முகப்பு
இளைஞர்மணி

வைக்கோல் கூழ்... பேப்பர் கப்... தட்டுகள்!

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் முக்கிய விளைபொருள்கள் நெல்லும், கோதுமையும்.  

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் முக்கிய விளைபொருள்கள் நெல்லும், கோதுமையும்.  அறுவடை முடிந்த பிறகு  வைக்கோலை நாம் சேர்த்து வைத்து மாடுகளுக்கு உணவாகக் கொடுப்போம். பஞ்சாப், ஹரியானாவிலும் அப்படித்தான் செய்கிறார்கள்.  ஆனாலும் கோதுமையும் அங்கே விளைவதால், கோதுமை அறுவடை முடிந்த பின்பு  கோதுமைத்தாள்களையும் மாடுகளுக்கு உணவாக அளிக்கிறார்கள். வைக்கோலை விட கோதுமைத்தாள்களை மாடுகள் எளிதில் செரித்துவிடுகின்றன. எனவே அங்கே நிறைய வைக்கோல் எஞ்சிவிடுகிறது.  வீணாகக் குவிந்து கிடக்கும் வைக்கோலை என்ன செய்வது? எரித்துவிடுகிறார்கள். விளைவு? காற்றிலே வைக்கோல் புகை கலந்து காற்றை 
மாசாக்குகிறது. 

தலைநகர் தில்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் காற்று அதிக அளவில் மாசடைந்து போனதற்கு  காரணம், இந்த வைக்கோல்  எரிப்பே.  வைக்கோலை எரிக்காமல் அவற்றை வேறு எதற்காகவாவது பயன்படுத்த முடியுமா? என்று ஆராய்ச்சி செய்ததன் விளைவாக  ஓர் இயந்திரம் ண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கண்டுபிடித்தது, டெல்லி ஐஐடியின் முன் முயற்சியால் உருவான "க்ரியா லேப்ஸ்' என்ற நிறுவனம். அதன் தலைமைச் செயல் அதிகாரியான அன்குர் குமார் இது பற்றி கூறும்போது...

""மாடுகள் வைக்கோலைச் செரிக்க முடியாமல் போய்விடுவதற்குக் காரணம், வைக்கோலில் உள்ள அதிக அளவிலான சிலிக்கா பொருள்கள்தான். வைக்கோலில் உள்ள சிலிகாவையும் லிக்னினையும் பிரித்து எடுத்துவிட்டால், அதை கூழ் போல ஆக்கிவிடலாம்.  பேப்பர் கப்,  தட்டுகள், மேசை விரிப்புகள் எல்லாம் செய்யலாம்.  

நானும்,  கனிகாவும், பிரஜீத் தத்தாவும் இணைந்து  இதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து,  அதன் விளைவாக வைக்கோலைக் கூழ் ஆக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம். 

முதலில் வைக்கோல் கூழால் ஆன பேப்பர் கப், தட்டுகள் போன்ற பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்றுதான் திட்டமிட்டோம். ஆனால்  அதைத் தயாரித்துச் சந்தைப்படுத்த நீண்ட காலம் பிடிக்கும் என்பதால்,  மேலும் நாடு முழுவதும் உள்ள தேவையில்லாத வைக்கோலை கூழாக மாற்ற  முடியாது என்பதால்,  இந்த கருவியைத் தயாரித்து விற்கலாம் என்று திட்டமிட்டோம். 

இந்தக் கருவியை வாங்கும் ஒருவர் வைக்கோல் கூழைத் தயாரித்து, அதை வைத்து  பேப்பர் கப், தட்டுகளை உருவாக்கி விற்பனை செய்ய முடியும். தேவைப்படுபவர்களுக்கு நேரடியாக வைக்கோல் கூழை விற்பனை செய்யவும் முடியும்.

ஆயிரம் கிலோ வைக்கோலில் இருந்து 500 கிலோ வைக்கோல் கூழ் தயாரிக்க முடியும். ஒரு கிலோ வைக்கோல் கூழின் விலை ரூ.40 -45 வரை விற்கிறது.  வைக்கோலை வீணாக எரிக்கும் விவசாயிகள், இந்த இயந்திரத்தின் மூலம் பயன் அடைய முடியும். மேலும் நம் நாடு முழுக்க நெல் விளையும் பகுதிகளில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுமானால், சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு பாதுகாக்கப்படும் என்பதை கற்பனை செய்யவே முடியாது.  

இந்த வைக்கோல் தயாரிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி  கூழ் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்க ரூ.30 இலிருந்து ரூ.35 லட்சங்கள் வரை ஆகும்.  ஒரு நாளைக்கு 2 ஆயிரம் கிலோ வைக்கோலை கூழாக மாற்ற முடியும்'' என்றார்.

ஐஐடி - டெல்லியில் பயோமெடிக்கல் என்ஜினியரிங் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் நீட்டு சிங் இதுபற்றிக் கூறுகையில்,  ""இந்த இயந்திரம் அறிவியலையும், சமுதாயத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மிக அழகாக ஒருங்கிணைத்துவிட்டது'' என்கிறார் பெருமையாக.

முழு கட்டுரையைப் படிக்க →