முகப்பு
இளைஞர்மணி

நாளை நான் ஐஏஎஸ்! தெரிந்தவை... ஓரளவு தெரிந்தவை... தெரியாதவை!

நாம் எதிர்பார்த்தபடி இந்தியக்குடிமைப்பணிகள் தேர்வாணையம் 2016 ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுவிட்டது. தோராயமான பணியிடங்கள் 1079 ஆகும். தேர்வர்கள் முதல் நிலைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.05.2016 மற்றும் தேர்வு நடைபெறும் நாள்: 07.08.2016 ஆகும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

நாம் எதிர்பார்த்தபடி இந்தியக்குடிமைப்பணிகள் தேர்வாணையம் 2016 ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுவிட்டது. தோராயமான பணியிடங்கள் 1079 ஆகும். தேர்வர்கள் முதல் நிலைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.05.2016 மற்றும் தேர்வு நடைபெறும் நாள்: 07.08.2016 ஆகும்.

2016 ஆம் ஆண்டு தேர்வினை எழுதிட ஆர்வமாய் உள்ளவர்களுக்கு, இது பொன்னான நேரம். ஆம். முதல்நிலைத்தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இப்போது தொடங்கினாலும் வெற்றியினை ஈட்ட முடியும். இதற்கு சரியான திட்டமிடல் அவசியம். அதிலும் நேர மேலாண்மை மிகவும் முக்கியம்.

முதல்முறையாக இத்தேர்வை எழுதும் தேர்வர்கள், ஒரு நாளைக்கு படிப்பதற்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் வரை ஒதுக்கவும். இதில் நான்கில் ஒரு பகுதியை இரண்டாம் தாளான திறனறிதல் பயிற்சிக்குப் பயன்படுத்துதல் நலம்.

தினந்தோறும் நாளிதழ் படிப்பதற்கும், குறிப்புகள் எடுப்பதற்கும் தவறாமல் 1 மணிநேரம் வரை ஒதுக்குங்கள். வரலாறு மற்றும் பண்பாடு, புவியியல், சுற்றுச்சூழல், இந்திய அரசியலமைப்பு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல், பொருளாதாரம், நடப்புநிகழ்வுகள், முந்தைய தேர்வின் வினாக்கள் அல்லது மாதிரித் தேர்வு வினாக்கள் பயிற்சி எனப் பிரித்துக் கொண்டு மீதமுள்ள நேரத்தையும் செயலூக்கத்துடன் பயன்படுத்துதல் வேண்டும்.

இதற்கேற்றவாறு ஒரு செயல்பாட்டு அட்டவணையைத் தயார் செய்யுங்கள். அதில் நேரத்தினை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல் அவ்வப்போது ஓய்வுக்கான இடைவெளி அமைவது போல் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் எவ்வகையிலும் சமரசமின்றி செயல்படுங்கள்.

மிகவும் அத்தியாவசியப் பணிகளைத் தவிர்த்து கவனத்தினைச் சிதறடிக்கும் பிற பணிகளை கட்டாயம் தவிர்க்கவும்.

முதல்நிலைத்தேர்வில் முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் வினாக்கள் எதிர்மறை மதிப்பெண்களைக் கொண்டவை என்பது நீங்கள் அறிந்ததே. அதனால் வினாக்களை மிகவும் கவனமாக அணுக வேண்டும்.

இரண்டாம் தாளான திறனறிதல் பாடம் தகுதிபெறும் பாடமாகிவிட்டது என்பது உங்களுக்குத் தெரிந்ததே. எனவே, முதல் தாளான பொது அறிவுப்பாடத்திற்கு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். ஏனெனில், முதல் நிலைத்தேர்வின் வெற்றியினை முதல்தாளே தீர்மானிக்கின்றது என்பதில் தற்போதும் எந்த மாற்றமும் இல்லை.

எதிர்மறை மதிப்பெண்களைக் கொண்டுள்ள வினாக்கள் என்பதால், அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும் என்று முயற்சிக்காமல் விவேகத்துடன் செயல்பட வேண்டும். கொள்குறி வினாக்களை மூன்று வகையாகப் பகுத்துக் கொள்ளலாம்.

முதல்வகை வினாக்கள், 100 சதவீதம் தெரிந்த வினாக்கள். இரண்டாவது வகை, ஓரளவு தெரிந்த வினாக்கள். உதாரணமாக, வினாவில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு STATEMENT களில் இரண்டு அல்லது மூன்று தெரிந்தவையாகவும் மீதமுள்ளவை தெரியாதவையாகவும் இருக்கலாம். மூன்றாவது வகை, 100 சதவீதம் தெரியாத வினாக்கள்.

ஆக, முதல் தாளில் மொத்தமுள்ள 100 வினாக்களையும் இந்த மூன்று வகைக்குள் பிரித்துக் கொள்ளலாம். இவற்றுள் முதல்வகை வினாக்களுக்கு விரைவாகவும், கவனமாகவும் பதிலளித்து விட முடியும்.

முதல் சுற்றில் முதல்வகை வினாக்களிலேயே 60 வினாக்கள் பதிலளித்துவிட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது பதிலளிப்பதற்கான இரண்டாவது சுற்றினை நீங்கள் தொடங்க வேண்டும். இதனை நீங்கள் கையாளும்போக்கில்தான் வெற்றிக்கான சூட்சுமம் அடங்கியிருக்கின்றது.

