இளைஞர்மணி

விண்வெளியைச் சுத்தம் செய்யலாம்!

மனிதகுல வரலாற்றில் முதல் செயற்கைக்கோள் 1957- ஆம் ஆண்டு  அக்டோபர் 4-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

எஸ். ராஜாராம்


மனிதகுல வரலாற்றில் முதல் செயற்கைக்கோள் 1957- ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போதைய சோவியத் யூனியனால் செலுத்தப்பட்ட ஸ்புட்னிக்-1 எனப் பெயரிடப்பட்ட அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து சுற்றிவரத் தொடங்கியது. அன்று முதல் பல்வேறு நாடுகளால் பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இன்றைய தினத்தில் சுமார் 2,800 செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் முழுமையான செயல்பாட்டுடன் சுற்றி வருகின்றன.
இத்துடன் செயலிழந்த 3 ஆயிரம் செயற்கைக்கோள்களும், செயற்கைக்கோள்களின் பாகங்கள், ராக்கெட்களின் உதிரி பாகங்கள் என 10 செ.மீட்டருக்கும் பெரிய சுமார் 9 லட்சம் துண்டுகளும் பூமியைச் சுற்றி வருகின்றன.
இந்த விண்வெளிக் குப்பைகளால் அடுத்தடுத்த விண்வெளித் திட்டங்களுக்குப்
பெரும் இடையூறு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், இந்தத் துண்டுகள் ஒரு விண்கலத்தின் மீதோ, செயற்கைக்கோளின் மீதோ மோதினால் அந்த செயற்கைக்கோளால் கிடைக்கும் தகவல் தொடர்பு சிதைந்து பேரழிவு ஏற்படும். 2009-இல் ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள், செயலிழந்த ரஷியாவின் ராணுவ செயற்கைக்கோள் மீது மோதியது. இதனால் ஆயிரக்கணக்கான சிதறல்கள் வெளிப்பட்டு அவையும் தனித்
தனியாக பூமியைச் சுற்றி வருகின்றன. 2011-இல் இதுபோன்ற ஒரு மோதலைத் தவிர்ப்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் சற்று நகர்த்தப்பட்டது. 2012-இல் ஒரு விண்வெளிக் குப்பை சர்வதேச விண்வெளி நிலையத்தை 120 மீட்டர் இடைவெளியில் கடந்து சென்றது.
இதுபோன்ற அபாயங்களைத் தவிர்ப்பதற்கு அவ்வப்போது விண்வெளிக் குப்பைகளைச் சுத்தம் செய்வதுதான் ஒரே வழி. அதற்கான முயற்சியை இப்போது தொடங்கியுள்ளது ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (இஎஸ்ஏ). இதற்காக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் 102 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
"கிளியர் ஸ்பேஸ்-1' என இத்திட்டத்துக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதன்படி, பறவைகளின் கால் நகம் வடிவிலான பிரம்மாண்டமான ஒரு கருவி உருவாக்கப்படும். இந்தக் கருவி செயலிழந்த செயற்கைக்கோள்களை பறவை இரையைப் பிடிப்பதைப் போல பிடித்து, பூமியின் வளிமண்டலத்துக்குக் கொண்டு வரும். வளிமண்டலத்தை அடைந்ததும் அந்த செயற்கைக்கோள் எரிந்துவிடும். இதன் மூலம் விண்வெளியைத் தூய்மையாக்க முடியும்.
2013-இல் இஎஸ்ஏவால் வேகா என்ற ராக்கெட் ஏவப்பட்டபோது உதவிபுரிந்த வெஸ்பா என்ற அடாப்டரை பிடித்து அழிப்பது இந்தத் திட்டத்தின் முதல் இலக்கு. 112 கிலோ எடை கொண்ட, ஒரு சிறிய செயற்கைக்கோள் அளவிலான அந்த அடாப்டர் 2013-ஆம் ஆண்டிலிருந்து பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
விண்வெளியைச் சுத்தம் செய்யும் இதேபோன்ற திட்டத்துக்காக கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே பிரிட்டன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், எவ்வாறு இத்திட்டத்தைச் செயல்படுத்துவது என தெளிவு
படுத்தப்படாத நிலையில், புதுமையான திட்டத்துடன் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் களமிறங்கியுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT