முகப்பு
இளைஞர்மணி

ஐஇஎஸ்... ஐஆர்எஸ்... ஐஏஎஸ்! எல்லாவற்றிலும் வெற்றி!

வறுமையால் முடங்கிப் போகும் இன்றைய இளைஞர்கள் மத்தியில், வறுமையை விரட்டி, விடாமுயற்சியாலும், உழைப்பாலும் ஐஏஎஸ் அதிகாரியாகி சாதித்துள்ளார் தமிழக இளைஞர் ஒருவர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:15 AM
பகிர்:

வறுமையால் முடங்கிப் போகும் இன்றைய இளைஞர்கள் மத்தியில், வறுமையை விரட்டி, விடாமுயற்சியாலும், உழைப்பாலும் ஐஏஎஸ் அதிகாரியாகி சாதித்துள்ளார் தமிழக இளைஞர் ஒருவர். கல்வியால்தான் வறுமையை விரட்டி, உயரத்திற்குச் செல்ல முடியும் என்பதையும் இன்றைய இளைஞர்களுக்கு அவர் உணர்த்தியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமமான மேலஒட்டங்காட்டைச் சேர்ந்த 
சிவகுருபிரபாகரன்தான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரர். திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பயிற்சி செய்து வரும் அவரை கடையநல்லூர் அருகே நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் சந்தித்துப் பேசினோம். 

அவர் தொடர்கிறார்:

""மேலஒட்டங்காடு என்னும் குக்கிராமத்தில் விவசாய கூலித் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவன் நான். எனது தாத்தா பண்ணை குடி எனப்படும் முறையில் விவசாய நிலமொன்றில் வேலை செய்து வந்தார். குடும்பத்தின் மேல் அக்கறை இல்லாத அப்பா.  அம்மாதான் குடும்பத்தைக் கவனித்து வந்தார். மொத்தமாக 50 ரூபாயைக் கூட நாங்கள் செலவழிக்க முடியாத குடும்ப சூழல் என்னுடையது. 

இங்குள்ள புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழியில் 2004 - ஆம் ஆண்டு 12 - ஆம் வகுப்பு படித்து பள்ளியில் முதல்மாணவனாக வெற்றி பெற்றேன். பொறியியல் படிக்க வேண்டும் என்ற எனது ஆசை பணம் இன்மையால் நடக்கவில்லை. அதனால் மேல் படிப்பை உடனே தொடர முடியவில்லை.  அங்குள்ள மர அறுவை ஆலையில் வேலைக்குச் சேர்ந்தேன். எனது சகோதரியின் திருமணம், எனது தம்பியின் படிப்பு செலவு என நான், அம்மா,தாத்தா,அக்கா ஆகியோர் சம்பாதித்த பணம் செலவாகிவிட்டது. 

4 ஆண்டுகளுக்குப் பின்பு கல்லூரியில் சேர்வதற்கான குறைந்தபட்சத் தொகையைத் சேமித்த பின்,  2008-இல் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் பிரிவில் சேர்ந்தேன். அங்கும் முதல் மாணவனாக அதிக மதிப்பெண்கள் பெற்று வந்தேன்.

எனது  செலவுகளுக்கு சிம் கார்டு ரீசார்ஜ் செய்வேன். நான் இரண்டாமாண்டு படிக்கும்போது, படிப்பின் மீது எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்த எனது சீனியர் மாணவர் ரூபன், ""ஐஐடி-நுழைவுத் தேர்வுக்குப் படி. அதற்கான அனுமதிக்கட்டணத்தை நான் செலுத்தி விடுகிறேன்'' என்றார். தயக்கத்துடன் சமமதித்தேன். பொறியியல் படிக்கவே பணம் போதவில்லை என்ற நிலையில், சென்னை சென்று நுழைவுத் தேர்வுக்கு படிப்பதற்கான செலவிற்கு என்ன செய்வது என்ற யோசனை ஏற்பட்டது.

சென்னை சென்று வர மாதத்திற்கு ரூ.1500 வரை செலவாகுமே என்பதால், மட்டை ஓலை பின்னி விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை தஞ்சாவூரிலிருந்து ரயிலில் கிளம்பி சென்னை சென்று படித்து வந்தேன். இரண்டு நாளும் ரயில்வே நடைபாதையில்தான் தங்குவேன். பணம் இல்லாததால் பல நேரம் சாப்பிட்டதில்லை. பின்னர் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றேன். சென்னை ஐஐடி-இல் ஜியோ டெக்னாலஜி பிரிவு கிடைத்தது. அதில் சேர்ந்து படித்துக் கொண்டே, மாலையில் ஐஇஎஸ் நுழைவுத் தேர்வு வகுப்பில் சேர்ந்தேன்.  இரண்டு படிப்புகளுக்காகவும் ஒரு வருட காலம் தினமும் 20 மணி நேரம் செலவிட்டேன். 

கல்லூரியிலிருந்து, நுழைவுத் தேர்வு மையத்திற்கு தினமும் சைக்கிளில்தான் செல்வேன். 2013-இல் ஐஇஎஸ் தேர்வில் இந்திய அளவில் 25ஆவது இடம் பெற்றேன். இருந்தாலும் எப்பணியிலும் சேராமல், ஐஐடி வழங்கிய கல்வி உதவித் தொகை மூலம் எனது படிப்பை நிறைவு செய்தேன். மேலும் அந்த ஆண்டு நடைபெற்ற கேட் தேர்விலும் இந்திய அளவில் 30 -ஆவது இடம் பெற்றேன். 2016-இல் ரயில்வேயில் பணியில் சேர்ந்தேன். 

சமூகம் முன்னேற வேண்டுமென்றால் நீயோ, அல்லது யாரோ ஒருவரோ கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும் என்ற வார்த்தையை நான் படித்துள்ளேன். நாமே கஷ்டப்பட்டு அந்த லட்சியத்தை எட்டி விடுவோமே என்ற எண்ணம்தான் ஐஏஎஸ் படித்தே தீருவது என்ற சிந்தனயை என்னுள் விதைத்தது. இதற்காக எனக்கு வந்த ஏராளமான பணி வாய்ப்புகளைத் தவிர்த்துள்ளேன். 

நான் பள்ளியில் படிக்கும் போது, அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணனைப் பார்த்து ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அதன் விளைவாக ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டே தேர்வுகளை எழுதினேன். 2016 -இல் ஐஆர்எஸ்-இல் தேர்வு பெற்றேன். இருப்பினும் ஐஏஎஸ் என்பதே எனது லட்சியமாக இருந்தது. தொடர்ந்து தேர்வு எழுதினேன். 2018-இல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன். இந்திய அளவில் 101 -ஆவது இடத்தையும், தமிழக அளவில் 3 -ஆவது இடத்தையும் பெற்றேன். ஐஎப்எஸ்-சில் இந்திய அளவில் 20 -ஆவது இடத்தையும் பெற்றேன். 

இதையடுத்து, ஐஏஎஸ் பிரிவில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். தற்போது உதவி ஆட்சியராக (பயிற்சி) திருநெல்வேலி மாவட்டத்தில் பணி புரிந்து வருகிறேன்'' என்றார்.

ஓய்வு நேரங்களில் தனது பகுதிகளிலுள்ள குளங்களை அப்பகுதி மக்களுடன் இணைந்து, அரசின் உதவியுடன் தூர்வாரி வருவதுடன், மரங்கன்றுகள் நடுவதையும் தனது பணியாகக் கொண்டுள்ளார். மேலும், பள்ளி கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்கள் லட்சியத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறி வருகிறார்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.