வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 64
புரொபஸர், கணேஷ், அவர்களின் நாய் ஜூலி நீச்சல் குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஆண்டாள் எனும் பெயருடைய ஓர் அழகிய திருநங்கை அங்கு வருகிறாள்
புரொபஸர், கணேஷ், அவர்களின் நாய் ஜூலி நீச்சல் குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஆண்டாள் எனும் பெயருடைய ஓர் அழகிய திருநங்கை அங்கு வருகிறாள். அவளிடன் ஜூலி Shall I compare thee to a summers day எனும் காதல் கவிதையைச் சொல்கிறது. அப்போது புரொபஸர் thee என்றால் என்னவென்று தெரியுமா? என கணேஷிடம் கேட்கிறார்.
கணேஷ்: Thee என்றால் நீ தானே சார்?
புரொபஸர்: இல்லை. தப்பு.
ஆண்டாள்: நீங்க தானே?
புரொபஸர்: இல்லை. இது ஒரு வித்தியாசமான வார்த்தை. Thee என்று நாம் ஜூலியை பார்த்து சொல்லலாம். ஆனால் ஜூலி நம்மை பார்த்து சொல்ல முடியாது.
ஆண்டாள்: அப்படீன்னா மிருகங்களை குறிப்பதற்கான சொல்லா?
புரொபஸர்: அப்படி அல்ல. நீங்க என்பது ரொம்ப மரியாதையான விளிச்சொல். நீ என்பது நமக்கு சமமான ஒருத்தரை குறிப்பதற்கான சொல். நம்மை விட வயதில் சிறியவரையும் நீ என்று அழைப்போம். ஆனால் சமூக அந்தஸ்தில் தாழ்ந்தவர்களை, கீழ்த்தட்டினரை சுட்டி விளிப்பதற்கு ஆரம்ப கால ஆங்கிலத்தில் இருந்த சொல் தான் thee. நவீன காலத்தில் சமத்துவம் முன்னெடுக்கப்பட்ட போது இச்சொல் வழக்கொழிந்து விட்டது. இப்போது நீ, நீங்க ரெண்டுக்கும் ஆங்கிலத்தில் you தான். இந்த youவை மட்டும் வைத்து ஒருமையா, பன்மையா என கணிக்க முடியாது.
ஆண்டாள்: ஆனால் இன்றும் கிறித்துவ பிரார்த்தனைப் பாடல்களில் இறைவனை அழைக்க thee பயன்படுத்துகிறார்கள் இல்லையா?
புரொபஸர்: நல்ல கேள்வி. மனதுக்கு மிகவும் நெருக்கமானவரை அழைப்பதற்கும் ஓர் அந்தரங்கமான விளிச்சொல்லாக thee - ஐப் பயன்படுத்தலாம்.
கணேஷ்: அப்படீன்னா thou?
புரொபஸர்: Theeயின் அதே பொருள் தான். Thine என்றால் உனது என பொருள்.
ஆண்டாள்: எனக்கு ஒரு டவுட்.
புரொபஸர்: கேளு
ஆண்டாள்: ஜூலியை நாம் it என்று சொல்லணுமா? அல்லது she எனச் சொல்லணுமா?
ஜூலி: excuse me, நான் ஒரு ஆம்பளை
ஆண்டாள்: ஓ... ஐ ஆம் சாரி...
புரொபஸர்: ஜூலி அதிகப் பிரசிங்கித்தனமா பேசாதே. ஆம்பளையா இருந்து என்ன சாதிச்சிட்டே? You must know your place. அடங்கு.
ஜூலி: ம்க்கும்...
புரொபஸர்: Actually உன் கேள்விக்கான பதில் சூழ்நிலையைப் பொறுத்தது. பொதுவா மிருகங்களுக்கு it தான். Every dog has its day. ஆனாலும், ஒரு செல்லப்பிராணியை he or she பயன்படுத்தி அழைக்கலாம்.
ஆண்டாள்: அப்படி என்றால் மனிதர்களுக்கு இணையா மிருகங்களையும் பாவிக்கலாம் என அர்த்தமோ?
புரொபஸர்: இப்போதெல்லாம் செல்லப்பிராணிகளை சொந்த குழந்தை போல நடத்துகிறார்களே. அதனால் ஒரு மிருகத்துக்கு பெயர் இருந்தாலே he அல்லது she என குறிப்பிடலாம். உதாரணமா, Julie is my dog. He is a pet sometimes, but a pest most of the time.
ஆண்டாள்: ஹா... ஹா... nice rhyme. Pet, pest.
கணேஷ்: அப்படீனா?
புரொபஸர்: ரொம்ப தொந்தரவு செய்யுறங்களை pest என்று சொல்லாம். Pest என்றால் நேரடியான அர்த்தம் உபத்திரவம் பண்ணும் பூச்சிகள்.
ஜூலி: It is a grave insult. சரி இனிமேல் என்னால் முடியாது.
புரொபஸர்: என்ன பண்ணப் போறே? என்னை விட்டு போகப் போறியா?
ஜூலி கொட்டாவி விடுகிறது: இல்ல என் எதிர்ப்பை பதிவு பண்ணும் விதமாய் தூங்கப் போறேன். Anyhow I am tired. I need to sleep
புரொபஸர்: அதானே பார்த்தேன்.
கணேஷ்: சார் grave என்றால் கல்லறை தானே?
புரொபஸர்: ஆமா
கணேஷ்: அப்பிடீன்னா grave insult கல்லறை அவமானமா?
புரொபஸர்: Graveக்கு இன்னொரு அர்த்தம் ரொம்ப சீரியஸான என்பது. A grave problem என்று சொல்லலாம்.
கணேஷ் ஆண்டாளை நோக்கி: நகத்தை கடிச்சுட்டு தீவிரமா என்ன யோசிக்கிறீங்க?
ஆண்டாள்: It பற்றி இன்னொரு சந்தேகம்.
(இனியும் பேசுவோம்)