செல்வந்தர் ஒருவர் ரயிலில் பயணித்தார். அவர் வெற்றிலையை வாயில் மென்று அந்த இரயில் பெட்டியிலேயே எச்சிலை உமிழ்ந்தார். அருகில் அமர்ந்திருந்த பயணி அந்த எச்சிலைத் தாள் கொண்டு துடைத்தார். மீண்டும் அந்த செல்வந்தர் அதேபோல் துப்பினார். இவரும் மீண்டும் துடைத்தார். அந்த செல்வந்தருக்கு கர்வம் கூடிவிட்டது. தான் தவறு செய்கிறோம் என்று தெரிந்தும் ஒருவர் அதைத் துடைத்துக் கொண்டு இருக்கிறார் எனஅறிந்தும், வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் எச்சிலைத் துப்பினார். அருகிலிருந்தவரும் முகம் சுளிக்காமல் துடைத்து வந்தார். இருவரும் ஒரு ரயில் நிலையத்தில் இறங்கினர். வெளியே நின்ற மக்கள் கூட்டம் அந்த உன்னத மனிதருக்கு மாலை மரியாதைகள் செய்து "மகாத்மா காந்திக்கு ஜே' என்று மகிழ்ச்சியாய் ஆரவாரம் செய்தனர். எல்லாரும் அவரை அன்பாய் சூழ்ந்து கொண்டார்கள். ரயிலில் துப்பிக்கொண்டே வந்தவருக்கு அப்போதுதான் தனது இழிவான செயலைப் பொறுத்துக் கொண்டவர் மகாத்மா காந்தி என்பதைத் தெரிந்து கொண்டார்.
அருகில் வந்து "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குத் தீங்கிழைக்கக்கூடாது என்று பாடம் கற்றுக் கொண்டேன்'' என்றார். அதற்கு காந்தி, " நான் தான் உங்களிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்'' என்றார். "என்னிடமிருந்து நீங்கள் என்ன பாடம் கற்க முடியும்?'' என்றார். "ஒருவர் எவ்வளவு கெடுதல் செய்தாலும், ஒருபோதும் பொறுமையை மட்டும் இழக்கக்கூடாது என்பதே அந்த பாடம்'' என்றார் காந்திஜி. பொறுமை என்னும் குணத்தைக் கற்றுக் கொள்ளும் பொழுது மனிதன் வலிமை பெறுகிறான். பொறுமை "கோழைத்தனம் அல்ல, அது மிகச்சிறந்த வலிமை'.
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா} மடைத்தலையில்
ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
என்கிறது தமிழ்ப்பாட்டி ஒளவையாரின் மூதுரை. தண்ணீருக்கு நடுவே நிற்கின்ற கொக்கு வாட்டத்துடன் இருக்கும். அதன் காலைச் சுற்றிப் பல சிறிய மீன்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் அதனைக் கவ்வித் தின்னாது. பொறுமையாகக் காத்திருக்கும். தனது பசியைத் தீர்க்கக் கூடிய பெரிய மீன் வந்தவுடன் விரைந்து கவ்விப் பிடித்துவிடும். பொறுமையால் கொக்கு வெற்றி பெறுவதைப்போல் பொறுமையுடையவர் வெற்றியடைவார்.
பள்ளிப் பருவத்திலே வாத்துக்காரர் கதை கேட்டதுண்டு. அதில் அதிசயமாய் தினமும் பொன் முட்டையிடும் ஒரு வாத்து. தினம், தினம் காத்திருப்பதற்கு பொறுமை இல்லாததால், பொன் முட்டைகளை மொத்தமாக எடுத்துவிட ஆசைப்பட்டார் வாத்துக்காரர். வாத்தின் வயிற்றை அறுத்தார். அதில் அன்று இடும் ஒரு முட்டை மட்டுமே இருந்தது. பொறுமையின்மையால் தினம் ஒரு பொன்முட்டை பெரும் வாய்ப்பை இழந்தார். பொறுமை உண்மையில் கடினமானதுதான். பழக்கப்படுத்திக் கொண்டால் அது மிகவும் இயல்பாகிவிடும்.
