வித்தியாசமான அணுகுமுறை... வெற்றிக்கான ஏணி!
"ஐயோ நாம் சரியாகப் படிக்கவில்லையே, நல்ல மதிப்பெண்கள் பெறவில்லையே' என்ற வேதனையில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள் மத்தியில் படிப்பைப் பாதியில் விட்ட இளைஞர் ஒருவர், தனது முயற்சியால்
"ஐயோ நாம் சரியாகப் படிக்கவில்லையே, நல்ல மதிப்பெண்கள் பெறவில்லையே' என்ற வேதனையில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள் மத்தியில் படிப்பைப் பாதியில் விட்ட இளைஞர் ஒருவர், தனது முயற்சியால் சாதனை படிக்கட்டுக்களில் தடம் பதித்து உயர்ந்து வருகிறார்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த ரித்தேஷ் அகர்வால்தான் அந்த சாதனைக்குச் சொந்தக்கார இளைஞர். ஒடிசா மாநிலம் பிஸ்ஸம் கட்டாக்கில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான் ரித்தேஷ். ராயகடாவில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், 2009 -ஆம் ஆண்டு கோடாவில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால், கல்லூரிப் படிப்பு அவரின் அறிவுப் பசிக்கு தீனி போடவில்லை.
வழக்கமான படிப்பாக அந்த படிப்பு இருந்ததால், அதை விட்டு விட்டு, தொழிலில் ஈடுபட்டு ஜொலிக்க வேண்டுமெனக் கருதி கல்லூரிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டார். 2011-இல் அவர் தனது கல்விப் பாதையை மாற்றி தொழில் பாதையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால், முதலில் அவருக்கு சிம் கார்டு விற்கும் தொழில்தான் கிடைத்தது. இருந்தாலும் அத்தொழிலை செய்து வருமானம் ஈட்டியுள்ளார். சிறு வயது முதற்கொண்டே ரித்தேஷுக்கு, கணினியை அணு, அணுவாகப் பிரித்து ஆராய்வது பிடித்த ஒன்றாக இருந்து வந்துள்ளது.
தவறிலிருந்துதான், சரியான பாதையைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற கொள்கையுடைய ரித்தேஷ், தனது அண்ணனின் மென்பொருள் சார்ந்த புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினார். அதன் மூலம் கணினி மென்பொருள் கோடிங்குகளிலுள்ள தவறுகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வந்ததில், அவருக்கு கணினி கோடிங் கைவந்த கலையாக மாறியது. கணினி கோடிங் தொடர்பான அவரது ஆர்வம் இணையதளத்தை உருவாக்குவதற்கான ஆசையை அவருக்கு ஏற்படுத்தியது.
இதற்கிடையில் அவர் Indian Engineering Colleges: A Complete Encyclopaedia of Top 100 Engineering Colleges என்ற புத்தகத்தை எழுதினார். அது ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. அதற்குப் பிறகு "ஆரவெல் ஸ்டேய்ஸ்' என்ற ஹோட்டல் தொடர்பான இணையதளப் பக்கத்தை உருவாக்கி தனது இணைய வழி தொழிலைத் தொடங்கினார்.
இந்த இணையதளத்துக்காக பல நூறு ஹோட்டல்களில் அவர் தங்க வேண்டியிருந்தது. அப்போதுதான் ஹோட்டல் தொடர்பான பல விவரங்களையும், சுற்றுலாப்பயணிகள் எந்தவகையான ஹோட்டல்களை விரும்புகிறார்கள் என்பதையும் அவரால் உணர முடிந்தது. ஹோட்டல் தொடர்பான விவரங்களை வழங்கும் பல இணையதளங்கள் சரியான விவரங்களை வழங்காததுடன், தரம் குறித்த விவரங்களையும் தெரிவிக்காததால் ஹோட்டல் தொடர்பான பல இணையதளங்கள் வெற்றி பெற முடியவில்லை என கூறும் ரித்தேஷ், எல்லா விவரங்களையும் தரம் உள்ளிட்டவற்றையும் நேரில் பார்வையிட்டு அதை இணையதளப்பக்கத்தில் பதிவேற்றினால் நிச்சயம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வெற்றி பெற முடியும் என கருதி, அது போன்ற சரியான விவரங்களை உள்ளிடக்கிய "ஓயோ ரூம்ஸ்' இணையதளத்தை 2013 இல் உருவாக்கினார்.
இந்த "ஓயோ ரூம்ஸ்' பல நூறு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என கூறும் ரித்தேஷ், குறைந்த விடுதிக் கட்டணத்தை நிர்ணயித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே "ஓயோ ரூம்ஸ்' -இன் வெற்றிக்கு காரணம் என்கிறார். கூர்கானில் ஒரே ஒரு ஹோட்டலுடன் கைகோர்த்து செயல்படத் தொடங்கிய "ஓயோ ரூம்ஸ்' தற்போது இந்தியாவில் பல நகரங்களில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்களுடன் இணைந்து சுற்றுலாவாசிகளுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தருகிறது. அது மட்டுமல்ல, இங்கிலாந்து, சீனா போன்ற வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களைப் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. ஓயோ என்றால் உங்களுக்குச் சொந்தமானது என்று பொருள்.
படித்த படிப்பு எதுவாயினும், தொடர்ந்த முயற்சியால் வெற்றிப் பாதையில் பயணம் செய்யலாம் என்பதற்கு ரித்தேஷ் அகர்வால் ஓர் உதாரணம்.