நினைவாற்றல் மேம்பட ...
இந்தக் கால இளைஞர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்பட முக்கியக் காரணம் கைபேசி.
இந்தக் கால இளைஞர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்பட முக்கியக் காரணம் கைபேசி. விடிந்ததிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை அதிலேயே மூழ்கியிருப்பதால் எதுவுமே பதிவதில்லை. என்ன ஆகிறது இதனால்? மனைவியோ, தாயாரோ ஏதாவது பொருள் வாங்கி வரச் சொன்னால் மறந்து விடுகிறது. சிற்சில சமயங்களில் இந்த மறதி அற்பப் பூசல் முளைக்கவும் காரணமாகிறது.இத்தகைய நிலைமையைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
வெளியே கிளம்பும்போது, சின்ன குறிப்புப் புத்தகத்தை வைத்துக் கொள்ளுங்கள். மருந்து, காய்கறி, பூ, பழம் என்று வேண்டியவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள். ஆலந்துறையில் 1995- இல் ஒரு விவசாய அதிகாரி கிளைக்கு வந்தவுடன் தன் குறிப்பு புத்தகத்தைக் கண்ணோட்டம்விடுவார். "கடன் படிவங்கள் எழுதுவது' "கோட்ட அதிகாரியின் அனுமதி' "டிராக்டர் ஆய்வு' என்று பல இருக்கும். அவருக்கே மட்டும் புரிந்த எழுத்தில்.
பள்ளி மாணவனாக இருந்த போது, கல்கண்டு தமிழ்வாணன் யோசனையைப் படித்தது இப்போதும் நினைவிருக்கிறது. "பாடங்களின் முக்கிய அம்சங்களை பரீட்சைக்கு முந்தின இரவும், காலை எழுந்திருக்கும் போதும் சொல்லிப் பாருங்கள்' அந்த உத்தியை இளைஞர்கள் இப்போதும் பயன்படுத்தலாம். ஆபீஸ் புராஜக்டில் மிச்சமுள்ள வேலை, பிற அத்தியாவசிய குடும்பத் தேவைகள்... இவற்றை எழுந்திருந்த உடன் நினைவு கூர்வது உசிதம்.
ஏதாவது ஒரு முக்கிய பழைய நிகழ்வுடன் தொடர்புப்படுத்தி சிலவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். "ரஹ்மான் இசை அமைத்த "ரோஜா' படம் வந்த போதுதான் பிளஸ் டூ முடித்தான்', "ராஜிவ் காந்தி மரணத்தன்றுதானே பிறந்தான்! ரொம்ப கஷ்டப்பட்டோமே' என்று சில விஷயங்களை இணைத்து மூளையைக் கசக்கிக் கொள்ளலாம்.
பெயர்களையும், இடங்களையும் மறக்காமலிப்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட். இதற்காக யோசனை ஒன்றை எதிலோ படித்த ஞாபகம். புதிதாக யாராவது ஒருவர் அறிமுகமானால், ""நீங்கள் சொல்வது சரிதான் மிஸ்டர் சுந்தர்'', ""அதில் என்ன பிராப்ளம் என்றால், சுந்தர்'' என்று பெயரை திருப்பித் திருப்பி சொல்ல வேண்டுமாம்.
மனத்தைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். தினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்துதான் வேலை செய்வதென்று முடிவு செய்து கொள்ளுங்கள். மனசுக்கு உற்சாக மூட்டக் கூடிய நிறம் சிவப்பு, மேஜை மீது சிவப்புப் பேனா, சிவப்பு கிளிப்பு, சிவப்பு அச்சில் கடவுள் படம் ஆகியவற்றை வைத்துக் கொள்ளுங்கள். அரைமணி நேரம் தினசரியைப் படிக்க நினைத்தால் கால் மணி நேரம் படியுங்கள். ஓர் ஐந்து நிமிடம் படித்ததைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.
"ரா.கி. ரங்கராஜன் கட்டுரையிலிருந்து'
சில சொற்பொழிவாளர்கள், தாங்கள் கூற வருகிற முக்கிய "பாயிண்ட்' - ஐ வலியுறுத்த "பிளாஷ்பேக்' உத்தியைக் கையாளுவார்கள். (கச்சேரிகளில் பாடகர்கள்; கல்யாணச் சடங்குகளில் புரோகிதர்கள்) அது போல சில நிகழ்வுகளை உடன் ஞாபகம் வராத போது, பின்னோக்கிச் செல்லும் டெக்னிக்கைப் பயன்படுத்துங்கள்.
""2015- இல் மழை, ஆபீசிலேயே தங்கினேன்'' , ""2013- இல்தான் இந்த வேலை'' என்று யோசனை பண்ணினால் மறந்தவை ஞாபகத்துக்கு வந்துவிடும்.
இன்றைய மருத்துவ உலகில் நிபுணர்கள் சில நோய்களுக்கு, மாத்திரைகளுடன் சில பயிற்சிகளையும் பரிந்துரை செய்கிறார்கள். இதய நோயாளிகளுக்கும், நீரிழிவுகாரர்களுக்கும் நடைப் பயிற்சி. ஆர்த்தோ சிக்கலுக்கு பிசியோதெரப்பி, உடல் பருமனுக்கு "ஜிம்' இதுபோல.
ஞாபக சக்தியையும் பயிற்சியினால் வளர்த்துக் கொள்ளலாம். முகநூல், டி.வி. இவற்றில் நாட்டமுண்டா? முகநூலில் படித்த சில செய்திகள், டிவியில் காண்பித்த விளம்பரங்கள் இவற்றை நினைவுக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.
எதில் உங்களுக்கு தீவிர ஆர்வமுள்ளதோ அதை மறக்கவே மாட்டீர்கள் என்றே சொல்லலாம். இத்தகைய ஆர்வத்தைச் செயற்கையாகவாவது, கடைப்பிடியுங்கள்.
ஒன்று உறுதி: நல்ல ஞாபக சக்தி, வாழ்க்கையில் எல்லா பருவங்களிலும் தேவை. வெற்றிக்கு அது மிகவும் உறுதுணையாக இருக்குமென்று நிச்சயமாகச் சொல்லலாம்!
- வாதூலன்