"பொறுமை கசப்பானது. ஆனால் தருகின்ற கனியோ மிகவும் இனிப்பானது' என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நம் செயல்பாட்டின் விளைவுகள் உடனே பலன் தராமல் இருக்கலாம். அதற்காக மனம் தளர்ந்து விடக்கூடாது. செயலின் விளைவுகளை ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கவும் கூடாது என்பதற்கு சீன மூங்கில் ஓர் உதாரணம். மூங்கில் செடியை நட்டு, நீர் பாய்ச்சி, உரமிடுவார்கள். முதல் வருடத்தில் ஒரு வளர்ச்சியும் இருக்காது. இரண்டு, மூன்று, வருடங்கள் கடந்தும் செடி வளராது. அதே மூங்கில் நான்கு வருடங்கள் கடந்த பின்பு ஐந்தாம் வருடத்தில் ஒரே ஆண்டில் 80 அடி உயரம் வரை வளரும். அந்த அசுர வளர்ச்சியில் சூறாவளிக் காற்றாலோ, மழையாலோ அதனை நிலைகுலையச் செய்ய முடியாது. ஏனெனில், நான்காண்டுகள் அது மண்ணிலே தனது வேரினைப் பாய்ச்சி மிகச்சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. மண்ணிலே அதன் பலம் கூடும்பொழுது விண்ணை நோக்கி அதன் பயணம் எளிதாகிறது. கனவுகளோடும், இலட்சியத்தோடும் பயணிப்பவர்கள் மூங்கில்களைப் போலவே தடைகளைப் பொறுமையாகவே கையாளுகிறார்கள். அதில் வலிமை அடைகின்றனர். பொறுமை, இலக்கினை அடைய தகுதியானவனாக்குகிறது. தகுதியானவர்களின் முன்னேற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடிவதில்லை.
பொறுமை இழப்பவர் தனது ஆற்றலையும் அதிகமாகவே வீணடிக்கின்றார். பொறுமையானவர் தனது ஆற்றலை ஒரு தவயோகியைப் போல் தேக்கி வைக்கிறார். "பிரார்த்தனைகளை விட மிக உயர்ந்தது பொறுமை' என்று புத்தரின் பொன்மொழியில் பொறுமை புகழ்மொழி பெறுகிறது. ஜென் தத்துவத்தில் தவம் என்பதன் விளக்கம் பொறுமையுடன் காத்திருத்தல் என்பதாகும். தவத்தின் முடிவில் கிடைக்கும் வரத்தை விட, அந்த வரத்திற்காக காத்திருந்த பொறுமைதான் பெரிதாக போற்றப்படும். ஏனென்றால் பொறுமை, இலக்கினை அடைய தகுதியுள்ளவனாக்குகிறது. பொறுமையான சிப்பியே முத்தைத் தருகிறது. பொறுமை என்பது வெறுமனே காத்திருப்பது அல்ல, விடாமுயற்சியுடன் உழைத்து, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பது.
புத்தரின் சீடர்களில் முக்கியமானவர் பூர்ணா. அவர் தர்மப் பிரசாரம் செய்ய புத்தரிடம் அனுமதியைக் கேட்டார். அதற்கு புத்தர்,"பூர்ணா, எங்கே போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய்?'' என்றார். ""குருவே! சூனப்ராந்தம்'' என்ற இடத்தில் என்றார் சீடர். "அதுவா? அங்குள்ளவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாயிற்றே; உன் அறிவுரைகளை ஏற்காமல் உன்னை இகழ்ந்து பேசினால் என்ன செய்வாய்?'' என புத்தர் கேட்க, "அதனால் என்ன? கையால் அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்வேன்'' என்றார் பூர்ணா. "சரி, அப்படி கைகளால் அடித்தால் என்ன செய்வாய்?'' என்ற புத்தரின் கேள்விக்கு, "அதனால் என்ன, ஆயுதங்களைக் கொண்டு தாக்கவில்லையே என்று எண்ணி மகிழ்ந்து எனது தர்மப் பிரசாரத்தைத் தொடருவேன்'' என்றார். "ஒரு வேளை அவர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால் என்ன செய்வாய்?'' என்றார் புத்தர். "அதனால் என்ன, என்னைக் கொல்லவில்லையே, அந்த அளவுக்கு நல்லவர்கள்தான் என்றெண்ணி என் பணியைத் தொடருவேன்; என் கடன் பணி செய்துகிடப்பதுவே'' என்றார் பூர்ணா. "சரி, கடைசியாக ஒரு கேள்வி. உன்னைக் கொன்று போட்டுவிட்டால்... என்ன செய்வாய்?'' என்றார் புத்தர்.
