தேவை... தனித்திறன்கள்!
முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தாலும் கூட கிடைக்காத வேலை இளநிலை படித்தவர்களுக்கோ அல்லது அதை விட குறைந்த கல்வித் தகுதி உடையவர்களுக்கோ கூட எளிதில் கிடைப்பதை பார்த்திருப்போம்.
முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தாலும் கூட கிடைக்காத வேலை இளநிலை படித்தவர்களுக்கோ அல்லது அதை விட குறைந்த கல்வித் தகுதி உடையவர்களுக்கோ கூட எளிதில் கிடைப்பதை பார்த்திருப்போம். அப்படி என்றால் அவர்களிடம் ஏதோ அதிகப்படியான விஷயம் இருக்கிறது என்று அர்த்தம்.
ஆனால், நாம் என்ன சொல்வோம்? "என்னை விட படிப்புல குறைவா இருக்கிறவரை அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க. இதுக்கெல்லாம் கடுமையான சிபாரிசு இருந்தா மட்டும்தான் முடியும்' என்று சொல்வோம்.
ஆனால், உண்மையில் அந்த நிறுவனத்தின் வேலை வாய்ப்பு வழங்கும் அதிகாரி எதிர்பார்த்த விஷயம் நம்மிடம் இருந்திருக்காது என்ற உண்மையை நாம் புரிந்து கொள்வதில்லை. பல நிறுவனங்கள் கல்வித்தகுதியை மட்டுமே பார்த்து வேலையை வழங்குவதில்லை. நமது தனித்திறன்கள்தாம் நம்மை நோக்கி வெற்றியைக் கொண்டு வரும்.
முன்பெல்லாம், 10 ஆம் வகுப்பு படித்து முடித்து டீச்சர் டிரெய்னிங் படித்தவர்களுக்கு இடைநிலை ஆசிரியர் வேலை எளிதாகக் கிடைத்தது. பல முதுகலைப் பட்டங்களும், எம்பில், பிஎச்டி, பி.எட்., எம்.எட், என எல்லா விதமான படிப்புகளையும் முடித்தவர்களுக்கு கூட அவ்வளவு எளிதாக ஆசிரியர் வேலை கிடைப்பதில்லை. பி.எட். என்பது முன்பெல்லாம் ஆசிரியர்களுக்கான தகுதியாக இருந்தது. இப்போது ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற திறன் சார்ந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் வேலை கிடைக்கும் நிலை வந்துவிட்டது.
அப்போதும் கூட ஆசிரியராக முடியுமா என்றால் அது முடியாது. அதன் பின் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வையும் சந்தித்து அங்கு நமது திறமையைக் காட்டினால் மட்டுமே ஆசிரியராகப் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.
இப்படி படிப்பைத் தாண்டி தனித்திறன்களை வளர்த்துக் கொள்பவர்களால் மட்டுமே வெற்றியை, வேலையைப் பெற முடியும். இந்நிலையில் கல்வித் தகுதியை மட்டுமே வைத்து திறன்களை மதிப்பிட முடியாது என்பதால்தான் கல்வி தகுதியையும் தாண்டிய திறன்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
நமது பயணம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். அதாவது எந்தத் துறையில் நாம் வேலை தேட வேண்டுமோ, அத்துறை சார்ந்த பல்வேறு விவரங்களைப் படித்து, கேட்டு, தெரிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
முதல் வாய்ப்பிலேயே அனைவருக்கும் வேலை கிடைத்து விடும் எனச் சொல்ல முடியாது. அப்படி வாய்ப்புக் கிடைக்காத நிலையில், அந்த நிறுவனம் எந்த காரணத்துக்காக நம்மைத் தேர்வு செய்யவில்லையோ அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த நிறுவனம் எதிர்பார்க்கும் பணித்திறன்கள்,தனித்திறன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அப்படி தெரிந்து வைத்துக் கொண்டால், அதே துறையிலுள்ள வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு முயற்சி செய்யும் போது நாம் கற்றுக் கொண்ட திறன்கள் நமக்கு கைகொடுக்கும்.
இப்போது எல்லாம், ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் இளைஞர்கள், அந்த நிறுவனம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளாமலேயே செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதனால் கூட அவர்களுக்கு அந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுகிறது, விரல் நுனியில் உலகம் இருக்கும் நிலையில், நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ள நிறுவனத்தின் விவரங்களைத் தெரிந்து கொண்டு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கான சில விஷயங்களை நமது திறன் சார்ந்த கருத்துடன் நேர்முக தேர்வில் அவர்கள் கேட்கும் நேரத்தில் பதிவு செய்து விட்டால், வேலை நம்மை தேடி வீட்டிற்கே வந்து விடும்.
அத்துடன், ஒரு பொருள் குறித்த அறிவு என்பது அப்படியே இருந்தால் அது பயன் தராது, ஆண்ட்ராய்டு கைபேசிகளில் உள்ள அப்டேட் போல் துறை சார்ந்த, பொருள் சார்ந்த அறிவையும் அப்டேட் செய்தால் மட்டுமே, நம் திறன்களின் மீது நிறுவனங்களுக்கு நம்பிக்கை வளர்ந்து நமது வளர்ச்சிக்கும் காரணமாக அமையும். இல்லையென்றால் சேர்ந்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலை வந்து விடும்.
சில பேர் நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கும் போது கூட யாரோ ஒருவர் தயார் செய்த விண்ணப்ப படிவத்தை பார்த்து அதே போல் தயார் செய்து அனுப்புவார்கள். இதை விட நாம் சுயமாகத் தயாரித்து அனுப்பும் விண்ணப்பம் கூட நிறுவனத்தின் அதிகாரிகளை ஈர்க்கக் கூடும். அதிலும் கூட தனித்திறனுக்கு மரியாதை கிடைக்கும்.
பெரிய அரங்கில் ஒரே மாதிரியான சீருடையில் குவிந்திருக்கும் மாணவர்கள் மத்தியில் யாரோ ஒருவர் மட்டும் வண்ண உடையில் இருந்தால், அது மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசப்படுத்திக் காட்டும். எதற்காக வண்ண உடை என்ற கேள்வி எழும். இது போல்தான் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்திருக்கும் வேலை வாய்ப்புச் சந்தையில் நமது நடை, உடைகளில் நாம் காட்டும் தனித்திறன் கூட மெருகு சேர்க்கும். பலரும் தெரிவிக்கும் கருத்துக்கு மாறாக புதிய கருத்தை, சிந்தனையை, வெளிப்படுத்தும் விதத்தில் கூட புதிய உத்திகளுடன் திறமையாக வெளிப்படுத்தினால் வேலை பெறவும் முடியும். உயரத்தை எட்டவும் முடியும்.