முகப்பு
இளைஞர்மணி

மூகை ஆராய்ச்சிக்கு விருது!

நாளுக்குநாள் நோய்களின் எண்ணிக்கையும், அதன் விளைவுகளும் அதிகரித்து வரும் நிலையில், நோயைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் பலவகையான மருத்துவங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன.

இளைஞர்மணி

மூகை ஆராய்ச்சிக்கு விருது!

நாளுக்குநாள் நோய்களின் எண்ணிக்கையும், அதன் விளைவுகளும் அதிகரித்து வரும் நிலையில், நோயைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் பலவகையான மருத்துவங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

நாளுக்குநாள் நோய்களின் எண்ணிக்கையும், அதன் விளைவுகளும் அதிகரித்து வரும் நிலையில், நோயைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் பலவகையான மருத்துவங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன. நவீன மருத்துவத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஒருபுறம் நோயாளிகளை வாட்டி வருகிறது.
இந்த நிலையில் மக்களும், பக்கவிளைவுகள் இல்லாத மூலிகை மருத்துவத்தை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், கடந்தகாலங்களில் கிடைத்த அனைத்து மூலிகைகளும் இப்போதும் கிடைக்கின்றனவா? அருகிவரும் மூலிகைகளை எவ்வாறு பாதுகாப்பது, அவற்றை எப்படி மருஉருவாக்கம் செய்வது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள தன்னார்வ ஆராய்ச்சிக் கழகமான டாக்டர். கே.வி. ராவ் தொண்டு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் தென்னிந்திய அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி கெளரவிக்கிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சி மாணவர் ரா. ரமேஷ்குமார் நிகழ் ஆண்டுக்கான இந்த ஆண்டுக்கான "கே.வி. ராவ் உயிரியல் சிறப்பு விருதை'ப் பெற்றுள்ளார்.
அழிந்து வரும் கருங்குறிஞ்சி மூலிகைகளை திசு வளர்ப்பின் மூலமாக வளர்த்தல் மற்றும் பாதுகாத்தல் என்ற ஆய்வுக்காக ரமேஷ்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்து அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையா 
கூறியது:
""சிறுகுறிஞ்சி அல்லது கருங்குறிஞ்சி எனப்படும் அற்புத மூலிகை இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழகம், கேரளம், கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது. இத்தாவரத்தில் டாராசிரால், ஸ்டிக்மாஸ்டிரால், டேக்ஸால் பெட்டுலின் மற்றும் ஸ்குவாலின் போன்ற வேதிப் பொருட்கள் அதிக அளவில் உள்ளன.
இவை தொற்றுநோய்களைப் பரப்பக்கூடிய நுண்கிருமிகளையும், வேகமாகப் பரவக்கூடிய புற்றுசெல்களையும், முதுமையை ஏற்படுத்தக் கூடிய ப்ரீ ரேடிகல்ஸ்களையும் அழிக்கும் திறன்கொண்டது என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் இந்த மூலிகையின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. மேலும், மூட்டுவலி, ஞாபகமறதி, முடக்குவாதம், காய்ச்சல், ஒவ்வாமை, வீக்கம் மற்றும் நரம்பு சார்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாக கருங்குறிஞ்சி உள்ளது. இதுபோன்ற மருத்துவ குணங்களால் இந்த மூலிகை ஆண்டுக்கு 200-500 மெட்ரிக் டன் வரை மருந்துப் பொருட்கள் உற்பத்திக்காக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இதன் தேவை மற்றும் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால், காடுகள் அழிவதாலும், வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுவதாலும், அதிக அளவில் மருந்துப் பொருட்கள் உற்பத்திக்காக சேகரிக்கப்படுவதாலும் இயற்கையில் இந்த மூலிகையின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து தற்போது அழியும் நிலைக்கு வந்துள்ளது. 
இந்த நிலையில்தான், எங்களது பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை மூத்த பேராசிரியர் மற்றும் துறை தலைவர் ச. கருத்தபாண்டியன், இணைப் பேராசிரியர் ம.ரமேஷ் மற்றும் ஆராய்ச்சி மாணவர் ரா. ரமேஷ்
குமார் ஆகியோர் இணைந்து சிறுகுறிஞ்சி தாவரத்தைப் பாதுகாக்கும் வழியை ஆய்வகத்தில் ஆய்வு செய்து, ஆய்வக நிலத்தில் வளர்ப்பதற்கான சாத்தியகூறுகளை பரிசோதித்தனர். 
அவர்களின் கூட்டுமுயற்சியின் பலனாக இந்த செடியின் சுமார் 2-3 செ.மீ. அளவுள்ள ஒரு தண்டு பாகத்தைக் கொண்டு திசு வளர்ப்பின் மூலமாக 1000 செடிகளை உற்பத்தி செய்து மேற்குத் தொடர்ச்சி மலையான ஊட்டியில், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் (காரைக்குடி மண்டலம்) மற்றும் தமிழ்நாடு வனத் துறையின் உதவியோடு நடவு செய்யப்பட்டு, இயற்கையில் குறைந்த அளவுள்ள இதன் எண்ணிக்கை கணிசமாக உயர முயற்சி எடுக்கப்பட்டது. 
மேலும், இந்த பணிக்காக புதுதில்லியில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கழகம் ரூ. 15.28 லட்சம் நிதி வழங்கி ஊக்குவித்துள்ளது. இதுபோல, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்னும் பல ஆராய்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்'' என்றார் துணைவேந்தர்.

முழு கட்டுரையைப் படிக்க →