இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 9

சுப. உதயகுமாரன்

கேட்கும் திறன்-2


அறிவார்ந்த பறவை ஒன்று 
உயர்ந்த மரத்தில் அமர்ந்தது 
அதிகமதிகம் பார்த்ததாலே 
அளவாகவே அது உரைத்தது 
அளவுடனே  கதைத்த  பறவை 
ஆர்வமுடன் கேட்டது 
அந்தப் பறவை போலில்லாமல் 
ஆனதேன் நீ மானிடா?

இப்படி ஓர் ஆங்கிலக் கவிதையை,  கேட்பது குறித்த  கட்டுரை ஒன்றில் படித்தது நினைவுக்கு வருகிறது. "அதிகமாகப் பாருங்கள், அளவோடு பேசுங்கள், ஆர்வத்தோடு  கேட்பீர்கள்' என்பதுதான் அந்தக் கவிதை சொல்லும் செய்தி.

சரி, எப்படித்தான் செவிமடுக்கும் திறனை உயர்த்திக் கொள்வது?

உங்களைச் சமநிலையில் வைத்திருப்பது முதற்படி. அதாவது, உங்கள் மனக்கோப்பை காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். திறந்த மனதோடு இருங்கள். உங்களிடம் பேசுகிறவரை நீதித்தராசில் வைத்து நிறுக்கவோ அல்லது உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவரை எடை போடவோ செய்யாதீர்கள்.

கவனச் சிதறலின்றி  கேளுங்கள். பேசுபவரின் நடை, உடை, பாவனைகளில் கவனம் செலுத்தாது, அவர் பேசும் வார்த்தைகளின் உள்ளடக்கத்தில் மனதைச் செலுத்துங்கள். பேசப்படும் பொருள், பேசுபவரின் எண்ணவோட்டம் மற்றும் உணர்வுகளில் மனதைக் குவித்துக் கேளுங்கள்.

நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள் என்பதைப் பேசுகிறவர் புரிந்துகொள்ளும் வகையில், அவரது கண்களைப் பாருங்கள்; தலையை அசையுங்கள், முக பாவனையை, குரலைப் பயன்படுத்துங்கள்.

உங்களை அவருடைய இடத்தில் நிறுத்தி, அவருடைய வாழ்வுலகுக்குள் நுழைந்து, அவருடைய விழுமியங்கள், பார்வைகள், அனுமானங்களைப் புரிந்து, கவனமாகக் கேளுங்கள்.

பேசுகிறவர் விவரிப்பது போன்ற உங்களின் சொந்த அனுபவங்களைப் பகிர வேண்டாம். அவர் கொட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு, பிரச்னைக்கு விடையோ, தீர்வோ சொல்ல வேண்டாம். வெறுமனே  கேளுங்கள். மனம்திறந்து கேளுங்கள்.

பேசுகிறவர் நிறுத்தினால், தயங்கினால், அமைதி காத்தால், குழம்பினால், அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தையை, சொற்றொடரை அல்லது பகிர்ந்துகொண்டிருந்த உணர்வை அவருக்கு நினைவூட்டி அவர் தொடர்ந்து பேசுவதற்கு உதவுங்கள். பேசுபவரை ஊக்குவித்து இன்னும் தெளிவாக, விளக்கமாகப் பேசவைக்க சில குறிப்பிட்ட உத்திகளைக் கையாளலாம்.

ஊக்குவித்தல்: பேசுபவரோடு உடன்படவோ அல்லது மாறுபடவோ  செய்யாமல், நடுநிலைமையான வார்த்தைகளுடன், உங்கள் ஈடுபாட்டைத் தெரிவிக்கலாம். "இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்?' எனக் கேட்டு, தொடர்ந்து பேச உதவலாம். 

தெளிவுபடுத்துதல்: கேள்விகள் கேட்டு, பேசுபவர் கூடுதல் விவரங்கள், விளக்கங்கள் அளிக்க உதவி செய்யலாம். "இது எப்போது நடந்தது?' "அப்படி யார் சொன்னது?' போன்ற கேள்விகளைக் கேட்டு இன்னும் தெளிவாகப் பேச வழிகோலலாம். 

திரும்பச் சொல்லுதல்: பேசுபவர் சொல்கிற அடிப்படைத் தகவல்களை, கருத்துகளை மீண்டும் ஒருமுறை உங்கள் வார்த்தைகளில் திரும்பச் சொல்லி, பேசுகிறவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள், புரிந்திருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரிவிக்கலாம். உங்களுடைய  புரிதல் சரிதானா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளலாம். "உங்கள் பெற்றோர் உங்களை முழுமையாக நம்பவேண்டும் என்று விரும்புகிறீர்கள், அப்படித்தானே?' என்பன போன்ற கேள்விகள் மிகவும் உதவும். 

பிரதிபலித்தல்: பேசுபவரின் அடிப்படை உணர்வுகளைச் சுட்டிக்காட்டி, அவர் எப்படி உணர்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதை எடுத்துரைக்கவும். அவர் தனது உணர்வுகளை மதிப்பீடு செய்வதற்கும் உதவலாம். "அந்த வார்த்தைகள் உங்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கின்றனவா, இல்லையா?' போன்ற கேள்விகள் பயனளிக்கும். 

சுருக்கிக் கூறுதல்: பேச்சில் முன்னேற்றத்தைப் பரிசீலிக்கவும், முக்கியமான கருத்துகள், தகவல்கள், உணர்வுகளை ஒருங்கிணைக்கவும், தொடர் கருத்துப்பரிமாற்றத்துக்கு வழிகோலவும், அவர் பேசுவதைச் சுருக்கிக் கூறுவது மிகவும் உதவும். 

உறுதி செய்தல்: பேசுபவரின் பிரச்னைகள், உணர்வுகளை ஆமோதிக்கவும், அவரது முயற்சியைப் பாராட்டி அங்கீகரிக்கவும், அவரது நன்மதிப்பை எடுத்துரைக்கவும் இது உதவும். 

கூர்மையாகக் கேட்க வேண்டுமென்றால், நீங்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் பேசும்போது கேட்க முடியாது. அதே போல, ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்கள் மனதில் அவருக்கு எதிராக வாதிடுவதை நிறுத்திவிட்டு, பொறுமையாக, நிதானமாக இருங்கள். அவர் பேசும் வார்த்தைகள், கருத்துகள், உணர்வுகளின்மீது கவனம் செலுத்துங்கள்.

பேசுபவரோடு வாதிடாதீர்கள்; விமர்சனம் செய்யாதீர்கள்; அவரைப் பகைமையோடு நடத்தாதீர்கள். பேசுகிறவரின் கலாசாரப் பின்புலத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் அவரைப் புரிந்துகொள்ளுங்கள். பேசுகிறவரை வகைப்படுத்திப் புறக்கணிக்காதீர்கள். பேசுகிறவர், பேசப்படும் பொருள், இடம், பொருள், ஏவல் போன்றவை பற்றிய உங்களின் பாரபட்ச உணர்வுகளை இனம்கண்டு, அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

காது பற்றியும், கேட்பது குறித்தும், கேட்கும் தகவல்களை ரகசியமாகப் பாதுகாப்பது தொடர்பாகவும், நமது தமிழ்ச் சமூகத்தில் புழங்கும் கதை ஒன்று மிக முக்கியமானது.

ஒரு ராஜாவுக்கு ஒட்டுக் கேட்பதில் அலாதிப் பிரியம் ஏற்படவே, தன் காதுகளைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மருந்தைக் குடிப்பார். அவரது காது கழுதைக் காது போல வளர்ந்துவிடும். இந்த ரகசியம் ஊருக்குத் தெரியாமலிருக்க ராஜா தலைப்பாகை அணிந்துகொண்டார். ஒரு முறை ராஜாவுக்கு முடிவெட்ட வந்தவர் இந்த ரகசியத்தை அறிந்துவிட்டார். இதை வெளியே  சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அவரை மிரட்டி அனுப்பி வைத்தார் ராஜா. 

மேற்படியாருக்கு இந்த ரகசியத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால், தலை வெடித்துவிடும் போல இருந்தது. எனவே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று ஒரு குழி தோண்டி, அதற்குள் "ராஜா காது கழுதைக் காது' என்று மூன்று முறை உரக்கச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். அந்த ராஜ ரகசியம் எப்படி ஊர்முழுக்கப் பரவியது, பின்னர் என்னென்ன விடயங்கள் நடந்தேறின என்று பல்வேறு வடிவங்களில் அந்தக் கதை சொல்லப்படுகிறது.

கதையின் மையக் கருத்துகள் இவைதான்: கூர்மையாகக் கேட்பதற்கு காதுகள் பெரிதாக இருக்க வேண்டிய  தேவையில்லை. பிறர் உங்களிடம் சொல்ல விரும்பாத விடயங்களைத் தெரிந்துகொள்ள, ஒட்டுக் கேட்காதீர்கள். அதேபோல, நீங்கள் கேட்டவற்றைப் பிறரிடம் பகிர்ந்தே ஆகவேண்டும் என்கிற அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். இவற்றை நீங்கள் செய்தால், கேவலப்படுவீர்கள் என்பதுதான் கதையின் பாடம். 

கேட்பதிலுள்ள சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள ஓரிரு செய்முறைப் பயிற்சிகள் உங்களுக்கு உதவலாம்:

(1)  நான்கைந்து நண்பர்களை அமர்த்திக்கொண்டு, பத்து வார்த்தைகளை வேகமாகச் சொல்லிவிட்டு, எத்தனை வார்த்தைகளை அவர்கள் உள்வாங்கி, நினைவில் நிறுத்தி, திருப்பிச் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். பெரும்பாலானவர்களால் மூன்று முதல் ஐந்து வார்த்தைகளுக்கு மேல் சொல்ல முடியாது.

(2) நண்பர்கள் பத்து பேர் ஒரு வட்டமாக அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு வாக்கியத்தை உங்களுக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லுங்கள். அவரும் இதேபோல தனக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை அதைச் சொல்லட்டும். இப்படியே அந்த வாக்கியம் அந்த வட்டத்தைச் சுற்றி உங்களிடம் வந்து சேரும்போது, எப்படி உருமாற்றம் பெற்றிருக்கிறது என்று பாருங்கள். நமது கேட்கும் திறன் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பது புரியும்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்
ùRôPo×dÏ: spuk2020@hotmail.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT