முகப்பு
இளைஞர்மணி

நாளை நான் ஐஏஎஸ்! நேர்முகத் தேர்வில் கேள்விகள்... கேள்விகள்... கேள்விகள்!

பொதுவாக, குடிமைப்பணிகளின் நேர்முகத் தேர்வு தேர்வர்களின் சுயவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே தொடங்குகின்றது. சில தேர்வர்களது நேர்முகத்தேர்விற்கான கேள்விகள் சுயவிவரங்களுக்குள்ளேயே முடிந்துவிடலாம். சிலருக்கு மேலும் விரிவாகச் செல்லலாம்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

பொதுவாக, குடிமைப்பணிகளின் நேர்முகத் தேர்வு தேர்வர்களின் சுயவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே தொடங்குகின்றது. சில தேர்வர்களது நேர்முகத்தேர்விற்கான கேள்விகள் சுயவிவரங்களுக்குள்ளேயே முடிந்துவிடலாம். சிலருக்கு மேலும் விரிவாகச் செல்லலாம்.

நேர்முகத்தேர்வினைப் பொறுத்தவரை நம்மிடம் தேர்வுக்குழுவினர் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதனைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் பதில் அளிப்பதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கின்றது.

நேர்முகத்தேர்வில் பின்பற்ற வேண்டிய அடிப்படையான 5 நடைமுறைகள்:

1. உடை (தனக்கேற்ற அதே நேரத்தில் ஏனையோரும் விரும்பத்தக்க உடை அணிதல்)

2. சபை நாகரிகம்

3. வெளிப்படைத் தன்மை

4. கேள்விகளை தேர்வுக்குழுவின் தலைவர் அல்லது வல்லுநர் கேட்டு முடிக்கும்வரை கவனத்துடனும், பொறுமையுடனும் உள்வாங்கி, பின் நிதானமாக, தெளிவாக, சுருக்கமாக, நேர்மறைச் சிந்தனையுடன் பதிலுரைத்தல்.

5. உடல்மொழி. அதாவது, நேர்முகத்தேர்வின் அறைக்குள் செல்லும்போதும், வணக்கம் கூறும்போதும், தேர்வுக்குழுவினரின் முன் அமர்ந்திருக்கும் போதும், முடித்து வெளியே வரும் போதும் நேர்த்தியும், ஒழுங்கும் வெளிப்படும் வண்ணம் உடல்மொழி அமைந்திருத்தல்.

இவை மிகவும் அடிப்படையானவை எனத் தோன்றினாலும் தேர்வரின் ஆளுமையை பிரதிபலிக்கத் தக்கவையாகும்.

சில தேர்வர்களுக்கு 5 நிமிடத்திற்குள் முடிந்துவிடும் நேர்முகத்தேர்வு சிலருக்கு 50 நிமிடங்களுக்கு மேலும் தொடர்வதுண்டு. அதே வேளையில் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் அதிக மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்றும் கருதக் கூடாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களிடம் உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளிலிருந்து சில கேள்விகளைத் தேர்வுக்குழுவினர் தொடர்ந்து கேட்பதுண்டு. அவை இந்தி எதிர்ப்பு, ஈழத்தமிழர் தொடர்பான கருத்துகள், தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள், ஜல்லிக்கட்டிற்கான தடை போன்றவையாகும்.

அதேபோல, சினிமாத்துறையில் இருந்தே பல முதல்வர்களை தமிழ்நாட்டு மக்கள் தேர்வு செய்கிறார்கள். அது ஏன் என்று கூறமுடியுமா? எனவும்,

தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் சாதியை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன, அதற்கான காரணத்தைச் சொல்ல முடியுமா? எனவும் வினாக்களும் அடிக்கடி கேட்கப்படுகின்றன.

இதுபோன்ற கேள்விகளைப் பார்க்கும்போது எளிமையாகப் பதில் கூறிவிடலாம் எனத் தோன்றலாம். ஆனால் நேர்த்தியான பதிலை சுருக்கமாகக் கூறுவதென்பது எளிதானதாக அமைவதில்லை.

ஒரு தேர்வர் சுயவிவரத்தில் வரலாறு பாடத்தினை விருப்பப் பாடமாக எடுத்திருப்பதாகவோ அல்லது பட்டப் படிப்பாக படித்திருப்பதாகவோ பதிவு செய்துள்ளார் எனக் கொள்வோம். அத்தேர்வரிடம் கீழ்க்கண்ட வினா நேர்முகத் தேர்வுக்குழுவின் தலைவர் அல்லது வல்லுநரால் கேட்கப்படுகின்றது என வைத்துக் கொள்வோம்.

""நாம் இந்திய வரலாற்றை மூன்று பெரும்பகுதிகளாகப் பிரித்துள்ளோம். அவை பண்டைக்கால இந்தியா, இடைக்கால இந்தியா மற்றும் தற்கால இந்தியா ஆகும். இவற்றுள் உங்களுக்கு பிடித்தமான பகுதி எது?''

இக் கேள்விக்குத் தேர்வர், தற்கால இந்தியா எனப் பதிலளிக்கின்றார்.

