இப்படியும் ஒரு புதிய தொழில்!
பெண்கள் வேலைக்குப் போவது அதிகரித்துவிட்டதால், வீட்டு வேலைகளை எளிதாக்கும் கருவிகள் பல எப்போதோ வந்துவிட்டன.
பெண்கள் வேலைக்குப் போவது அதிகரித்துவிட்டதால், வீட்டு வேலைகளை எளிதாக்கும் கருவிகள் பல எப்போதோ வந்துவிட்டன. அரைப்பதற்கு மிக்ஸி, துவைப்பதற்கு வாஷிங் மெஷின், சமையலை எளிதாக்க குக்கர், மாவு அரைக்க கிரைண்டர் என பல கருவிகள் வந்துவிட்டன. இருந்தாலும் கண்ணீர் மல்க வெங்காயம் உரிப்பதற்கு மட்டும் மாற்று எதுவும் இதுவரை ஏனோ வரவில்லை.
வெங்காயம் இல்லாத சமையல் எதுவுமில்லை. சாம்பார், கூட்டு, பொரியல் போன்ற சைவ உணவுகளாகட்டும், பிரியாணி போன்ற அசைவ உணவு வகைகளாகட்டும் வெங்காயம் அவசியம் தேவை.
தனது தாயார் நீண்ட நேரம் கண் எரிச்சலுடன் வெங்காயம் உரிப்பதைப் பார்த்த சத்யஜித் ராய் மனதில், வெங்காயம் உரித்து கஷ்டப்படுவதற்கு மாற்று எதுவும் இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
"வெளிநாடுகளில் சமையலுக்குத் தயாராக உள்ள வெங்காயம் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும்போது, இந்தியாவில் அப்படி எதுவும் இல்லையே, நாம் அந்தத் தொழிலைத் தொடங்கினால் என்ன?' என்று யோசித்தார் சத்யஜித்ராய். அப்படி உருவானதுதான், எவரெடி கோர்மெட் கிச்சன் (உஎஓ) என்ற அவருடைய நிறுவனம்.
மும்பையின் புறநகர்ப் பகுதியான டலோஜாவில் 2014 இல் தொடங்கப்பட்ட அந்நிறுவனம், இப்போது மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
""சமையலுக்குத் தேவையான வெங்காயத்தை உரித்து, தேவையான அளவு வெட்டி, அதை எண்ணெய்யில் வதக்குவதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. அதிலும் அவசரமாக சமையலை முடித்துவிட்டு வேலைக்குப் போகும் பெண்களுக்கு இது மிகவும் சிரமத்தைத் தருகிறது. பெரிய பெரிய உணவகங்களுக்கு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகள், விழாக்களுக்குச் சமைக்கும்போது வீட்டை விட பல மடங்கு வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள். நிறையப் பேருடைய உழைப்பையும், நேரத்தையும் வீணாக்கும், இந்த வெங்காயத்தை - சமைப்பதற்கு ஏற்ற வகையில் வெட்டி, எண்ணெய்யில் வதக்கித் தருவதற்காகவே இந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். இருந்தாலும் இதனால் இன்னொரு பயனும் ஏற்பட்டிருக்கிறது.
வெங்காயம் அழுகும் பொருள். இதனால் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உரிய நேரத்தில் அவற்றை விற்காவிட்டால், அவை அழுகிப் போய்விடும். இதனால் நமது நாட்டில் மொத்த வெங்காய உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு வீணாகிவிடுகிறது.
ஆறு மாதத்துக்கு தேவைப்படும் வெங்காயத்தை நாங்கள் முன் கூட்டியே வாங்கிவிடுகிறோம். இதனால் விவசாயிகளிடம் இருந்து வழக்கமாக வாங்கப்படும் வெங்காயத்தை விட, அதிக அளவில் வெங்காயம் வாங்கப்படுகிறது. வெங்காயம் தேங்கிப் போவதும் குறைகிறது. அழுகி வீணாவதும் குறைகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் டன் வெங்காயம் வீணாவது தடுக்கப்படுகிறது'' என்கிறார் சத்யஜித் ராய்.
இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் வெட்டி வதக்கப்பட்டு தயார்நிலை உள்ள வெங்காயத்தை அப்படியே சமையலுக்குப் பயன்படுத்தலாம். இந்த வெங்காயத்தைப் பாக்கெட்டில் அடைத்து விற்கிறார்கள். தயாரிக்கப்பட்டு ஆறு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்படி வெங்காயத்தைப் பதப்படுத்தியிருக்கிறார்கள். வெங்காயம் அடைக்கப்பட்ட பாக்கெட்டை உடைத்துவிட்டால், சமைத்தது போக மீதமுள்ள வெங்காயத்தை நமது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து வழக்கம்போல் பாதுகாக்கலாம். பயன்படுத்தலாம்.
""நாங்கள் தற்போது ஒவ்வொரு மாதமும் 30 மெட்ரிக் டன் வதக்கப்பட்ட வெங்காயத்தை விற்பனை செய்கிறோம். அதற்காக நாங்கள் பயன்படுத்தும் பச்சை வெங்காயத்தின் அளவு 150 மெட்ரிக் டன். வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் விளைவிக்கும் வெங்காயம் எப்படியும் விற்பனை ஆகிவிடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு நாங்கள் கொடுக்கிறோம்'' என்கிறார் சத்யஜித் ராய்.
இந்த நிறுவனத்தில் 70 தொழிலாளர்கள் உட்பட 100 பேர் வேலை செய்கிறார்கள். மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக மாநிலம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள உணவகங்கள், கேட்டரிங் தொழில் செய்பவர்கள், ரயில்வே, விமானப் பயணிகளுக்கான உணவகங்கள் ஆகியவற்றுக்கு இந்த தயார்நிலை வெங்காயத்தை விற்பனை செய்கிறார்கள். மும்பையில் உள்ள கடைகளிலும் கிடைக்கிறது.
""இந்த தயார்நிலை வெங்காயத்தைப் போலவே வேறு பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்யும் திட்டமும் உள்ளது'' என்கிறார் 30 வயதேயான சத்யஜித் ராய்.