இளைஞர்மணி

முயற்சி என்கிற ஆயுதம்!

DIN

ஆள்குறைப்பு என்பது பல நிறுவனங்களில் தொடர்ந்து இருந்து வரும் நிரந்தரப் பிரச்னையாகி விட்டது. ஆள்குறைப்பின் காரணமாக வேலையை விட்டு நீக்கப்படுபவர்கள் படும் துயரம் அளவிட முடியாது.
அந்த துயரத்தால், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு நிற்பவர்கள் பலருண்டு. 
ஆனால், இது போன்ற ஆள் குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஒருவர், அது குறித்து கவலைப்படாமல், சுயமாக உழைத்து, புதிதாக நிறுவனம் ஒன்றை உருவாக்கி சாதித்துக் காட்டியுள்ளார். ஆசிய அமெரிக்கரான டிம்சென்தான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரர். 
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டிம் சென், அமெரிக்காவின் நிதித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பல்வேறு பெரிய நிறுவனங்களில் அவர் நிதி விஷயங்களை நிர்வகிக்கும் பணியிலும் இருந்தார். ஆனால் 2008- ஆம் ஆண்டு நிதித்துறையில் பிரச்னை உருவாகி பொருளாதார தேக்கநிலை உருவான போது, அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். 
வேலையை இழந்து அடுத்து என்ன செய்வது எனற சிந்தனையுடன் இருந்தவருக்கு, புதிய எண்ணத்தை உருவாக்கியது அவரது சகோதரி கேட்ட ஒரு விஷயம்தான். ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த அவரது சகோதரி, குறைந்த வெளிநாட்டு பரிவர்த்தனைக் கட்டணம் கொண்ட கிரெடிட் கார்டு குறித்து தெரிவிக்குமாறு டிம்சென்னிடம் கேட்டதே அவரின் புதிய நிறுவனத்தைத் தொடங்குவதற்கான புள்ளியாக மாறியது. சகோதரிக்கு சரியான கிரடிட் கார்டை தேர்ந்தெடுத்து சொல்வதற்காக இணையத்தில் அவர் தனது தேடலைத் தொடர்ந்தார். 
ஆனால் கிரெடிட் கார்டு விவரங்களைத் தேடிப்பார்த்த போது தான் தனக்கு ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது என கூறும் சென், "இணையத்தில் உள்ள தகவல்கள் விற்பனை நோக்கிலும், விளம்பர நோக்கிலும் மட்டுமே இருந்தன'' என்கிறார்.
இதையடுத்து, வங்கி மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அளிக்கும் பல்வேறு சேவைகளில் இருந்து தகவல்களைச் சேகரித்து, அவற்றை பல வகைகளில் ஒப்பிட்டு பார்க்கக் கூடிய வகையில் புதிய மென்பொருளை உருவாக்கி சகோதரிக்கு அனுப்பி வைத்தார். சென் அனுப்பிய மென்பொருள் அவரது சகோதரிக்கு மட்டுமின்றி அவரின் உறவினர்களுக்கும் மிக உதவியாக இருந்ததாக சகோதரி தெரிவித்துள்ளார். 
அப்போது தான், சென்னுக்கு இதையே ஓர் இணைய சேவையாக வழங்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. கைவசம் இருந்த 800 டாலர் தொகையைக் கொண்டு "நெர்ட் வாலெட்' (Nerd Wallet) என்ற இணையதளத்தை உருவாக்கினார் சென். இந்த இணையதளத்தை தனது வீட்டில் இருந்தே தொடங்கினார். தொழில்முறை பத்திரிகையாளர்களைக் கொண்டு கட்டுரைகள் எழுத வைத்தார். அடுத்த சில மாதங்களில் இந்தத் தளத்திற்கு ஓரளவு வரவேற்பு இருந்தாலும், அவர் மணிக்கணக்கில் உழைக்க வேண்டியிருந்தது. 
படிப்படியாக அவரது இணையதளத்திற்கான பார்வையாளர்கள் மற்றும் வருவாய் இரண்டுமே அதிகரித்தது. 2010 - ஆம் ஆண்டில் வருவாய் மூன்று மடங்காக உயர்ந்தது. அடுத்த சில ஆண்டுகளில் அவரது நிறுவனத்திற்கு 105 மில்லியன் டாலர் நிதி கிடைத்தது. இன்று "நெர்ட் வாலெட்' நிறுவனம் 500 மில்லியன் டாலர் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த தளம், CREDIT CARDS ,BANKING, 
INVESTING, MORTGAGES, LOANS, INSURANCE, MONEY (கிரெடிட் கார்டு, வீட்டுக்கடன், வாகனக் கடன்) போன்ற சேவைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி தருவதுடன், தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்து அவற்றில் சரியானதைத் தேர்வு செய்யவும் வழிவகுக்கிறது'' என்கிறார் சென். 
வெளிப்படையான தன்மையுடன் நிதிச்சேவைகளை தேர்வு செய்யப் பரிந்துரைக்கும் அதன் சேவை, வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. 
"வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடனான கூட்டு மூலம் நிறுவனத்திற்கு வருவாயும் கிடைத்து வருகிறது'' என்கிறார் சென்.
-வி.குமாரமுருகன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT