முகப்பு
இளைஞர்மணி

நாளை நான் ஐஏஎஸ்!: மொழிபெயர்ப்பாளரின் துணையும் தேவை!

போட்டித் தேர்வுகளை எழுதும் தேர்வருக்கு நடப்பு நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கிக் கவனித்து வருதல் மிகவும் முக்கியமான கடமையாகும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

போட்டித் தேர்வுகளை எழுதும் தேர்வருக்கு நடப்பு நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கிக் கவனித்து வருதல் மிகவும் முக்கியமான கடமையாகும். குறிப்பாக, குடிமைப்பணித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன.

சமீபத்தில் MERCER எனப்படும் உலக ஆலோசனை நிறுவனம் உலக நகரங்களை ஆய்வு செய்து ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விற்கு நான்கு அளவீடுகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன. அவை, உள்கட்டமைப்பு, குற்றங்களின் விகிதம், சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பிறநாடுகளுடன் நட்புறவு ஆகியவை ஆகும்.

மேலே கண்டுள்ள அளவீடுகளின் அடிப்படையில் உலக அளவில் 230 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட ஏழு நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 7 நகரங்களுக்குள் சென்னை பாதுகாப்பான நகரமாக உள்ளது என அந்த நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.

இதனை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் என்னவெனில், சமீபத்தில் பருவநிலை மாற்றத்தின் விளைவாக இயற்கைப் பேரிடரால் தாக்கப்பட்டது சென்னை. இது ஒரு கோணம். அதே வேளையில் இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக MERCER நிறுவனம் சென்னையைத் தேர்வு செய்துள்ளது. இது மற்றொரு கோணம். இதனை நேர்முகத்தேர்வர்கள் கவனத்தில் வைத்திருத்தல் சிறப்பு.

புவியியல், செவ்வாய்க்கோள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் தொடர்புடைய ஒரு புதிய முயற்சியினை சமீபத்தில் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

பெருவின் தலைநகரான லிமாவில் சர்வதேச உருளைக்கிழங்கு மையம் (CIP) அமைந்துள்ளது. இம்மையத்தோடு இணைந்து அங்குள்ள ஆய்வுமையத்தில் உருளைக்கிழங்கைப் பயிர் செய்வதற்கான முயற்சியினை, நாசா மேற்கொண்டுள்ளது.

இதற்காக இந்த ஆய்வு மையத்திற்கு லா ஜோயா பம்பாஸ் என்ற இடத்திலிருந்து மண் எடுத்து வரப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுமையத்தில் செவ்வாய்க்கோளில் நிலவும் வளிமண்டலச் சூழலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் உருளைக்கிழங்கின் 40 வகைகள் பயன்படுத்தப்பட உள்ளன.

லா ஜோயா பம்பாஸ் பூமியின் வறண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற அட்டகாமா பாலைவனப்பகுதியில் அமைந்துள்ளது.

இப்பகுதியின் மண் ஏறத்தாழ செவ்வாய்க்கோளின் மண்ணின் தன்மையோடு ஒத்த தன்மை கொண்டதாக நாசா கண்டறிந்துள்ளதால் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்முயற்சி இங்கு வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், செவ்வாய்க்கோளில் உருளைக்கிழங்கைப் பயிரிடுவதற்கான திட்டத்தை நாசா மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

ஆகவே, மங்கள்யான்-1 தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் பங்களிப்பு, மங்கள்யான்-2 விண்கலம் தொடர்பான செய்திகள், செவ்வாய்க்கோளுக்கு விண்கலங்கள் அனுப்பத் திட்டமிட்டுள்ள பிற நாட்டு விண்வெளி மையங்களின் வேறுபட்ட முயற்சிகள் போன்றவற்றோடு ஒப்பிட்டோ அல்லது இவற்றை அடிப்படையாகக் கொண்டோ நேர்முகத்தேர்வில் வினாக்கள் எழலாம்.

எடுத்துக்காட்டாக, அறிவியல் பாடங்கள் அல்லது புவியியலை பின்புலமாகக் கொண்ட ஒரு தேர்வர் நேர்முகத்தேர்வு செல்கிறாரென்றால் அவரிடம், "வேற்றுக்கோள்களில் பயிரிடுகின்ற முயற்சி ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?' என்று கேள்வி கேட்கப்படலாம். இந்த நடப்பு நிகழ்வினைத் தேர்வர் படித்திருந்தால் அவர் இவ்வினாவினை எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.

எனவே, நடப்பு நிகழ்வுகள் என்பவை நேர்முகத்தேர்வு நோக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதனை நினைவிற் கொள்ள வேண்டும்.

