர்க்கும் நாடாக இந்தியா கடந்த காலங்களில் செயல்பட்டு வந்துள்ளது.

பிரான்சு அல்ஜீரியாவிற்கு எதிராக அடக்குமுறையைக் கையாண்ட போது இந்தியா எதிர்க்குரல் கொடுத்துள்ளது.

இங்கிலாந்து சைப்ரஸýக்கு எதிராக அநீதி இழைத்தபோது இந்தியா அதனைத் துணிந்து எதிர்த்துள்ளது.

ரஷ்யா, ஹங்கேரிக்கு எதிராக ஆக்கிரமிப்பை மேற்கொண்ட போது இந்தியா கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது.

கானா, மொராக்கோ, எகிப்து, சூடான் மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளில் நடைபெற்ற தேசிய இயக்கங்களுக்கு இந்தியா உறுதுணையாக நின்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இனஒதுக்கல் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்ததில் இந்தியாவும் பெரும் பங்கு ஆற்றியுள்ளது.

1949 இல் சீனா குடியரசான போது அதனை அங்கீகரித்த முதல் நாடு இந்தியாவாகும்.

நேபாளத்தில் மக்களாட்சி மலர்வதற்கும், ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுவதற்கும் இந்தியா பெரும் பங்களிப்பினை நல்கியுள்ளது.

ஆதலால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் இடம் பெறுவதற்கு உலக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உரிமைகளைப் பேணிக்காப்பதற்கு குரல் கொடுக்கும் ஒரு நாடே இன்றையத் தேவை. ஏனெனில் பொருளாதார வலிமையைவிட மனித மாண்புகள் மகத்துவமானவை.

குறைவான பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற சில தேக்க நிலைகள் தன்னகத்தே இருப்பினும் உலக அமைதி மற்றும் உலக மக்களின் நலவாழ்வு போன்ற உலகளாவிய மனித உரிமைச் சிந்தனைகளில் இந்தியா எப்போதும் முனைப்போடு செயல்பட்டு வந்துள்ளது. எனவே, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராகும் தகுதிநிலை இந்தியாவுக்கு இருக்கிறது.'

இவ்வாறு மேற்கண்ட வினாவுக்கான பதிலை எழுதலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.