தற்போது ஒட்டுமொத்த வினாக்களையும் கவனியுங்கள். அவற்றுள் நடப்பு நிகழ்வுகள் பற்றிய வினாக்கள் எத்தனை இடம்பெற்றுள்ளன என்று கூர்ந்து நோக்குங்கள். உதாரணத்திற்கு சுமார் 15 சதவீத வினாக்கள் இடம் பெற்றிருக்கிறது என எடுத்துக் கொண்டால், இரண்டாம் வகை வினாக்களில் நீங்கள் குறைந்தபட்சம் சுமார் 15 சதவீத வினாக்கள் மேலும் பதிலளிக்க முயற்சி செய்யலாம். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வினாக்கள் வரை நீங்கள் பதிலளித்திருப்பீர்கள்.

மாறாக, நடப்பு நிகழ்வுகளில் வினாக்கள் இல்லை அல்லது ஐந்துக்கும் குறைவாகவே உள்ளனவென்றால், அதற்குத்தக்கவாறு நீங்கள் இரண்டாம் வகை வினாக்களில் பதிலளிக்கும் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

நாம் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான வினாக்களை ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பதற்குக் காரணம் உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இந்தியா முழுவதும் சுமார் 6 இலட்சம் பேர்கள் என்றால் அதில் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகும் தேர்வர்கள் சுமார் 40 முதல் 50 ஆயிரம் பேர்களே ஆவர்.

இவர்களில் பெரும்பாலோர் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான வினாக்களுக்கு சரியான விடையளிப்பவர்கள். வெற்றிக் கோட்டை நெருங்கி வரும் போட்டியாளர்கள் இவர்களே. பிறரை நெருங்கவிடாமல் செய்பவர்களும் இவர்களே.

மூன்றாவது வகையில் இடம் பெறும் வினாக்களுக்கு நாம் விடையளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தவிர்த்துவிட்டால் நமது வெற்றியைத் தவிர்க்க இயலாது. தவிர்க்க இயலவில்லையென்றால், நமது தோல்வியையும் தவிர்க்க இயலாது.

முதல்நிலைத்தேர்வினை வெற்றிகரமாக அணுகுவதற்கு உள்ள சில யுத்திகளில் இதுவும் ஒன்றாகும். இதனையே முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே என்பதையும் தேர்வர்கள் மனதில் கொள்ளவும்.

மேலும், அன்றாட நாளிதழ்களைப் படிப்பதை எப்போதும் பின்பற்றிக் கொண்டே இருத்தல் வேண்டும். கொள்குறி வினாக்கள் கொண்ட மாதிரித் தேர்வினை நாள்தோறும் பயிற்சி செய்தல் வேண்டும்.

அதேபோல நடப்பு நிகழ்வுகளை நாளிதழ்களில் படிக்கும்போது அவை தொடர்பான பாடப் பின்புலங்கள் இருந்தால், அன்றே அதற்கான குறிப்புகளைத் தொகுத்துக் கொள்ளவும், அறிந்து கொள்ளவும் வேண்டும்.

உதாரணமாக, கீழே கண்டுள்ள நடப்பு நிகழ்வினைக் கவனியுங்கள். 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தில் பங்கேற்றவர் தாத்தியா தோபே ஆவார். இவரது 200 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக நடுவண் அரசு, அவரது உருவம் பொறித்த 200 ரூபாய் போர் நினைவு நாணயத்தினை (Commemorative Coin) வெளியிட்டுள்ளது. மேலும் அவரது உருவம் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தினை புழக்கத்தில் (Circulation Coin) வரும் வகையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வினை மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தோடு இணைந்து மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் கூட்டாக நடத்தியுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சியினை மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்பாடு செய்ததோடு தனது மாநிலத்திலேயே புனே அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஷானிவர்வாடா என்ற இடத்தில் விழாவினையும் நடத்தியது.

இது வரலாற்றுப் பின்புலம் கொண்ட நடப்புச் செய்தியாகும். அதனால் அன்றைய தினம் வரலாற்றுப் பாடத்திற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் தாத்தியா தோபே குறித்தும் மற்றும் அவர் தொடர்புடைய பாடக்குறிப்புகளையும் தொகுத்தல் வேண்டும்.

இவர் 1814 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் அருகேயுள்ள யேலா என்னுமிடத்தில் பிறந்தார்.

தாத்தியா தோபே 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தில் முக்கியப் பங்காற்றியவர். கொரில்லா யுத்தமுறை தெரிந்தவர். இவரது இயற்பெயர் இராமசந்திர பாண்டுரங்கா. பித்தூர் நாட்டின் நிலப்பிரபுவான நானே சாகேப்பின் நெருங்கிய நண்பர். சிப்பாய்க் கலகத்தின் போது கான்பூர் முதலான பகுதிகள் உள்ளிட்ட மத்திய இந்தியப் பகுதியில் சிறந்த போர்த்தளபதியாகச் செயல்பட்டவர். ராணி லட்சுமிபாய்க்கு போரில் பெரிதும் உதவியாய் இருந்தவர்.

ஜமீன்தார் ஒருவரால் ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுக்கப்பட்ட இவருக்கு, பிரிட்டிஷ் இந்திய ராணுவ நீதிமன்றம் 15.04.1859 இல் தூக்குத்தண்டனை விதித்து 18.04.1859 இல் நிறைவேற்றியது. ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்க மறுத்த மாவீரரான தாத்தியா தோபேயின் கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையிலும், தூக்குக்கயிற்றில் தானே தனது தலையை மாட்டிக்கொண்டு உயிர் துறந்தவர்.

தூக்கிலிடப்பட்ட இடம் மத்தியப்பிரதேசத்தின் சிவபுரி ஆகும். எனவேதான் இவ்விரண்டு மாநிலங்களும் இந்நிகழ்வில் இணைந்துள்ளன.

கிராமப்புறத் தேர்வர் ஒருவர் தொடர்ந்து போராடி குடிமைப்பணித்தேர்வில் வென்று சாதனை படைத்ததை அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.