ஐஏஎஸ் தேர்வு... தோல்வி எப்போதும் வலிக்கும்!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் கடினமான செயல்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் கடினமான செயல். பல ஆண்டுகள் முயற்சி செய்தும் தோல்வியைத் தொடர்ந்து தழுவிக் கொண்டிருப்பவர்களே அதிகம். எப்படியும் ஐஏஎஸ் ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்து 9 ஆண்டுகள் தேர்வு எழுதி, பலமுறை தோல்வியடைந்து இந்த ஆண்டு வெற்றி பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலநாகேந்திரன்.
அவர் யுபிஎஸ்சி தேர்வின் தேர்ச்சிப் பட்டியலில் 659ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறார். பாலநாகேந்திரன் பிறவியிலேயே பார்வையற்றவர். அவருடைய ஐஏஎஸ் தேர்வுப் பயண அனுபவங்களின் அடிப்படையில் ஐஏஎஸ் தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று புதிதாக முயற்சி செய்பவர்களுக்கு வழிகாட்டுகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
""எனக்கு சிறுவயதில் இருந்தே கணிதம், பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரமும் கணிதமும் அவசியம். சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படித்தேன். அதற்குப் பிறகு டிப்ளமோ இன் ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்ற பட்டயப் படிப்பு படித்தேன். அக்குபஞ்சர் மருத்துவத்திலும் கூட பட்டயப் படிப்பு முடித்திருக்கிறேன். என்றாலும் எனது ஆர்வம் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதில்தான் இருந்தது.
சிறுவயதில் என் அப்பாவுடன் பல இடங்களுக்குச் சென்று இருக்கிறேன். இளம் வயதில் படிக்க முடியாமல், வறுமையில் வாடி வேலை செய்து பிழைக்கக் கூடிய பலரின் நிலையைக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
இதில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் ஐஏஎஸ் அதிகாரியாகி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால் பி.காம் படித்த பிறகு, வேறு வேலைக்குச் செல்லாமல் ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி மேற்கொண்டேன்.
நான் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றதனால், ஐஏஎஸ் தேர்வு எழுதும்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லாக் கேள்விகளையும் புரிந்து கொண்டு பதில் அளிக்க இயலவில்லை. இதனாலேயே நான்கு முறை ஐஏஎஸ் தேர்வில் தோல்வி அடைந்தேன். ஆங்கில மொழியில் திறன் பெறுவதன் அவசியத்தை உணர்ந்தேன்.
"இப்படிப் படி... இப்படி பயிற்சி செய்' என்று வழிகாட்ட என் வீட்டில் படித்தவர்கள் யாருமில்லை. எல்லாவற்றையும் நானாகவே கற்றுக் கொள்ளும்படி இருந்தது. அதற்குப் பிறகு ஆங்கில மொழியில் திறன் பெறுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். அதற்கே மூன்று, நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. அப்போது எழுதிய ஐஏஎஸ் தேர்வுகளிலும் தோல்வியைத் தழுவினேன்.
தேர்வு நடைபெறும் மூன்று மணி நேரத்துக்குள் உரிய விடைகளை சரியாக அளிப்பது எப்படி என்பது தெரியாமல் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்து கொண்டே இருந்தேன். இருந்தாலும் என் முயற்சியை மட்டும் விட்டுவிடவில்லை.
ஏதேனும் நல்ல பயிற்சி தரும் கல்விநிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றால்தான் வெற்றி பெற முடியும் என்று என்னுடைய நண்பர்கள் சொன்னார்கள். எதில் சேர்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தபோது சென்னை அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடெமி பற்றித் தெரிய வந்தது. அங்கு பயிற்சிக்காகச் சேர்ந்தேன். அதை நடத்தும் பூமிநாதனின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. பயிற்சிக்காகச் சேர்ந்த என்னை ஜெனரல் ஸ்டடீஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் தொடர்பாக வகுப்புகள் எடுக்கச் சொன்னார். பிறருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால் தெளிவாக அதைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். பிறருக்கு வகுப்பு எடுக்க நான் மேற்கொண்ட முயற்சிகள், எனக்கு ஐஏஎஸ் தேர்வு எழுத மிகவும் உதவின.
