இளைஞர்மணி

குடிசையிருந்து இஸ்ரோவுக்கு...! 

DIN

நம்மில் பலர் ஏழ்மையைக் காரணம் காட்டி படிப்பில் இருந்து நழுவி விடுகிறோம். அல்லது வாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்புகிறோம். ஆனால், நோக்கமும், முயற்சியும் இருந்தால் வானமும் வசப்படும் என்பதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளன. 
இதற்கு வலு சேர்த்திருக்கிறார் குடிசைப் பகுதியில் பிறந்து மும்பை நகரின் முதல் இஸ்ரோ விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்துள்ள 25 வயது இளைஞர் பிரதாமேஷ் ஹிர்வ் (Pratamesh Hirve). மும்பையின் மக்கள் நெருக்கம் மிகுந்த பில்டர்பாடாவின் குடிசைவாழ் பகுதியான பவாய் என்ற இடத்தில் சுமார் 10x10 அளவிலான வீட்டில் இருந்துதான் இந்த சாதனை அரங்கேறியுள்ளது.
எல்லாரும் கலைப் படிப்பில் அவரைச் சேர சொன்னபோது, கடந்த 2007-இல் பாகுபாய் மபட்லால் பாலிடெக்னிக் கல்லூரியில் மின் பொறியியல் பட்டயப் படிப்பில் மிகவும் பிடிவாதமாக பிரதாமேஷ் சேர்ந்தார். 
இது அவருடைய படிப்பின் போராட்டத் தொடக்கம் என கூறலாம். காரணம், அவருக்கு பாலிடெக்னிக் கல்வியில் மிகச் சவாலாக இருந்தது மொழிப் பிரச்னை. பிரதாமேஷ் 10-ஆம் வகுப்பு வரை தன் தாய்மொழியான மராத்தி மொழியில் பயின்றவர். இதனால், பாலிடெக்னிக் கல்வியில் முதல் 2 ஆண்டுகள் ஆங்கிலத்தில் பயிலவும், பொறியியல் தொடர்பான வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ளவும் பிரதாமேஷ் மிகவும் சிரமப்பட்டார்.
முதலாண்டில், ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து, கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டார். 2-ஆவது ஆண்டில் ஆசிரியரிடம் தனக்கு உள்ள மொழிப் பிரச்னையை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரைப் பாராட்டிய ஆசிரியர் மொழி அகராதி வாங்கி படிக்கவும், பாடத்தில் உள்ள வார்த்தைகளுக்கான பொருளை அப்போதைக்கப்போது அகராதியில் பார்த்து தெரிந்து கொள்ளவும், எவ்வளவு அதிகமாக மொழி அகராதியைப் பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், படிப்பதில் ஏற்படும் மொழிப் பிரச்னையைத் தவிர்க்கலாம் எனவும் அவர் ஆலோசனை கூறினார்.
அவ்வாறே பயின்ற பிரதாமேஷ், 3 ஆம் ஆண்டில் L&T மற்றும் TATA POWERS நிறுவனங்களில் பணிப் பயிற்சி பெற்றார். அங்கு அவரது வழிகாட்டுநர்கள் பிரதாமேஷை மேலும் படிக்க ஊக்கப்படுத்தினர். இதையடுத்து, அவர் நவி மும்பையில் உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி பொறியியல் கல்லூரியில் பட்ட வகுப்பில் சேர்ந்தார். 2014-இல் மின் பொறியியலில் பட்டம் பெற்ற பிரதாமேஷ், தனது எதிர்காலம் குறித்து பெரிய திட்டங்களை தீட்டினாலும், அவை அவர் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. குறிப்பாக, அவர் ஆவலுடன் சில பணிகளில் சேர விரும்பி எழுதிய Union Public 
Service Commission (UPSC) தேர்விலும் அவர் வெற்றி பெறவில்லை.
இந்தத் தோல்வி அவரது வேலை தேடும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை (ISRO) நோக்கி திருப்பியது. எனினும், கடந்த 2016-இல் அவர் அனுப்பிய விண்ணப்பம் காத்திருப்புப் பட்டியலுக்கு மேல் நகரவில்லை. இந்த நிலையில், அவருக்கு பிற இடங்களில் பணி வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவர் ஒரு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். என்றபோதும், அவரது நோக்கம் இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்பதாகவே இருந்தது, கடந்த மே மாதம் இஸ்ரோவுக்கு மீண்டும் விண்ணப்பித்தார்.
இதில், மொத்தம் 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததில், 9 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்த 9 பேரில் பிரதாமேஷும் ஒருவர். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி அவர் இவ்வளவு நாளாக தேடியதை வெற்றிகரமாக கண்டடைந்தார். 
இதுகுறித்து பிரதாமேஷ் கூறுகையில், "இது எனக்கு மிக மகிழ்ச்சியான தருணம். நான் இஸ்ரோவில் சேருவதற்கு முன்னதாக 10 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறேன். தற்போது சண்டிகரில் பணியமர்த்தப்பட்டுள்ளேன். இப்போது, நான் என் பெற்றோருக்கு ஒரு நல்ல வீட்டையும், வாழ்க்கையையும் கொடுக்க விரும்புகிறேன்'' என்றார்.

46 வயதாகும் பிரதாமேஷின் தாய் இந்து கூறுகையில், "நான் 8 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு முதலில் என் மகன் பார்க்கும் வேலையைப் பற்றி புரிந்துகொள்ள முடியவில்லை. என் கணவர், நம் மகனுக்கு மிகச் சிறந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை கிடைத்துள்ளதாக கூறியபோது, என் கண்களில் கண்ணீர் நிரம்பியது. அவன் நினைத்ததை அடைவதற்காக குழந்தைப் பருவத்திலிருந்தே கடினமாக உழைத்ததுதான் என் நினைவுக்கு வந்தது. நான் என் மகனை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவனது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது'' என்றார்.
பிரதாமேஷ், இஸ்ரோவில் பணியாற்றுவது அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை. குடிசையில் வாழும் ஏழைப் பிள்ளைகள் முயன்றால் சாதிக்க முடியும் என்பதைக் கூறுவதாகவும் அது உள்ளது. 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT