முகப்பு
இளைஞர்மணி

நட்பு மேலாண்மை!

வாழ்க்கைக்கான முக்கிய ஆணிவேர் நண்பர்கள். வாழ்வின் மேன்மைக்கு வழிகாட்டியாகவும் வளர்ச்சி காண்பதற்குத் தூண்டுகோலாகவும் இருப்பவர்கள் நண்பர்களே.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

வாழ்க்கைக்கான முக்கிய ஆணிவேர் நண்பர்கள். வாழ்வின் மேன்மைக்கு வழிகாட்டியாகவும் வளர்ச்சி காண்பதற்குத் தூண்டுகோலாகவும் இருப்பவர்கள் நண்பர்களே. அன்றாட வாழ்க்கையில் குறைந்தபட்சம் 100 நபர்களை யாவது கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அவர்கள் அனைவரும் நண்பர்களாகி விட முடியாது.

மற்றவர்களுடன் சுதந்திரமாகப் பழக முடியாமல் கூச்சமுடையவராக இருப்பது, சமூகத்தில் நம்மைத் தனிமைப்படுத்திவிடும். எனவே, தனித்து வாழாமல் மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக முதலில் நாம் செய்ய வேண்டியது, நம்மைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் அடுத்தவர்களைப் பற்றியும் சிந்திப்பது; சரியான நண்பர்களைக் கண்டுபிடிப்பது.

நண்பர்களுக்கான தகுதி தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்துவிட்ட இக்காலகட்டத்தில் நண்பர்களைத் தெரிவுசெய்தல் சற்று சிரமமாகவே உள்ளது. நண்பர்களிடம் எந்த மாதிரியான தகுதிகள் காணப்பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால் உரிய நண்பர்களை எளிதில் தேர்ந்தெடுத்து விடலாம்.

நமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருக்க வேண்டும். நம்மை ஆழமாகப் புரிந்து கொண்டவர்களாகவும் நண்பர்கள் இருத்தல் அவசியம். நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, வாழ்வின் அடுத்தகட்டத்தை எவ்வாறு நகர்த்த வேண்டும், முக்கிய கட்டங்களில் எவ்வாறு நாம் செயல்பட வேண்டும் என நம் நடத்தையையும் எண்ண ஓட்டங்களையும் சரிப்படுத்துபவராக இருப்பவர் நல்ல நண்பராகத் திகழ்வார்.

நம்முடைய நல்ல குணங்களை அப்படியே ஏற்றுக் கொள்பவராகவும், தவறான பாதையில் எல்லை மீறிச் செல்லும்போது கண்டித்து சரியான பாதையில் வழிநடத்துபவராகவும் நண்பர்கள் இருக்க வேண்டும்.

நம் உரையாடல்கள் மீது அதிக கவனம் செலுத்துபவராக அவர்கள் இருத்தல் நலம். எந்தவொரு விவகாரத்தையும் உரிமையுடனும் சுதந்திரமாகவும் பகிர்ந்து கொள்பவராக நண்பர்கள் திகழ வேண்டும்.

நம்மை ஆதரிப்பவராகவும் வாழ்வில் வளர்ச்சியடையச் செய்பவராகவும் நண்பர்கள் இருக்க வேண்டும்.

பரிசீலனை செய்யுங்கள்:

ஒருவருடைய நட்பினால் நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம், அந்த நட்பு எந்த அளவுக்கு நம் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை முறையாக ஆராய வேண்டும். குறிப்பிட்ட நபருடன் நேரத்தைச் செலவழித்த பிறகு, முன்பிருந்ததை விட மகிழ்ச்சியாக இருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நண்பருடன் பழகும்போது பொய்யாக நடிக்காமல் நமது உண்மையான குணங்களைச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்துகிறோமா என்பதையும் கவனிப்பது அவசியம்.

நண்பருடன் பழகும்போது, பாதுகாப்பான சூழலை நாம் உணர்கிறோமா, நண்பர் நம்மை மரியாதையுடன் நடத்துகிறாரா, அவர் எந்த அளவுக்கு நமது நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார் என்பன போன்ற கேள்விகளை நமக்குள்ளேயே எழுப்பிக் கொள்ள வேண்டும்.

யாரைக் கண்டால் ஒதுங்க வேண்டும்?

நண்பர்கள் நம்மைக் கட்டுப்படுத்துபவர் களாக இருக்கக் கூடாது. நம்மைத் தொடர்ந்து கிண்டல்-கேலி செய்பவர்களாகவும், நமது வாழ்வில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட நண்பர்களுடனான உறவை மேலும் மேலும் தொடராமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.

நல்ல நண்பர்கள் நமது சிந்தனைகளை மதிப்பவர்களாக இருப்பார்கள். நமது எண்ணங்களை மதிக்காதவர்கள் நல்ல நண்பர்களாக எப்போதும் இருக்க முடியாது.

ஒரு காலத்தில் ரசனை, சிந்தனை, விருப்பு வெறுப்புகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ள நண்பர்கள் காலப்போக்கில் அதற்கு நேர் எதிராக மாறிவிடக் கூடிய சூழ்நிலையும் உள்ளது. மாறிவிட்டவர்கள் தொடர்ந்து நமது நண்பர்களாக நீடிக்கத் தகுதியற்றவர்கள். அப்படிப்பட்டவர்களுடனான தொடர்புகளை முற்றிலும் அடியோடு துண்டித்துக் கொள்ளாவிட்டாலும், பழையமுறையில் நட்பைத் தொடர முடியாது என்பதால் விலகிச் செல்வதே மேல்.

நட்பு என்பது இருவழிப்பாதை!

நட்பு என்பது இருவழிப்பாதையில் பயணிப்பது. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு குணநலன்களை நாம் எதிர்பார்க்கிறோமோ அவை நம்மிடமும் இருக்க வேண்டும். நம்முடன் பழகும் நண்பர்களிடம் அத்தகைய பண்புகளை நாமும் வெளிப்படுத்த வேண்டும்.

மற்றவர்களின் அனுபவங்கள், எண்ணங்கள், கருத்துகள் உள்ளிட்டவற்றுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அது நம் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்யும். நாளடைவில் ஆழமான நட்புறவு ஏற்படவும் வழிவகுக்கும்.

நண்பர்களுக்கு இணை அறிதிறன் பேசிகள் அல்ல! தற்போதைய இளைஞர்கள், அறிதிறன்பேசியுடன் அதிக நேரத்தைச் செலவிடுபவர்களாக உள்ளனர். நண்பர்களும், அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதும் அவசியமற்றது என்ற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

ஆனால், நண்பர்களே மகிழ்ச்சிக்கான வித்தாக அமைகிறார்கள். வாழ்க்கையில் நல்ல நண்பர்களை சம்பாதிப்பதே மிகப் பெரிய சொத்தாக இருக்கும். எனவே, அறிதிறன்பேசிகளை சிறிது நேரம் ஓரமாக வைத்துவிட்டு நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அந்த நேரத்தில் வேறு எந்தவித கவனச்சிதறலுக்கும் இடமளிக்கக் கூடாது.

நட்பை வளர்த்துக் கொள்ள நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும், நண்பர்களுக்கிடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும். நல்ல நண்பர்களைத் தெரிவு செய்து வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சி உடையதாக மாற்றுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.