ஆன்லைனில் பொறியியல் கல்வி!
கரோனா தொற்றால் கொண்டு வரப்பட்ட பொது முடக்கம் பலரை முடக்கிவிடவில்லை. வேலைக்கோ, கல்லூரிக்கோ போக முடியாத பலர் இணையத்தில் பல சேனல்களைத் தொடங்கி இருக்கின்றனர்.
கரோனா தொற்றால் கொண்டு வரப்பட்ட பொது முடக்கம் பலரை முடக்கிவிடவில்லை. வேலைக்கோ, கல்லூரிக்கோ போக முடியாத பலர் இணையத்தில் பல சேனல்களைத் தொடங்கி இருக்கின்றனர்.
ஏகப்பட்ட சமையல் கற்றுத் தரும் வலைதளங்கள் வந்துவிட்டன.
ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துள்ள திறமைகள் பொது முடக்க காலத்தில் முளைவிட்டு, துளிர்விட்டு வளரத் தொடங்கிவிட்டன. அப்படி முளைவிட்டு வளர்ந்த ஒன்றுதான் "டியூட்டர்ப்ரோ' என்ற கல்வி வலைதளம்.
கரோனா தொற்று, ஆன்லைன் மூலம் எல்லா மாணவர்களையும் கல்வி கற்கும்படி செய்துவிட்டது. எல்கேஜி முதல் முதுநிலைப் பட்டப்படிப்புகள்
வரை ஆன்லைனில் சொல்லித் தரப்படுகின்றன.
பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கும் இந்த டியூட்டர்ப்ரோ வலைதளத்தை உருவாக்கி
யிருப்பவர் எம்.செந்தில்குமார். சென்னை தாம்பரத்தில் உள்ள பாரத்
பல்கலைக்கழகத்தில் டீன் ஆகப் பணிபுரியும் செந்தில்குமார், ஆட்டோமொபைல் என்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
அவருடைய ஆன்லைன் கல்வி வலைதளம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
""பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும்விதமாக ஆறு விதமான பாடப் பிரிவுகளை எங்களுடைய டியூட்டர்ப்ரோ வலைதளம் கற்றுத் தருகிறது.
ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பைத்தான் புரோகிராம், என்ஜினியரிங் ட்ராயிங்ஸ் ஆகிய ஆறு பாடப் பிரிவுகளே அவை. 2 ,3,4 செமஸ்டர்களுக்கான பாடங்கள் இப்போது சொல்லித் தரப்படுகின்றன. 26 ஆண்டுகளுக்கும் மேலான எனது கற்பிக்கும் அனுபவத்தின் அடிப்படையில் இந்த வலைதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நான் படித்தது மெக்கானிக்கல் என்ஜினியரிங் மற்றும் ஆட்டோமொபைல் என்ஜினியரிங். பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு இது தொடர்பான பாடங்களை நான் வகுப்பு எடுத்துவிடலாம். ஆனால் கம்ப்யூட்டர், ஐடி, இசிஇ பிரிவுகளை யார் வகுப்பு எடுப்பது? எனவே எனக்குத் தெரிந்த பல்வேறு பொறியியல் படிப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டப்படி, ஒரு பாடம் ஐந்து அலகுகளாக (யூனிட்களாக)ப் பிரிக்கப்பட்டிருக்கும்.
ஒரு யூனிட்டுக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஒரு பாடத்துக்கு 5 ஆசிரியர்கள் இருப்பார்கள். அதேபோன்று எங்களுடைய வலைதளத்திலும் ஒரு பாடத்துக்கு ஐந்து ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கிறார்கள்.
இந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது ஒருபுறமிருக்க, அவர்கள் நல்ல தரமான கல்வி கற்பிக்கும் வீடியோக்களை எடுக்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். இதற்காக அவர்களுக்குப் பயிற்சி தர வேண்டும். இதற்காகவே தினம்தோறும் 15 மணி நேரம் ஆசிரியர்களுடன் பலவிதங்களில் தொடர்பு கொண்டு பேச வேண்டியிருந்தது.
ஓர் ஆசிரியர் கரும்பலகையின் முன் நின்று கொண்டு மாணவர்களிடம் பேசி கரும்பலகையில் எழுதி, நேரடியாக வகுப்பு எடுப்பதைப் படம் எடுத்து, அதை ஆன்லைன் கல்வி ஒளிபரப்பாக ஒளிபரப்புவதுதான் தற்போதுள்ள நடைமுறை. நாங்கள் கரும்பலகையில் நேரடியாக எழுதுவதைத் தவிர்த்து, ஸ்கிரீன் கேப்ச்சர் டெக்னாலஜி மூலமாக மாணவர்களுக்குத் தேவையானதை எழுதிக் காண்பித்து இருக்கிறோம்.
ஆசிரியர் நேரடியாக வகுப்பு எடுக்கும்போது மாணவர்கள் பாடங்களில் எழும் சந்தேகங்களை உடனே நேரடியாக ஆசிரியரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். ஆன்லைன் கல்வியில் அது சாத்தியமில்லை. மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள நாங்கள் இரண்டுவிதமான வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறோம். ஒன்று பிடிஎஃப் முறை. இதில் ஆன்லைனில் ஆசிரியர் கற்றுத் தரும் அனைத்துப் பாடங்களும் பிடிஎஃப் வடிவில் இருக்கும். இதை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து, மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றொன்று வீடியோ. இதில் ஆசிரியர்கள் ஆன்லைனில் கற்பித்த வீடியோக்கள் இருக்கின்றன. இந்த வீடியோக்களை தேவைப்படும்போது போட்டுப் பார்த்து மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.
அப்படியும் சந்தேகம் தீரவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது, சாட் பாக்ஸ். இதில் மாணவர்கள் பாடம் தொடர்பான சந்தேகங்களை டைப் செய்தால், அதற்கு அந்தப் பாடப்பிரிவின் ஆசிரியர் அதிகபட்சம் ஒரு நாளைக்குள் உரிய விளக்கத்தை அனுப்பி வைத்துவிடுவார்.
எல்லாவற்றுக்கும் மேலாக பிற ஆன்லைன் கல்விநிறுவனங்கள் வாங்கும் கட்டணத்தை விட பல மடங்கு குறைவாகவே நாங்கள் கட்டணம் வாங்குகிறோம். வசதியில்லாத மாணவர்கள் இதைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே எங்கள் வி ருப்பம்.
பட்டப்படிப்பிற்கான முதலாண்டு சேர்க்கை இன்னும் நடைபெற்று நிறைவு பெறவில்லை. எனவே முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் இன்னும் எங்கள் வலைதளத்துக்குப் பயில வரவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் தொடங்கிய இந்த வலைதளத்தில் பயில இப்போது 900 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருக்கிறார்கள். முதலாண்டு சேர்க்கை முடிந்த பிறகு இது 1 லட்சத்துக்கும் மேலாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது'' என்றார்.