நேர்முகத்தேர்வினைப் பொறுத்தளவில் பிராந்திய மொழியில் (Regional Language/ Board) எதிர்கொள்கின்ற தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில நடைமுறைகள் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியம்.

இத்தகைய தேர்வர்கள் நேர்முகத்தேர்வுக்கான அறைக்குள் செல்லும்போது சில நேரங்களில் அங்கு முன்னதாகவே மொழிபெயர்ப்பாளர் அமர்ந்திருக்கலாம். அல்லது தேர்வரிடம், ""உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் வேண்டுமா?'' என தேர்வுக்குழுவின் தலைவர் கேட்பார். தேர்வர் ""வேண்டும்'' என்று சொன்னால் மொழிபெயர்ப்பாளர் வருவார். இல்லையெனில், ஆங்கிலத்திலேயே நேர்காணல் தொடரும்.

இதில் தேர்வர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அவர் அறைக்குள் செல்லும்போது மொழிபெயர்ப்பாளர் இருந்தால் அவருக்கும் சேர்த்து வணக்கம் சொல்லி விடலாம். மாறாக மொழிபெயர்ப்பாளர் தேர்வர் கேட்டுக் கொண்ட பிறகு வரவழைக்கப்பட்டால் அவர் வருவதற்கு முன்னரே நேர்காணல் தொடங்கிவிடும்.

ஏதேனும் சுயவிபரம் தொடர்பான எளிமையான உரையாடல் ஆங்கிலத்தில் நடந்து கொண்டிருக்கும். அதற்கு தேர்வர் கவனத்துடன் பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே ஒசையில்லாமல் மொழிபெயர்ப்பாளரும் வந்து அமர்ந்திருப்பார். தேர்வர் தேர்வுக்குழுவுக்கு மரியாதை நிமித்தமான வணக்கம் முன்னரே சொல்லிவிட்ட பிறகு மொழிபெயர்ப்பாளர் வருகிறார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மொழிபெயர்ப்பாளர் அறைக்குள் நுழையும்போது தேர்வராகிய நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் கூறிக் கொண்டிருக்கின்றீர்கள். இப்போது மொழிபெயர்ப்பாளருக்கு நீங்கள் வணக்கம் சொல்ல வேண்டுமெனில் அக்கேள்விக்கான பதிலை முடித்த பிறகு கிடைக்கும் சிறிய இடைவெளியில் இருக்கையில் இருந்தபடியே மொழிபெயர்ப்பாளரை நோக்கித் திரும்பி தனது வணக்கத்தினை தேர்வர் தெரிவிக்கலாம்.

ஏதேனும் பதட்டத்தில் மொழிபெயர்ப்பாளருக்கு மரியாதை கொடுப்பதை தேர்வர் மறந்து விடக்கூடாது. அதேவேளையில் பதிலை இடைநிறுத்தியும் வணக்கம் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தேர்வர் இதில் நேர்த்தியோடு நடந்து கொண்டாரெனில், அவர் கவனத்துடனும், சமயோசிதத் தன்மையுடனும் நேர்காணலை எதிர்கொள்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமையும்.

மேலும், கேள்வியை ஆங்கிலத்தில் தேர்வுக்குழுவின் தலைவரோ வல்லுநரோ கேட்கும்போது அவரைக் கவனத்துடன் பார்த்து கேள்வியை உள் வாங்க வேண்டும். கேள்வியைத் தேர்வர் புரிந்து கொண்டுவிட்டால் பதிலை அளிக்கத் தொடங்கிவிடலாம்.

கேள்வியைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் மொழிபெயர்ப்பாளரின் உதவியை நாடலாம். தான் கூறிய பதிலை மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக் கூறும்போது தேர்வரும் மொழிபெயர்ப்பாளரின் ஆங்கிலத்திலான பதிலைச் செவிகளில் கேட்டபடி வினாவைக் கேட்ட தலைவரை - வல்லுநரை - கவனமுடன் பார்த்தல் (EYE TO EYE CONTACT)வேண்டும்.

இது தேர்வருக்கு மிகவும் நுணுக்கமான பணியாகும். இதில் ஏதேனும் சிறிய பின்னடைவு இருந்தால்கூட Communication Gap ஏற்பட்டுவிட வாய்ப்புகள் அதிகம். இது கடினமானதோ, இயலாததோ அல்ல... எளிதாகப் பின்பற்றக் கூடிய செயல்தான். ஆனாலும் பயிற்சி செய்தல் வேண்டும்.

முதன்மைத் தேர்வுக்கும், நேர்முகத் தேர்வுக்கும் அடிப்படையாக அமைகின்ற முதல்நிலைத் தேர்வினை வெற்றிகரமாக அணுகும்முறை குறித்து தொடர்ந்து காண்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.