முகப்பு
இளைஞர்மணி

மரபைக் காக்க ஒரு வணிக இணையதளம்!

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கென ஆடை அணியும் மரபைக் கொண்டுள்ளனர். இவர்களின் படைப்பு ஒன்றுபோல இல்லாமல், வெவ்வேறு கலை வடிவங்களைப் பெற்றுள்ளன. 

இளைஞர்மணி

மரபைக் காக்க ஒரு வணிக இணையதளம்!

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கென ஆடை அணியும் மரபைக் கொண்டுள்ளனர். இவர்களின் படைப்பு ஒன்றுபோல இல்லாமல், வெவ்வேறு கலை வடிவங்களைப் பெற்றுள்ளன. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:59 PM
பகிர்:

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கென ஆடை அணியும் மரபைக் கொண்டுள்ளனர். இவர்களின் படைப்பு ஒன்றுபோல இல்லாமல், வெவ்வேறு கலை வடிவங்களைப் பெற்றுள்ளன. 
இவர்களின் குடிசைத் தொழிலாக விளங்கும் ஆடை அணிகலன்கள் தயாரிப்பு, கலைப்பொருட்கள் தயாரிப்பு அவர்களின் கலாசார சின்னமாகவும், அடையாளமாகவும் விளங்குகிறது. ஆனால் அவற்றை விற்பதற்கு சரியான தளம் இல்லாமல், அந்த மக்கள் அனைவரும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். 
அஸ்ஸாம் மாநிலம், பர்பெடா மாவட்டம், சர்தபாரி கிராமத்தைச் சேர்ந்தவர் த்ருபா. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேதியியல் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இவரும், இவரது நண்பர்களும் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, அங்கு ஏற்பாடு செய்யப்படும் சிறு விழாக்களில் அஸ்ஸாம் மாநில பாரம்பரிய தயாரிப்புகளை விற்பனை செய்யும் கடை அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது அந்த கலைப் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதை த்ருபா அறிந்தார்.
அதன் பிறகு, கடந்த மார்ச் 2017-இல் குவஹாத்தியை தலைமையிடமாகக் கொண்டு Brahmaputra Fables  என்ற இணைய வணிக தளத்தைத் தொடங்கினார். வடகிழக்கு மாநில கிராமப்புற கலைஞர்களின் ஜவுளிகள் மற்றும் கலைப்பொருட்களை நேரடியாக வாங்கும் ஆர்வம் உள்ள மக்களுக்கான தளமாக அது இருக்கிறது. வடகிழக்கு மாநில கலைஞர்களை தனது நிறுவன குழுவில் எந்தவித பதிவுக் கட்டணமும் இல்லாமல் சேர்த்துக் கொண்டார். இதனால், இடைத்தரகர்கள் மூலம் சுரண்டப்பட்ட, குறைவான ஊதியம் பெற்ற கிராமப்புற பழங்குடியின கலைஞர்களின் வாழ்வாதாரம் நல்ல நிலைக்கு திரும்பியிருப்பதாக கூறுகிறார் த்ருபா.
தொழில்துறைக்குச் சிறிதும் தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்த த்ருபா பயின்றது, வேதியியல் முதுகலை பட்டம். மறைந்த அவரது தந்தை ஆசிரியராக இருந்துள்ளார். தாயும் வீட்டுப் பணிகளை கவனித்தவர். ஆனால், பெற்றோர் இருவரும் உள்ளூர் ஜவுளிகள், கைவினைப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி அவற்றை ஆதரித்தவர்கள். ""என்னுடைய கலாசாரமும், பண்பாடும் நிலைத்திருக்க அவர்களும் ஒரு காரணம்'' என்கிறார் த்ருபா.
தன்னுடைய நிறுவனம் குறித்து த்ருபா கூறுகையில், ""என்னுடைய சிறிய கையிருப்பு பணத்தோடு, கொஞ்சம் வங்கிக் கடன் பெற்றே "பிரம்மபுத்திரா ஃபேபில்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கினேன். எனக்குப் பின்புலமாக இருந்தவர்கள் அனைவருமே இணைய வணிகத்திற்கு தொடர்பில்லாதவர்கள். அதனால், என்னுடைய வணிக இணையதளத்தை மேம்படுத்த ஒருவருடைய உதவி தேவைப்பட்டது. இதுகுறித்து சமூக ஊடகத்தில் நான் தெரிவித்த போது, என்னுடைய பள்ளித் தோழர் ஒருவர் உடனடியாக முன்வந்தார்.
இதையடுத்து, பித்தளை மற்றும் மணி உலோக கைவினைப் பொருட்களுக்கு பெயர்பெற்ற எனது சொந்த ஊரான சர்தபாரி கிராமத்திலிருந்த கலைஞர்களை முதன்முதலில் எனது நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைத்தேன். மேலும், என்னுடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற வடகிழக்கு மாநில நண்பர்கள், அந்தந்த மாநில உள்ளூர் கலைஞர்களை பிரம்மபுத்திரா ஃபேபில்ஸ் நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைத்து நாங்கள் கூட்டுப் பணியாற்ற உதவினர்.
நான் என்னுடைய வணிக இணையதளத்தை பணம் கொடுத்து விளம்பரப்படுத்த நினைக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை. நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள் ஒருமுறை சரியாக அமைந்துவிட்டால், நிறுவனம் நன்றாக பிரகாசிக்கத் தொடங்கிவிடும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. விரைவில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்களது தயாரிப்புகளை அனுப்புவதில் வெற்றி பெறுவோம்'' என்றார்.
கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனம், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து கடந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த Smart Fifty போட்டியில், நாடு முழுவதும் உள்ள 3000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் புதுமையான யோசனைகளில் ஒன்றாக த்ருபாவின் தொழில்முனைவோர் மேதமை அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், The Voice of Indian Brands என அழைக்கப்படும் The Indian Awaz நிறுவனத்தின் 30 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் 10 தொழில்முனைவோர் -2017 அங்கீகாரப் பட்டியலிலும் த்ருபா இடம் பெற்றுள்ளார். 
பிரம்மபுத்திரா ஃபேபில்ஸ் கைவினைப் பொருட்கள் நாட்டின் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மக்களுக்கும் கிடைக்க 
வேண்டும் என்பதற்காக, இதற்கான செல்லிடப்பேசி செயலியையும் த்ருபா உருவாக்கியுள்ளார். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவர்களின் இணையதளத்தையும் (https://www.brahmaputrafables.com) தொடர்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →