முகப்பு
இளைஞர்மணி

நாளை நான் ஐஏஎஸ்! இரண்டாம் தாளிலும் வெற்றி பெற வேண்டும்!

இந்தியக்குடிமைப்பணித் தேர்வுகளில் இரண்டு தாள்களைக் கொண்ட முதல்நிலைத் தேர்வில் (PRELIMINARY) வெற்றி பெறுவது மிக முக்கியமானது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

இந்தியக்குடிமைப்பணித் தேர்வுகளில் இரண்டு தாள்களைக் கொண்ட முதல்நிலைத் தேர்வில் (PRELIMINARY) வெற்றி பெறுவது மிக முக்கியமானது. கொள்குறி வினாக்களைக் (OBJECTIVE TYPE QUESTIONS) கொண்டுள்ள முதல்நிலைத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் தரநிலைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனினும், விண்ணப்பித்து தேர்வு எழுதும் மாணவர்களில் சுமார் 2 சதவீதம் பேர் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வான முதன்மைத் தேர்வினை (MAINS) எழுதிட தேர்வு செய்யப்படுகின்றார்கள்.

உதாரணமாக, நாடுமுழுவதும் 6.5 லட்சம் பேர் தேர்வினை எழுதுகிறார்கள் என்றால், காலிப்பணியிடங்கள் 1000 என வைத்துக்கொண்டால் 13,000 (பதின்மூன்றாயிரம்) பேர் மட்டுமே முதன்மைத்தேர்வு எழுதிட தேர்வு செய்யப்படுகின்றார்கள். அதனால் முதல்நிலைத்தேர்வு முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றது.

தற்போது முதல்நிலைத்தேர்வின் இரண்டாம் தாளான திறனறிதல் பாடம் (APTITUDE PAPER) தகுதிப்பாடமாக (QUALIFYING) மாற்றம் பெற்றுள்ளது. எனவே, முதல் தாளான பொது அறிவுப்பாடம் வெற்றியைத் தீர்மானிக்கும் பாடமாக மாறியுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வைப் பொறுத்தவரையில் பொதுஅறிவுப்பாடத்தில் (PAPER-I-GENERAL STUDIES) இந்திய அரசியலமைப்பில் (INDIAN CONSTITUTION) இருந்து 12 வினாக்களும், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நடப்பு நிகழ்வுகளில் (SCIENCE & TECHNOLOGY AND CURRENT AFFAIRS) இருந்து 19 வினாக்களும், பொது அறிவியலில் (GENERAL SCIENCE) இருந்து 7 வினாக்களும், பொருளாதாரத்தில் (ECONOMICS) இருந்து 20 வினாக்களும், புவியியலில் (GEOGRAPHY) இருந்து 13 வினாக்களும், வரலாறு மற்றும் பண்பாட்டில் (HISTORY AND CULTURE) இருந்து 16 வினாக்களும், சுற்றுச்சூழல் (ENVIRONMENT) பகுதியில் இருந்து 13 வினாக்களும் கேட்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பகுதிகளுக்கான முக்கியத்துவம் ஒரே விதமாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, 2014 இல் பொது அறிவியலில் இருந்து 19 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு நிகழ்வுகளில் இருந்து 4 வினாக்கள், பொருளாதாரத்தில் இருந்து 12 வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. சில பாடங்களுக்கு முன்னுரிமை என்பது நடப்பு நிகழ்வுகளைப் பொறுத்து ஆண்டுதோறும் மாறும்.

ஆகவே, தேர்வர்கள் ஏதேனும் சில பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பது சில பகுதிகளை விட்டுவிடுவது என்பது வெற்றியைப் பாதிக்கும் நிலையை உருவாக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

அதே வேளையில், இரண்டாம் தாளான திறனறிதல் தாள் (CSAT) தகுதிபெறுதல் பாடம் மட்டும் தானே என நினைத்து குறைவாக எடை போடுதல் கூடாது. ஏனெனில், இரண்டாம் தாளில் தகுதி பெறாவிட்டால் வெற்றியை நிர்ணயிக்கும் முதல்தாள் மதிப்பிடுதலுக்கே எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. ஆதலால் இப்பாடத்திலும் கவனம் தேவை.

தமிழ்வழியில் படித்த, தமிழ் வழியில் தேர்வினை எழுதும் தேர்வர்கள் ஆங்கிலத்தில் உள்ள பாடநூல்களைப் படிப்பதும், ஆங்கில நாளிதழ்கள் படிப்பதும், ஆங்கிலத்திலேயே குறிப்புகள் எடுப்பதும் அவசியமானதாகும். தொடக்கத்தில் இது கடினமானதாகத் தோன்றினாலும், பின்னர் எளிதாக மாறும். ஏனென்றால் நாம் தேசிய அளவிலான உயர்ந்த பணிக்கான தேர்வுக்குத் தயாராகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேவையெனில், தமிழில் புரிந்து கொள்ளுதலுக்காகவும், சரியான தமிழ் சொற்கூற்றிற்காகவும் தமிழில் அடிக்குறிப்புகள் எழுதிக் கொள்ளலாம்.

இந்தியக்குடிமைப்பணிகள் தேர்வாணையத்தின் முதல்நிலைத்தேர்வில் வெற்றிபெறுவதற்கு என்.சி.இ.ஆர்.டி (NCERT) புத்தகங்களைப் படிப்பதுடன், அந்தந்த ஆண்டு வெளிவரும் ECONOMIC SURVEY, INDIA YEAR BOOK மற்றும் தினந்தோறும் நாளிதழ்களைத் தவறாமல் படித்து குறிப்புகள் எடுத்து வருவது அவசியமாகும். பெரும்பான்மையான வினாக்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே கேட்கப்படுகின்றன.