மீண்டும் அவரிடம் துணைக்கேள்வியாக ""தற்கால இந்தியாவில் உங்களைக் கவர்ந்த அல்லது பாதித்த தலைவர் யார்?'' என்று கேட்கப்படுகிறது. இந்த வினாவிற்கு, மகாத்மா காந்தி என்றோ, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்றோ, இராஜாராம் மோகன்ராய் என்றோ, அன்னிபெசன்ட் என்றோ பதிலளிக்கலாம்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த கேள்வி, ""என்ன காரணத்தினால் அவர் உங்களைக் கவர்ந்துள்ளார்? அல்லது பாதித்துள்ளார்?'' என்று அமையும். மேலே கண்டுள்ள கேள்விகள் மிகவும் எதார்த்தமானவையாகத் தோன்றலாம். இருப்பினும், PERSONALITY தொடர்பான இரண்டாவது வினாவிற்கான தேர்வரின் பதில் தேர்வரின் PERSONALITY யையும் வெளிக்கொணர்கிற தன்மை வாய்ந்தது என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

ஆனாலும் எளிதாகப் பதிலுரைக்கலாம். அதேவேளையில், மூன்றாவது வினாவுக்கு பதிலுரைக்கும் போது நிறையப் பேசும் நிலைக்கு தேர்வர் தள்ளப்படுகின்றார். சில தேர்வர்கள் பதிலை எப்படிக் கூறுவது என யோசிப்பர்.

ஒருவேளை தேர்வர் இக்கேள்விக்கான பதிலை, சுருக்கமாகக் கூறாமல் விரிவாகக் கூறும்போது வினாவினைக் கேட்டவர், ‘‘I HAVE NO TIME TO TELL WITHIN TWO POINTS”  என்று பட்டென இடைமறிப்பார்.

எனவே, இங்குதான் கவனம் தேவை. தேர்வர் மகாத்மா காந்தியை பதிலாகக் கூறியிருந்தார் என்றால் "இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் தந்த அகிம்சா எனும் புதிய யுத்தி, பெருந்திரளான மக்களை சுதந்திரத்திற்கான போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்த ஒருங்கிணைப்பு, அவர்களை ஊக்கம் குறையாமல் வழி நடத்திய தலைமைப்பண்பு' என்று கூறலாம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறினாரென்றால், "இந்திய தேசிய ராணுவத்தினை கட்டமைத்து வழிநடத்திய வல்லமை, எதிரியை அஞ்ச வைத்திடும் அசாத்திய துணிச்சல், எல்லாரையும் ஈர்த்துவிடுகின்ற தலைமைப் பண்பு, கொள்கையில் உறுதி' என்று பதிலுரைக்கலாம்.

இராஜாராம் மோகன்ராய் என்ற பதிலைக் கூறியிருந்தால், "இந்திய மக்களிடம் முதல் முதலாக சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய அவரது அறிவார்ந்த மறுமலர்ச்சிப்பணி, மூட நம்பிக்கையில் ஊறிக்கிடந்த சமூகத்தில் சதி வழக்கம், குழந்தைத்

திருமணம் போன்ற சமூக இழிவுகளை உறுதிகொண்டு எதிர்த்த மனிதநேயம்' என்று சொல்லலாம்.

அன்னிபெசன்ட் என்று பதில் கூறி இருப்பாரென்றால், "அந்நிய நாட்டில் பிறந்த பெண் என்றாலும் இந்திய நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பெரும் தொண்டு போன்ற புதுவகை அரசியல் எழுச்சிக்காக தம் வாழ்வையே அர்ப்பணித்த தியாகம்' என்று பதில் அமையலாம்.

இவ்வாறு, தேர்வர் யாரை வேண்டுமானாலும் தன்னைக் கவர்ந்தவராகவோ, முன்னோடியாகவோ கூறலாம். ஆனால், அதனைச் சரியாக நியாயப்படுத்திடத் தெரிந்திருக்க வேண்டும். இரத்தினச்சுருக்கமாக பதிலுரைத்திட வேண்டும்.

சில நேரங்களில் இருவரை ஒப்பிட்டுக்கூற வேண்டிய வினாக்கள் கேட்கப்படலாம். அப்போது சமநிலையில் (BALANCED OR UNBIASED) பதில் அமைந்திடுதல் சிறப்பானதாக இருக்கும்.

உதாரணமாக, நிர்வாகத்தில் அசோகரையும், அக்பரையும் ஒப்பிடச்சொல்லலாம் அல்லது கர்சன் பிரபுவையும், பண்டித நேருவையும் ஒப்பிடச் சொல்லலாம்.

கொள்கைரீதியாக மகாத்மா காந்தியையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸயும் ஒப்பிடச் சொல்லாம். அதுபோல, மிதவாதிகள், தீவிரவாதிகள் ஒப்பீடு, முதலாளித்துவம், பொதுவுடைமைத்துவம் ஒப்பீடு என்றும் கேட்கலாம். ஒவ்வொன்றுக்கும் சுருக்கமான, சரியான விளக்கத்தினைச் சொல்லிப் பழக வேண்டும்.

சுயவிவரங்களில் தேர்வரின் பெயர், தந்தையார் பெயர், தாயாரின் பெயர், பிறந்த, வசிக்கும் இடம், மாவட்டம், மாநிலம், படித்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் எழலாம். உதாரணமாக, பிறந்த மாவட்டத்தினைப் பற்றிய வினாக்களை பொறுத்த அளவில் அதன் அடிப்படைப் பிரச்சனைகள், கனிம வளம், பொருளாதாரம், வரலாற்று பங்களிப்புகள் மற்றும் பண்பாட்டு பின்னணிகள் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படலாம்.

சுயவிவரத்தில் குறிப்பிட்டுள்ள விருப்பமான பொழுதுபோக்குகள் (ஏஞஆஆஐஉந) என்பது வினாக்களுக்கான பகுதிகளில் மிகவும் முக்கியமானவை. அதனை அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.