""மிகவும் மகிழ்ச்சியுடன் இறப்பேன்; அட இவ்வளவு சீக்கிரம் முக்தி அடைய உதவினார்களே! என்று அகம் மகிழ்வேன்; உள்ளம் குளிர்வேன்'' என்று பூர்ணா பதிலுரைத்தார். அந்த பதிலால் பூர்ணாவின் பொறுமையும், பக்குவமும் தெரிந்தது. உடனே புத்தர், ""பூர்ணா, நீ தர்ம பிரசாரம் செய்; நீ பரிபூரண பக்குவம் பெற்றுவிட்டாய்'' என்று சொல்லி பொறுமையின் சின்னமான பூர்ணாவுக்கு ஆசி வழங்கினார்.பொறுமை அறிவின் துணைவன். பொறுமையை கைக்கொண்டால் வாழ்வின் உன்னதங்கள் நம்மைத் தேடி வரும்.
மனித வாழ்க்கை ஒரு பயணம். அப்பயணத்தில், வேகமாக பயணிப்பவர்கள் பலரை முந்திச் செல்வார்கள். வேகத்தால் திருப்பங்களிலும், வளைவுகளிலும், திடீரென்று வேகத்தை குறைக்க வேண்டியிருக்கும். அதனால் பயணிகள் சில நேரங்களில் பதட்டமாகவும், பயமாகவும் பயணிப்பதுண்டு. மிதமான வேகத்தில் பயணிக்கும்போது நிறைய நிகழ்வுகள் கண்ணில் படும். அவை வாழ்வை ரசிக்க வைக்கும். மனதை மகிழ வைக்கும். மொத்தத்தில் பயணம் இனிமையாகவே அமையும்.
ஓர் ஓட்டுநர் பொறுமை இழந்தால் ஒட்டுமொத்த பயணிகளும் நிம்மதி இழப்பது போல், ஒரு குடும்பத்தலைவர் பொறுமை இழந்தால் அக்குடும்பமே துன்புறும். ஒரு நிர்வாகத்தின் தலைமை பொறுமை இழந்தால் அந்த நிர்வாகமே துன்புறும். உண்மையில் மகிழ்ச்சியின் சாவியான பொறுமை, நிறைய போதிக்கும். வாழ்வை எளிமையாக்கும், முடிவில் சாதிக்கவும் வைக்கும்.
சுவாமி விவேகானந்தர், "நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்'' என்றார். ஓர் இளம் வயதுப் பெண் கல்கத்தா நகரத்து வீதிகளிலே உள்ள கடைகளில் கையேந்தினாள். அப்பெண்மணிக்கு அது வழக்கமாகவே இருந்தது. ஒரு நாள் அவர் ஒரு கடைக்காரரிடம் கையேந்தினார். அவர் கண்டும் காணாமல் இருந்தார். மீண்டும் அப்பெண் கையேந்தினார். பொறுமையிழந்த கடைக்காரர், வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலை எச்சிலை அப்பெண்ணின் கையில் துப்பினார். சற்றும் பொறுமை இழக்காத அப்பெண்மணி, "இது நீங்கள் எனக்குக் கொடுத்தது. இதோ! பசியால் வாடும் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்'' என்றார். தான் செய்த தவறை எண்ணி மனம் வருந்தினார். பின்னர் அப்பெண்மணியை அழைத்து ஒரு பணமுடிப்பைத் தந்தார். கடுஞ்சொல்லையும் செயலையும் பொறுத்து கொள்ளும் தன்மையுடையவர் துறவியை விடச் சிறந்தவர் என்கிற பொருளில்,
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அவரின் வரிகளை நம்மனதில் அசைபோட வைத்த அப்பெண்மணி, அன்னை தெரேசா.
வாழ்க்கைப் பயணம் ஒரு நேர்கோட்டுப் பாதைப் பயணம் அல்ல. அது பல திருப்பங்கள் நிறைந்தவை. சிறு களைப்பில் பயணத்தை கைவிடுபவர்களுக்கு அவர்களில் வெற்றி அடுத்த திருப்பத்தில் அழகாய் காத்திருப்பது தெரிவதில்லை. பொறுமையாளர்களுக்கு மட்டுமே லட்சியத்தின் புதிர்கள் மறைந்திருந்தாலும் தெரியும். அவர்களே லட்சியத்தை அடையும்வரை ஓய்வுக்கு விடை கொடுத்துவிட்டு உழைப்பிற்கு வழிகொடுப்பர். நடப்பது நடக்கட்டும் என காத்திருந்தால் அவர் சோம்பேறி. நடப்பவையோடு நாமும் நகர்ந்து கொண்டிருப்பவர் சாதாரணமானவர். கடினமாக இருந்தாலும் பொறுமையோடு முயற்சிப்பவரே சாதனையாளர்.
"பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டும் என நினைக்கிறானோ அதனைச் சாதிப்பான்' என்ற பெஞ்சமின் பிராங்கிளின் வரிகளுக்கேற்ப நினைத்ததை முடிக்கும் வல்லமை கொண்டது பொறுமை. டாக்டர். தாமஸ் கூப்பர் எட்டு ஆண்டு காலம் உழைத்து 30,000 ஆயிரம் புதிய சொற்களை ஆங்கில அகராதிகளில் சேர்க்க காகிதங்களில் எழுதி வந்திருந்தார். அவரது மனைவி அத்தனை காகிதங்களையும் குவித்து சொக்கப்பனை கொளுத்தி மகிழ்ந்தார். மனைவியிடம் கோபப்படவில்லை. மீண்டும் எட்டு ஆண்டுகள் பொறுமையாய் உழைத்து ஆங்கில அகராதிக்கு ஆயுள் கூட்டினார். ஐசக் நியூட்டன் மாலை நேரத்தில் உலவச் சென்றபோது அவரது நாய் மேஜையில் ஏறியது. மேஜையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி விழுந்து அவர் எழுதி வைத்திருந்த சூத்திரங்களெல்லாம் கருகின. நியூட்டன் மனம் வெதும்பவில்லை. ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினையை நாயின் மீது செய்ய மறுத்தார். பொறுமையாய் மீண்டும் எழுதத் தொடங்கினார். பொறுமை நம்பிக்கையை வளர்க்கும் என்பதற்கு சான்றுகள் இவை.
பைபிளில் கூறப்பட்ட ஒரு நிகழ்வு. யோபு, ஒரு பெரிய செல்வந்தர். அவருக்கு எல்லா செல்வங்களும், பத்துக் குழந்தைகளும் இருந்தனர். அவர் கடவுள் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார். சாத்தான், கடவுளிடம் ஒரு சவால் விட்டார். ""யோபுவிடமிருக்கின்ற செல்வத்தையெல்லாம் எடுத்து விட்டால், யோபு உன்னை சபிப்பான்'' என்றார். "இல்லை, யோபு குற்றமற்றவர், நேர்மையானவர், நல்லவர், அப்படிச் செய்ய மாட்டார்'' என்றார் கடவுள். ""சோதிக்கலாமா?'' என்றது சாத்தான். "சரி'' என்றார் கடவுள்.
யோபுவிற்கு ஒரே நாளில் நான்கு செய்திகள் வந்தடைந்தது. யோபுவின் பத்து குழந்தைகளும், ஊழியர்களும், கால்நடைகளும் இயற்கைப் பேரழிவினாலும் அன்னியப் படையெடுப்பாலும் அழிந்தனர். அதனைக் கண்ணீரோடும் துக்கத்தோடும் ஏற்றுக் கொண்டார் யோபு. ஆனால், இறைவனை அதே அன்போடு பிரார்த்தித்தார். சாத்தான் மேலும் சோதிக்க வேண்டும் என்றது. "சரி' என்றார் கடவுள். யோபுவின் உடலெங்கும் தோல் நோய் பரவியது. தொழு நோயாளியாக்கப்பட்டார் யோபு. மனைவி நண்பர்களெல்லாம் இறைவன் மீதிருந்த நம்பிக்கையைக் கைவிட்டார்கள். அதே நம்பிக்கையோடும், பொறுமையோடும் இறைவனைத் துதித்தார் யோபு. கடவுளின் அளவற்ற வல்லமை மீது அசையாத நம்பிக்கை கொள்கிறார். கடவுள் அவருக்கு முன்பு தந்ததைவிட இரண்டு மடங்கு அதிக சொத்தையும், புதிய பிள்ளைகளையும், மிக நீண்ட வாழ்நாட்களையும்அளித்தார். பொறுமை இறைமையின் அடையாளம். பொறுமையுடையவரிடம் இறைவன் குடிகொண்டுள்ளார்.
பொறுமையே வலிமை!
பொறுமையே வாழ்வின் பெருமை!!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர்,
நுண்ணறிவுப் பிரிவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.