முதல்நிலைத்தேர்வில் அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் வினாக்கள் கேட்கப்படும்விதம் குறித்துக் காண்போம்.

நடப்பு நிகழ்வுகளில் அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பானவற்றை நுணுக்கமாகக் கவனித்து வரவேண்டும். சமீபத்தில் 7 செயற்கைக்கோள் தொகுதியைக் கொண்ட IRNSS வகையின் 50-வது செயற்கைக்கோளான IRNSS-IE  (INDIAN  REGIONAL  NAVIGATION  SATELLITE SYSTEM) என்ற புவியிடங்காட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இதனை விண்ணிற்கு எடுத்துச்செல்ல PSLV-C 31 என்ற ஏவுகலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை மையமாக வைத்து இது சம்பந்தமான குறிப்புகளைக் கீழே கண்டுள்ளவாறு தொகுக்கலாம்.

இந்திய விண்வெளி திட்டங்களைப் பொறுத்தவரையில், இரண்டு வகையான விண்வெளி செயற்கைக்கோள் அமைப்புகளை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. முதல்வகை இன்சாட் எனப்படும் இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT- INDIAN  NATIONAL  SATELLITE SYSTEM). இரண்டாம் வகை ஐ.ஆர்.எஸ் எனப்படும் இந்தியத் தொலை உணர்வு செயற்கைக்கோள் அமைப்பு (IRS-INDIAN  REMOTE  SENSING  SATELLITE) ஆகியவையாகும்.

அதேபோல இந்த செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு சுமந்து சென்று தேவையான சுற்றுப்பாதையில் (REQUIRED ORBIT) பொருத்திடும் ஏவுகலத்திலும் இரண்டு வகைகளை இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ISRO உருவாக்கியுள்ளது.

1.பிஎஸ்எல்வி எனப்படும் (PSLV- POLAR SATELLITE  LAUNCH VEHICLE) துருவப்பகுதிகளுக்கான செயற்கைக்கோள் ஏவுகலம். 2. ஜி.எஸ்.எல்.வி எனப்படும் (GSLV-GEOSYNCHRONOUS SATELLITE LAUNCH VEHICLE) புவியியக்கப் பாதையில் இணைந்தியங்கவைப்பதற்கான செயற்கைக்கோள் ஏவுகலம் ஆகியவையாகும்.

இன்சாட் வகை செயற்கைக் கோள்கள் தொலைத்தொடர்பு (TELECOMMUNICATION), வானிலை (TELECASTING), தொலைக்காட்சி ஒளிபரப்பு (TV BROAD CASTING), DTH) சேவைகள் (DIRECT TO HOME SERVICES), வணிகத் தொடர்புகள் (BUSINESS COMMUNICATION), ஊரகப்பகுதிகளை இணைத்தல் (RURAL AREA CONNECTIVITY), தொலைவழி மருத்துவம் (TELE-MEDICINE), தொலைவழிக்கல்வி (TELE-EDUCATION), கிராம ஆதார மையங்கள் (VILLAGE  RESOURCE  CENTRES),

போக்குவரத்து பற்றிய ஆய்வுகள் (TRAFFIC STUDIES), தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் (SEARCH AND RESCUE OPERATIONS)) மற்றும் அவசரகாலத் தொடர்புகள் (EMERGENCY COMMUNICATION) போன்றவற்றிற்குப் பயன்பட்டு வருகின்றன.

ஐ.ஆர்.எஸ்.வகை செயற்கைக்கோள்கள் விண்ணியலைப் பயன்படுத்தி அறியும் வேளாண்மை உற்பத்தி முன்னறிவிப்பு, வேளாண் வளிமண்டலவியல் மற்றும் நிலம் சார்ந்த நோக்குகள் (FORECASTING AGRICULTURAL OUTPUT USING SPACE, AGROMETEOROLOGY AND LAND BASED OBSERVATIONS), நிலத்தடி நீர் (GROUND WATER), நீர்ப்படுகைகள் மேலாண்மை (WATERSHED MANAGEMENT), முடுக்கிவிடப்பட்ட நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டங்கள் (ACCELERATED IRRIGATION BENEFIT PROGRAM), இயற்கை மற்றும் கனிம வளம் கணக்கெடுப்பு (NATURAL RESOURCES CENSUS), பனிப்பாறைகள் பற்றிய கல்வி (SNOW AND GLACIER STUDIES), தரிசுநில மேம்பாடு மற்றும் பரவலாக்கப்பட்ட திட்டங்களுக்கான விண்வெளி அடிப்படையிலான தகவல்முறை (WASTELANDS  MONITORING  AND  SPACE  BASED  INFORMATION  SYSTEM  FOR DECENTRALISED  PLANNING) ஆகிய கூறுகளில் பயன்பட்டு வருகின்றது.

எடுத்துக்காட்டிற்காக 2015ஆம் ஆண்டு இந்தியக்குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத்தேர்வில் அறிவியல் தொழில்நுட்பப் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட ஒரு வினாவைப் பார்ப்போம்.

In which of the following activities are Indian Remote Sensing (IRS) Satellites used?

1.Assessment of Crop Productivity.

2.Locating Ground Water Resources

3.Mineral Exploration

4.Tele Communications

5.Traffic Studies

Select the correct answer using the code given below:

(a) 1,2 and 3 only

(b) 4 and 5 only

(c) 1and 2 only

(d) 1, 2, 3, 4 and 5

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.