கணினியில் தட்டச்சு செய்த தகவலையோ, புகைப்படங்களையோ பிரதி எடுக்க நாம் பிரிண்டரைப் பயன்படுத்துகிறோம். இதையே நமக்குத் தேவையான ஒரு பொருளை முப்பரிமாணத்தில் வரைந்து பிரிண்டரைப் பயன்படுத்தி பிரதி எடுக்கும் போது, அந்தப் பொருள் அச்சு அசலாக அப்படியே முப்பரிமாண பொருளாக வெளிவந்தால்...?
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஓர் ஆங்கிலத் திரைப்படத்தில், கதாபாத்திரத்தின் முகத்தைப் போன்று ரப்பரால் ஆன முகமூடியை தயாரிக்க இதுபோன்று ஒரு முப்பரிமாண பிரிண்டரை கற்பனையில் பயன்படுத்தினர். ஆனால் அந்தக் கற்பனை தற்போது நிஜமாகியுள்ளது.
ஆம். சீனாவில் உற்பத்தி துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்த முக்கிய காரணமாக விளங்கும் 3டி பிரிண்டர் எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பம், இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. ஜெராக்ஸ் இயந்திரம் அளவில் சிறிது முதல் பெரிய அளவு வரை பல தரப்பில் இருக்கும் இந்த முப்பரிமாணப் பிரிண்டர் தொழிலில் சுயதொழில் வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
ஆனால் அதற்கு முன்னதாக நம் கற்பனை வளத்தை மேம்படுத்தி முப்பரிமாணத்தில் படங்களை வரைவதற்கான திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம். இவ்வாறு முப்பரிமாணப் படங்களை வரைவதற்கென்றே பல மென்பொருள்கள் அறிமுகமாகியுள்ளன.
ஆட்டோ டெஸ்க் 123டி, 3டி-டின், பிளெண்டர், ப்ரிகேட், ஓபன் ஸ்கேட், 3டி மாடல் பிரிண்ட், 3டி எஸ் மேர்ஸ், ஆட்டோகேட், சினிமா-4டி, லைட்வேவ், ஆட்டோ டெஸ்க், மாயா போன்றவை முப்பரிமாணப் படங்கள் வரைவதற்கான மென்பொருள்களில் சில.
இவ்வாறு முப்பரிமாணத்தில் வரைந்த பொருள்களைப் பிரிண்ட் எடுக்க அதாவது, மோல்டிங் எனப்படும் உருவத்தை, பிளாஸ்டிக், செராமிக்ஸ் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கலாம்.
எங்கெல்லாம் பயன்படுகிறது?
மருத்துவத் துறையில் அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக, சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய பகுதியை அப்படியே முப்பரிமாண பிரிண்டர் மூலம் பிளாஸ்டிக்கில் உருவாக்கி தேவையான சிகிச்சைக்கான பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். ஆட்டோ மொபைல் துறையில் புதிய வடிவமைப்புளை உருவாக்குதல், கட்டுமானத் துறையில் புதிய கட்டடங்களின் மாதிரியை உருவாக்குதல், விளையாட்டுப் பொருள்களை உருவாக்குதல், விண்வெளித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த முப்பரிமாண பிரிண்டர் பயன்படுத்தப்படுகிறது. சிலர் புதிய வடிவங்களில் இனிப்பு பண்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னோட்டமாக இந்த முப்பரிமாண பிரிண்டரைப் பயன்படுத்துகின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வரும் இவ்வேளையில், பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து முறையான பிளாஸ்டிக்காக மாற்றி முப்பரிமாணப் பிரிண்டர் மூலம் ஆக்கப்பூர்வமான வடிவங்களை உருவாக்க இயலும். மேற்கத்திய நாடுகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தன்னார்வ நடவடிக்கையாக பெரும் நிறுவனங்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த முப்பரிமாணப் பிரிண்டர் தொழில்நுட்பத்தை படிப்பதற்கென்றெ இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இணையதளங்களில் அவை குறிந்த விவரங்களை அறிந்து, பயிற்சி மேற்கொண்டால் வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் மூலம் பெரும் வருவாய் ஈட்ட முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.