மூன்று மணிநேரத்துக்குள் எல்லாக் கேள்விகளுக்கும் உரிய விடையை எழுதும் பயிற்சியை விடாமல் செய்து வந்தேன். இதற்கு முன்பு ஐஏஎஸ் தேர்வு எழுதி தமிழக அளவில் முதலிடம் பெற்ற ரிஷப் என்பவரின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. எப்படி பதில்களை எழுத வேண்டும் என்று எனக்கு அவர் சொல்லித் தந்தார். அகாடெமியிலும் எனக்கு நிறையப் பயிற்சிகள் கொடுத்தார்கள். இறுதியில் இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறேன்.
இந்த வெற்றியை அடைய நான் மேற்கொண்ட பயிற்சிகளைப் பற்றிச் சொல்வது புதிதாக ஐஏஎஸ் தேர்வு எழுத முயற்சி செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் தினம்தோறும் தமிழ், ஆங்கில மொழிகளில் வரும் எல்லாச் செய்தி
களையும் படித்துவிடுவேன். அதுபோன்று அரசுத் துறைகளின் இணைய
தளங்களில் வெளியாகும் எல்லாத் தகவல்களையும் தினம்தோறும் ஒரு தடவை பார்த்துவிடுவேன். அரசுத் தரப்பிலான செய்திகளைத் தெரிந்து கொள்ள அகில இந்திய வானொலியைத் தவறாமல் கேட்பேன். என்சிஇஆர்டி வெளியிட்ட புத்தகங்கள், யுபிஎஸ்சி தேர்வுக்கென வெளியிடப்பட்ட புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்தேன். அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டே இருப்பேன்.
தமிழில் வெளிவரும் செய்தித் தாள்களின் தலையங்கங்களைப் படித்து, அது தொடர்பான செய்திகளைத் தெரிந்து கொள்வேன். ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பது ஒருவிதத்தில் நமது பொது அறிவை வளர்க்கும்; இன்னொருபுறத்தில் நமது ஆங்கில அறிவையும் வளர்க்கும். இது ஐஏஎஸ் தேர்வு எழுத உதவியாக இருக்கும்.
எவ்வளவுதான் ஐஏஎஸ் தேர்வுக்காகப் படித்தாலும், தெரிந்து கொண்டாலும், தேர்வு நடக்கும் 3 மணி நேரத்தில் உரிய முறையில் அவற்றை வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அறிவு, நேர மேலாண்மை, சுயசிந்தனை இந்த மூன்றும் தேர்வு எழுதுபவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும். மூன்று மணி நேரத்துக்குள் வெற்றிகரமாகத் தேர்வு எழுத பலமுறை பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்கள், வெற்றுப் பொழுதுபோக்குகளில் ஈடுபடக் கூடாது. ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கான படிப்பு தொடர்பான துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் அதுவே பொழுதுபோக்காகிவிடும்.
தோல்வி எப்போதும் வலிக்கும்.
ஒவ்வொருமுறை தோல்வியடையும்போது மனம் கஷ்டப்படும். நம் வயதை உடைய நண்பர்கள் வேறு வேலைகளுக்குச் சென்று கல்யாணமாகி, குழந்தை குட்டிகளுடன் செட்டிலாகி இருக்கும்போது நாம் தேர்வு எழுதிக் கொண்டே இருந்தால்... பிறர் நம்மை மதிக்கமாட்டார்கள்; நமக்கே நம்மைப் பற்றி வருத்தம் ஏற்படும்.
இவற்றையெல்லாம் தாண்டி, நான் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியராகி சாதாரண மக்களுக்குத் தொண்டு செய்வேன் என்று தேர்வு எழுதும் ஒவ்வொருவரும் நினைத்துச் செயல்பட்டால், வெற்றி உறுதி.