வீட்டிலிருந்து வேலை...தரவுகளைப் பாதுகாப்போம்!
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் கட்டுப்பாடுடன் இயங்கி வருகின்றன.
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் கட்டுப்பாடுடன் இயங்கி வருகின்றன.
மென்பொருள் துறையைப் பொறுத்தவரை பல நிறுவனங்கள் கரோனா வைரஸ் தொற்று காலத்திற்கு முன்பே வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான (Work at home) அனுமதியை வழங்கி வருகின்றன. சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையைப் பணியாளர்களுக்கு இதுவரை வழங்கியதில்லை.
ஆனால் தற்போது கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமன்றி, பல்வேறு துறைசார்ந்த நிறுவனங்களும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் அனுமதியை தங்களின் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளன.
இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் இணைய வழியில் தரவுகளையும் தகவல்களையும் அனுப்ப வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். இதனால் தரவுகளும் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கின்றனவா? என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டு வருகிறது.
தரவுகளை பாதுகாப்பாகக் கையாள்வது எப்படி என்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ: இணையவழித் திருடர்களிடமிருந்து நமது தரவுகளைப் பாதுகாக்க நமது பாதுகாப்பு நடைமுறைகளைப் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உதாரணமாக சாதாரண கடவுச் சொற்களைத் தவிர்த்து ஸ்ட்ராங்கான கடவுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், கடவுச் சொற்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றம் செய்வதையும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் கணினியிலும், லேப்டாப்பிலும், கைபேசியிலும் கடவுச் சொல் குறித்த குறிப்புகளை மற்றவர்களுக்குப் புரியும் வண்ணம் எழுதி வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக விஐபி ஒருவர் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வரும்போது அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அதுபோல் இன்றைய காலச் சூழ்நிலையில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளில் இருந்து நிறுவனத்தின் பணிகள் இணையத்தின் மூலம் நடைபெற்று வரும் சூழலில், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் வலைதளப் பகுதிக்குள் நுழைவதற்கு பல அடுக்குப் பாதுகாப்பை அமைப்பது நல்லது.
குறிப்பிட்ட நிறுவனத்தின் இணைய பக்கத்தில் அதிகாரம் பெற்றவர் மட்டுமே நுழைய முடியும் என்ற நிலை இருந்தாலும், அந்த அதிகாரம் பெற்றவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கடவுச் சொற்களைப் பயன்படுத்தியே நிறுவனத்தின் இணைய பக்கத்தில் நுழைய அனுமதிக்க வேண்டும்.
அதையும் தாண்டி, குறிப்பிட்ட கைபேசி எண்ணுக்கு வெரிபிகேஷன் கோட் (இரண்டு அடுக்கு சரிபார்ப்பு) அதாவது ஓடிபி கிடைத்து அதை உள்ளீடு செய்தால் மட்டுமே நிறுவனத்தின் இணைய வெளியில் நுழைய முடியும் என்ற கட்டுப்பாட்டையும் விதிக்கலாம்.
கடவுச் சொற்களை இணைய வெளித் திருடர்கள் திருடி பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், அதைத் தவிர்ப்பதற்கு விரல்ரேகையைப் பதிவு செய்வதன் மூலம் நிறுவனத்தின் இணையதளங்களில் நுழைய அனுமதி அளிக்கலாம். இதுபோல் ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகளின் மூலமே நிறுவனங்களின் இணைய தளங்களுக்குள் நுழையும் வகையில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பலப்படுத்தி விட்டால் இணைய திருடர்களால் எளிதில் உங்கள் தரவுகளைத் திருட முடியாது.
இந்த பாதுகாப்பு நடைமுறைகளையும் தாண்டி இணைய வழித் திருடர்கள் யாரேனும் நிறுவனத்தின் தளத்திற்கு நுழைந்தால், இரண்டு அடுக்கு பாதுகாப்பு வசதி இருக்கும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவருக்கு எச்சரிக்கை செய்தியை அளிக்கும் ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.
தற்போது இணைய திருடர்கள் புத்திசாலித்தனமாக கரோனா நோய்தொற்று குறித்த தகவல்களை உள்ளடக்கிய லிங்குகள் மூலம் தரவுகளைத் திருடுவதற்காக முயற்சி எடுத்து வருகின்றனர். கடந்த மாதம் வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதுபோன்ற லிங்குகள் இணைய வெளியில் உலா வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, இதுபோன்ற இணைப்புகளைக் கிளிக் செய்வதற்கு முன்னால் பலமுறை யோசித்துச் செயல்பட வேண்டும். அப்படிச் செய்தால் நிறுவனங்களின் தரவுகளும், தகவல்களும் பாதுகாக்கப்படும் என்பதுடன் நம் பணி மீது நிறுவனத்திற்கு மரியாதையும் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் அமர்ந்து அலுவலகம் வழங்கும் கணினி மூலம் நாம் பணியாற்றும்போது மிகச்சிறந்த ஸ்ட்ராங்கான செக்யூரிட்டி சிஸ்டம் அதில் இருக்கும். அதேசமயத்தில் அலுவலகம் வழங்கிய லேப்டாப்பை கொண்டோ அல்லது நமது சொந்த கணினியைப் பயன்படுத்தியோ, வீட்டில் இருந்து பணி செய்யும் போது அதற்கான இணைய இணைப்புகள் பெறுவதற்காக நாம் பயன்படுத்தும் Wi-Fi கூட சிரமங்களைத் தரக்கூடும். ஏனென்றால் Wi-Fi இணைப்பிற்கான கடவுச் சொல் கூட கடினமானதாக இல்லாமல் கூட போய் விடலாம். எனவே அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க அங்கும் நெட்வொர்க் பிரைவேட் வழங்கக் கூடிய ஸ்ட்ராங்கான செக்யூரிட்டி சிஸ்டத்தைப் பயன்படுத்துவது நலன் பயக்கும்.
சில தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் இலவசமாகச் சேவைகளை வழங்க இப்போது முன் வருகின்றன. அதனை இச்சூழலில் தவிர்ப்பது, தரவுகளைப் பாதுகாப்பதற்கு வழிவகுக்கும்.