முகப்பு
இளைஞர்மணி

தோற்பது வீழ்வதாகாது!

வெற்றி ஒருபோதும் இறுதியானது அல்ல. தோல்வி ஒரு போதும் மோசமானது அல்ல. எந்த நிலையாயினும் தைரியமே அவசியம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:


வெற்றி ஒருபோதும் இறுதியானது அல்ல. தோல்வி ஒரு போதும் மோசமானது அல்ல. எந்த நிலையாயினும் தைரியமே அவசியம்.

” - ஜான் வூடன்

தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கான தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சென்றாண்டு நடத்திய குரூப் - I​V தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்கள் மகிழ்ச்சியோடு அடுத்தகட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நேரம் பேரிடியாக வந்ததுதான் கரோனா தீநுண்மி தயவிலான பொதுமுடக்கம். பணிநியமன ஆணையை கையில் வாங்கி, முதல் மாதச் சம்பளத்தை பையில் வாங்கி... என்று கனவில் இருந்த பல போட்டியாளர்கள் கதிகலங்கித்தான் போனார்கள். இப்படி வெற்றியும் பெற்று, தற்காலிகமாக ஏமாந்தும் போனவர்களில் இரு மாணவர்கள் இந்தப் பின்னடைவைத் தங்களது தனிப்பட்ட தோல்வியாகவே கருதித் துயரப்பட்டனர்.

உலகளாவிய இந்தப் பொதுமுடக்க பின்னடைவு என்பது எந்தவிதத்திலும் யாருக்கும் தனிப்பட்ட தோல்வியல்ல. இது மானுட அறிவு, சாமர்த்தியத்தையெல்லாம் மீறிய இயற்கையின் புறச்சூழல் விளையாட்டு. இதையும் கடந்து அந்த மாணவர்கள் அவர்களது இன்றைய நிலையை அவர்களது சொந்தத் தோல்வியாக கருதியதற்கு காரணம், அவர்கள் ஏற்கெனவே அவர்களுக்குக் கிடைத்த பொன்னான பல வாய்ப்புகளை, காலங்களை ஒழுங்கான முயற்சியின்றி விரயம் செய்தவர்கள். சுதாரித்து, உழைத்து தங்களது முயற்சிக்கு கிடைத்த இந்த வெற்றியை இப்படி தள்ளிப் போவதை அவர்களால் செரித்துக் கொள்ள முடியவில்லை.

"தோல்வி என்பது வீழ்ச்சியல்ல... படிப்பினையே' என்கிற வரலாற்று அனுபவ வெற்றி முழக்கத்திற்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளால் நிறைந்த அவரது வாழ்க்கை முழுவதும் தோல்விகளும், பாதிப்புகளுமே அவரை அதிகமாக வரவேற்றிருக்கின்றன.

"நஷ்டம் ஏற்படும் போதெல்லாம், “பின்னடைவுகளிலிருந்து மீள ஒரு புது வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே' என்று நம்பிக்கை வார்த்தை
களோடு உலகெல்லாம் உற்சாக விதைகளைத் தூவியிருக்கிறார் எடிசன்.

1914 -ஆம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுவிட, நண்பர்கள் எல்லாம் வழக்கமான சோககீதங்களைப் பாட, எடிசன் சொன்னாராம், “""தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள். ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்துவிட்டேன் போல... நல்லவேளை, இந்த உண்மையை எனது 67 வயதில் கற்றுக்கொண்டுவிட்டேன். இந்தத் தோல்வி எனக்கு எவ்வளவு பெரிய படிப்பினை'' என்று பூரித்துப்போனாராம்.

தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்கு, தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத அவரது இந்த மனப்பான்மையே காரணம்.

திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ். சாய் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு “"கரோனா கற்றுக் கொடுத்த பாடம் என்ன?' என்கிற தலைப்பில்... ஐந்து நிமிடப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பொது முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் திரையுலகப் பாதிப்புகள் குறித்த கேள்விக்கு, இயக்குநர் வசந்த இப்படி கூறுகிறார்: “

""சினிமாவைப் பொது சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. இருந்தாலும், எனது இயக்கத்தில் ஏற்கெனவே பல சர்வதேச விருதுகளை வாங்கி குவித்துக்கொண்டிருக்கும் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், இதுவரை திரைக்கு வரவில்லை. அந்தப் படம் திரைக்கு வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்திருந்த நிலையில் இந்தப் பொதுமுடக்கம் ஏற்பட்டுவிட்டது. அதனாலென்ன, படம் எடுத்து முடிக்க வாய்ப்பு இருந்தது, விருதுகள் கிடைத்துக் கொண்டு இருக்கிறது, வெளியிடத் தானே முடியவில்லை... அது கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது. அவ்வளவுதானே? அதுவும் நடக்கும்... நம்பிக்கையோடுதான் பயணிக்கணும். எதிர்மறையாகச் சிந்திக்க ஒன்றுமில்லை'' என்று எழுச்சியான வார்த்தைகளால் அந்தப் பேட்டியை முடித்திருப்பார். தற்காலிகப் பின்னடைவுகளைத் தோல்வியென்று கருதி துவண்டு கிடக்கும் இளைஞர்களுக்கு இவரது வார்த்தைகள் மிகப் பெரிய ஊக்க மருந்து.

உடலில் மிகப்பெரிய குறைகள் இருந்தாலும், அதை தங்களின் நிறைகளாக மாற்றி, வெற்றி பெற்றவர்களின் பட்டியல், இந்த உலகில் மிக நீளமானது. போலியோ பாதித்த ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபர் ஆனதும், சிறுவயதில் சரியாக ஆகாரம் கிடைக்காமல் உடல் உறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சி அடையாது, எல்லாரும் கேலிசெய்யும் தோற்றத்தில் இருந்த சார்லி சாப்ளின், தன்னைப் பார்த்து சிரித்தவர்கள் எல்லாரும் வரிசையில் நின்று, காத்திருந்து, காசு கொடுத்து, தன் சிரிப்பைப் பார்க்க வைத்ததும், பிரெய்லி தன்னைப் போல் கண் பார்வையில்லாதவர்களின் குறையைப் போக்க, அவர்கள் படிப்பதற்கு எழுத்துகளைக் கண்டுபிடித்துக் கொடுத்ததும், காது கேட்காத தாமஸ் ஆல்வா எடிசன், பிறர் கேட்டு மகிழ கிராமபோனைக் கண்டுபிடித்ததும் எல்லாமே, பின்னடைவுகளால் துவண்டு போகாதவர்களின் சரித்திர வாழ்க்கை.

தடைகள், சறுக்கல்கள் மற்றும் தோல்விகளை ஒழிக்கும் மருந்து, "பயிற்சி, முயற்சி, பொறுமை' என்கிற மூன்று ரசாயனக் கலவைகளால் ஆனது என்கிற மையக்கருத்து பொன்னெழுத்துக்களால் இன்றும் மிளிர்கிறது. அன்றாட வேலைகளை ஆசையோடு செய்து, அதுவே வெற்றியின் ஒரு வரி ரகசியம் என்பதைப் புரிந்து, பொறுமையாகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்வோம். தோல்வியும், பின்னடைவும் விலகி நிற்கும்; வெற்றி ஒளிந்திருக்கும் என்கிற சூட்சுமத்தை புரிந்துகொள்வோம்.

வீட்டில் சமையலுக்கு அடுப்பைப் பற்றவைக்கும் ஒருவன், அதையே அடுத்த வீட்டில் வேறொருவன் செய்கின்றபோது, ""ஐயையோ... அந்த வீட்டில் தீப்பிடித்து எரிகிறது' என்று அலறுகிற உலகமிது. இந்நிலையில் அடுத்தவரின்
தற்காலிகத் தோல்வி, பின்னடைவுகளை நிரந்தர வீழ்ச்சியைப் போல சித்திரிக்கின்ற, பீதியை உண்டுபண்ணுகிற மனநிலையில் இருந்து நாம் விலகி நிற்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.