இளைஞர்மணி

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வங்கி!

DIN

பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கெட்டுப் போவது எல்லாருக்கும் தெரியும். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் அவ்வளவு எளிதில் மண்ணில் மக்குவதில்லை. என்றாலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியவர்கள் அதிலிருந்து மீள்வது சிரமம். அதிலும் குடும்ப விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றில் தண்ணீர் அருந்துவதற்கு பிளாஸ்டிக் டம்ளர்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். சிறிய ஐஸ் க்ரீம் கப்கள் பிளாஸ்டிக் கலந்த பொருள்களால் ஆனவையாக இருக்கின்றன. 
பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்கள் இல்லையென்றால் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க முடியாது என்று நினைத்தார் அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வாழும் ஒரு பெண். அவர் பெயர் சமீரா. மத்திய அரசுப் பணியில் இருக்கும் அவர் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பாத்திரங்களுக்கான ஒரு வங்கியைத் (Crockery Bank for 
everyone) தொடங்கினார். 
இந்த வங்கியில் நிறைய எவர்சில்வர் டம்ளர்கள், ஸ்பூன்கள், கரண்டிகள், பாத்திரங்கள் இருக்கின்றன. தில்லி, குருகிராம் நகரங்களில் இந்த வங்கிக்கு 9 கிளைகள் இருக்கின்றன. 
திருமணம் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளோ, விருந்துகளோ நடத்தும் ஒருவர் இந்த வங்கியில் இருந்து பாத்திரங்களை எடுத்துச் சென்று பயன்படுத்திவிட்டு திருப்பித் தந்துவிடலாம். திருப்பித் தரும்போது பாத்திரங்களைச் சுத்தப்படுத்தித் தர வேண்டும். இதற்கு பணம் எதுவும் தர வேண்டியதில்லை.
பாத்திரங்கள் தேவைப்படும் ஒருவர் எத்தனை எவர்சில்வர் டம்ளர்கள், எத்தனை ஸ்பூன்கள், கரண்டிகள், பாத்திரங்கள், தட்டுகள் என்று கூற வேண்டும். எத்தனை நாளைக்குத் தேவைப்படும் என்பதையும் எப்போது தேவைப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும். 
பாத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் திருப்பித் தராமல் போய்விட்டால் அவர்களை எங்கே போய்த் தேடுவது என்று நினைத்த சமீரா, பாத்திரங்களைக் கடனாகப் பெறுபவர் அவருடைய மற்றும் இன்னும் இருவருடைய அடையாள அட்டைகளை - ஆதார் உட்பட - சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அவர் வாழும் பகுதியில் உள்ள வார்டு கவுன்சிலரின் கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். 
இந்த வங்கியைத் தொடங்கி ஓர் ஆண்டுதான் ஆகியிருக்கிறது. 
"இந்த பாத்திர வங்கி என்பது புதிய முயற்சி. ஒவ்வொரு முறை நடக்கும் விழாக்களில் பயன்படுத்தித் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் அளவைக் குறைக்கப் பயன்படும் என்பதால் இதைத் தொடங்கினேன். வங்கி தொடங்கி ஓராண்டு நிறைவடைவதற்குள் சுமார் 1 லட்சம் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை இதன் மூலம் தடுக்க முடிந்திருக்கிறது. நாடு முழுவதும் இதுபோன்ற வங்கிகள் நடத்தப்பட்டால் முற்றிலும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க முடியும்'' என்கிறார் சமீரா.
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT