இளைஞர்மணி

நீரில் மூழ்கியவரைக் காப்பாற்றும் ட்ரோன்!

ந. ஜீவா

தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவது மிக மிகச் சிரமமான வேலை. ஓடுகின்ற ஆற்றில் ஏதாவது ஓரிடத்தில் நீரில் "சுழி' இருக்கும்.  அந்த இடத்தில் ஒருவர் சிக்கிக் கொண்டால் - அவர் எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும் - நீரினுள் மூழ்கடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுவார்.  கடலிலோ  சொல்லவே வேண்டியதில்லை.  அலைகள், கடலின் அடியில் இருக்கும் உயிரினங்கள் என கடலில் மூழ்கியவரைக் காப்பாற்றுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன.  எனவே மூழ்கியவரைக் காப்பாற்றுவதே  பெரும்பாடாகிவிடும்.  இம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ளும்விதமாக நீரில் மூழ்கியவரைக் காப்பாற்றும் ட்ரோன்     ஒன்றை  உருவாக்கியுள்ளார்கள் விசாகபட்டினத்தைச் சேர்ந்த  சைஃப் ஆட்டோமேஷன் (SAIF AUTOMATION) நிறுவனத்தினர். 

இதை உருவாக்கிய  அலியாஸ்கர்  ஜெர்மனி நாட்டின்  சீஜென் பல்கலைக்கழகத்தில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தனது தந்தையுடனும், சகோதரருடனும் இணைந்து  இந்த ட்ரோன் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றிகரமாக அதை உருவாக்கியிருக்கிறார்.

விசாகபட்டினம் கடல் பகுதியில் பலர் அடிக்கடி கடலில் மூழ்கிவிடுவதை அறிந்த அலியாஸ்கர்,   அதைத் தடுக்க தனது கல்வியறிவு பயன்பட வேண்டும் என்று விரும்பினார்.    நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற ஒரு ட்ரோனை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியுள்ளது. அதனால் 2017 ஆம் ஆண்டு ட்ரோனை உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். 

இந்த ட்ரோன் ரிமோட் மூலம் இயக்கப்பட வேண்டும் என்பதால்,  அது தொடர்பான அறிவுமிக்கவர்களைப் பணியில் அமர்த்தி,  ட்ரோனின் வடிவம், அதன் அளவு,  எடை உட்பட பலவிதமான சிக்கலான பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு கண்டிருக்கிறார் அவர்.

கடல் கொந்தளிப்பு, புயல், மழை போன்ற காலங்களில் எந்த  எலக்ட்ரானிக் சிக்னலும் கிடைக்காமல் போய்விடும் என்பதால், இந்த ட்ரோன் இண்டர்நெட்டைச் சார்ந்து செயல்படாமல் உருவாக்கப்பட்டுள்ளது.  ரேடியோ அதிர்வலையைக் கொண்டு செயல்படுமாறு இந்த ட்ரோனை தயாரித்திருக்கிறார்கள்.

கப்பலிலோ, படகிலோ சென்று கொண்டு இருக்கும்போது  ஒருவர் கடலில் தவறி விழுந்துவிட்டால் அவரை மீட்பதற்காக  கப்பலில், படகில் செல்பவர்கள் யாரும் கடலில் குதிக்க வேண்டியதில்லை.  இந்த ட்ரோனை கடலில் வீசி எறிந்து,  ரிமோட் மூலம் இயக்க வேண்டும். 

அவ்வாறு தூக்கியெறியப்பட்ட  ட்ரோன்  ஒரு நொடிக்கு 14 மீட்டர் வேகத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவரை நோக்கிச்  செல்லும்.  மனிதர்கள் இந்த வேகத்தில் நீந்திச் சென்று மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதரை மீட்க முடியாது.    

விரைவாகச் செல்லும் ட்ரோனைப் பிடித்துக் கொண்டு மூழ்கிக் கொண்டிருக்கும் நபர் மீண்டு விடலாம். 

மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவரை நீச்சல் தெரிந்த ஒருவர் மீட்கச் செல்லும்போது, மூழ்கிக் கொண்டிருப்பவர் உயிர் பயத்தில் மீட்க வந்தவரின் கைகளையோ, கால்களையோ பிடித்துக் கொண்டால்,  மீட்கச் சென்றவர் நீந்த முடியாமல் தானும் நீரில் மூழ்கிவிடும் அபாயம் ஏற்படுவதுண்டு.  ஆனால் இந்த ட்ரோனைக் கொண்டு மீட்கும்போது அந்தப் பிரச்னை இல்லை. 

இந்த ட்ரோனை அருகிலிருந்துதான் இயக்க முடியும் என்பதில்லை.   குறைந்தபட்சம் 3 கி.மீ.  தொலைவில் இருந்தும் அதிகபட்சம்10 கி.மீ. தொலைவில் இருந்தும் இயக்க முடியும்.    எனவே ட்ரோனை இயக்குபவர் ஆபத்தான பகுதிகளிலிருந்து தொலைவில் இருந்தே  இதை  இயக்க முடியும். 

பேட்டரியினால் இயங்கக் கூடிய இந்த ட்ரோனை  இரண்டு மணிநேரத்தில் சார்ஜ் செய்துவிடலாம்.  குறைந்தபட்சம் முக்கால் மணிநேரம் பேட்டரி டவுன் ஆகாமல் இந்த ட்ரோன்  இயங்கும்.  இதில் கேமரா,  உட்பட தேவையான பல கருவிகளையும் இணைத்துக் கொள்ளலாம். 

மூழ்கிக் கொண்டிருப்பவரை மீட்கும் போது ஏதேனும் பிரச்னை என்றால் தானே முடிவெடுத்து மீட்கும் வகையில் இந்த ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது.  

12 கிலோ எடையுள்ள இந்த ட்ரோனைத் தூக்கிச் செல்வது,  வேறு இடங்களுக்குக் கொண்டு  செல்வது, கையாள்வது மிக எளிது.

""நிறைய ஏரிகளும், அணைகளும், நீர்நிலைகளும் அதிகமாக உள்ள நம்நாட்டில் இந்த ட்ரோனின் தேவை அதிகமாகவே இருக்கிறது'' என்கிறார்  இதன் தயாரிப்பாளர் அலியாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT