கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பி.டெக் பட்டம் பெற்றவர் மவுரம் மல்லிகார்ஜுன் ரெட்டி. ஹைதராபாத்தில் உள்ள "குளோபல் லீடிங் டெக்னாலஜி என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தில் வேலை செய்தவர். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒரு விருது வழங்கப்பட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் சிறந்த விவசாயிக்கான "ஜெகஜீவன்ராம் அபினவ் கிஸான் புரஸ்கார்' விருதை அவருக்கு வழங்கியது. தெலங்கானா மாநிலத்தில் இந்த விருதைப் பெறும் முதல் விவசாயி அவர். ஏற்கெனவே செய்து கொண்டிருந்த மென்பொறியாளர் பணியை விட்டுவிட்டு வேளாண் தொழிலில் களமிறங்கினார் மவுரம் மல்லிகார்ஜுன் ரெட்டி. இயற்கை விவசாயமுறையில் பல்வேறு வகையான பயிர்களை விவசாயம் செய்ததற்காகவே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 2014 - ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தில் அவர் இறங்கினார். அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் புற்றுநோயால் இறந்ததே அதற்குக் காரணம்.
அவரைப் பார்க்க மல்லிகார்ஜுன் மருத்துவமனைக்குச் சென்றபோது, நாம் உண்ணும்உணவிலும், அருந்தும் பாலிலும் உள்ள உடலுக்குக் கேடு செய்யும் நச்சுப் பொருள்களினால்தான் புற்றுநோய் வருகிறது என்று அங்குள்ள மருத்துவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டார். உறவினர் இறந்த பிறகு அவர் பார்க்க நேர்ந்த இன்னொருமரணம், அவருடைய நண்பர் ஒருவரின் இளம் வயது மகளின் மரணம். இது மல்லிகார்ஜுனின் மனதை உலுக்கிவிட்டது.
""ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற நச்சுப் பொருள்களினால் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களை என் குடும்பத்தினர் சாப்பிடக் கூடாது என்று நினைத்தேன். அதனால் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டேன்'' என்கிறார் மல்லிகார்ஜுன்.
வேளாண்மைத் தொழில் என்பது மல்லிகார் ஜுனுக்குப் புதியதல்ல. அவருடைய தந்தைஏற்கெனவே 13 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். அந்த நிலத்தில் மல்லிகார்ஜுன் இறங்கி நின்றபோது, ஊரில் உள்ளவர்கள், சொந்தக்காரர்கள் எல்லாரும் அவரை இகழ்ச்சியாகப் பார்த்தார்கள். நல்ல வருமானம் வரும் வேலையை விட்டுவிட்டு அவர் நிற்பது அவர்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்திருக்கிறது. அந்த நேரத்தில் அவருக்குத் துணை நின்றவர் எம்பிஏ படித்த அவருடைய மனைவி சந்தியாதான்.
தொடக்கத்தில் மல்லிகார்ஜுன் நெல் பயிரிட்டிருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. அதற்குப் பிறகு பயறு வகைகளைப் பயிர் செய்திருக்கிறார். அதிலும் நல்ல விளைச்சலில்லை. தோல்வி என்றாலும் மனம் தளரவில்லை மல்லிகார்ஜுன். தெலங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயசங்கரைச் சந்தித்து நிறைய அவரிடம் இருந்து தெரிந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு அவர் விவசாயம் செய்யும் முறையே மாறிவிட்டது.
வழக்கமான முறையில் நெல்லைப் பயிரிட்டுவிவசாயம் செய்தால் 6000 கிலோ நெல் விளைய ரூ.50 ஆயிரம் செலவாகும். ஆனால் அதில் பாதிதான் மல்லிகார்ஜுன் செலவு செய்தார். ஓராண்டில் நெல்லைப் பயிர் செய்வதின் மூலமே அவருக்குரூ.1, 13,000 கிடைத்திருக்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் அடையும் அவருடைய இந்த முயற்சியும்இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் விருதைப் பெற ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
நெல்லைப் பயிர் செய்ததுடன் கூட, தட்டாம்பயிறு, இஞ்சி, எள், ஆடாதொடை இலை போன்ற மருத்துவகுணம் உள்ள தாவரங்கள் என எல்லாவற்றையும் அவர் விளைவித்திருக்கிறார். மேலும் ஏழு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி மொத்தம் 20ஏக்கர் நிலத்தில் தற்போது அவர் விவசாயம் செய்து வருகிறார்.
""பிற விவசாயிகள் ஏற்கெனவே செய்து கொண்டிருந்த பழையமுறையிலான விவசாயத்தில் ஓர்ஏக்கருக்கு 42 குவிண்டால் நெல் மட்டுமே விளையும். அதைவிட 10 -12 சதவீதம் அதிகமாக என் நிலத்தில் விளைகிறது. இதற்குக் காரணம் இயற்கைமுறையில் நான் விவசாயம் செய்வதே.
நான் அவர்களைப் போல நெல்லைத் தூவி விதைப்பதில்லை. அல்லது நெற்பயிர்களுக்கான நாற்றுகளை வளர்த்து அவற்றைப் பிடுங்கி நடுவதில்லை. நேரடியாகவே விதைகளை நடுகிறேன். இது நெல்விதைகளின் அளவை 5 மடங்கு குறைக்கிறது. பழைய முறையில் விவசாயம் செய்த ஒருவர் ரூ.25 ஆயிரத்துக்கு விதை நெல் வாங்கினால், இந்த முறையில் ரூ.12 ஆயிரத்துக்கு விதைநெல் வாங்கினால் போதுமானது'' என்கிறார்
மல்லிகார்ஜுன்.
நெல்லை மட்டும் பயிரிடாமல் பருப்பு வகைகள், பயறு வகைகள், எள், மூலிகைத் தாவரங்கள் என பலவிதமாக விளைவிப்பதால், அவற்றை அறுவடை செய்த பிறகு, எஞ்சியுள்ள பயிர்களை நிலத்திலேயே உழுதுவிடுவதால், நிலத்துக்கான உரம் கிடைக்கிறது. சத்துகள் கிடைக்கின்றன.
மல்லிகார்ஜுன் விளைவிக்கும் பல தாவரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் மூலமே நீர் கிடைக்கிறது. இது விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரின் அளவைக் குறைக்கிறது. இதுதவிர, மழைக்காலத்தில் பெய்யும் மழைநீரைச் சேமித்து வைக்க ஒரு குளம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் மல்லிகார்ஜுன். அதில் 600-க்கும் மேற்பட்ட மீன்களை வளர்க்கிறார். மீன்வளர்ப்பு மட்டுமல்ல, செம்மறியாடு, வெள்ளாடு, கோழி ஆகியவற்றையும் வளர்க்கிறார். இவற்றை விற்பதால் வருமானம் கிடைக்கிறது. அதோடு கூட, கால்நடைகள், பறவைகளின்கழிவுகள் இயற்கை உரமாக நிலத்துக்குப் பயன்படுகின்றன. அவற்றிலிருந்து ஜீவாம்ருத் போன்ற இயற்கை உரங்களையும் அவர் தயார் செய்கிறார்.
""வழக்கமாக விவசாயிகள் ஏதேனும் ஒரு பயிரை மட்டும்தான் விளைவிப்பார்கள். நெல் விவசாயம் செய்பவர்கள் நெல்லை மட்டுமே பயிரிடுவார்கள். கரும்பு விவசாயிகள் கரும்பை மட்டுமே நடுவார்கள். இந்த முறையில் நெல்லை விதைத்ததிலிருந்து அது விளையும் காலம் வரை பண வருவாய்க்காகக் காத்திருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 6 மாத காலம் வரை காத்திருக்க வேண்டும். மேலும் பெரும்பாலானோர் நெல்லை அதிகம் பயிரிட்டிருந்தால், விளையும் காலத்தில் அதிக நெல் சந்தைக்குச் சென்று நெல்லுக்குக் குறைந்த விலையே கிடைக்கும். நான் பலவிதமான பயிர்களை விவசாயம் செய்வதால், ஆண்டு முழுவதும் ஏதேனும் ஒருவகையில் வருமானம் வந்து கொண்டே இருக்கிறது'' என்கிறார் மல்லிகார்ஜுன்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது, தனது விவசாயமுறைகளை பிற விவசாயிகளுக்கும் கற்றுக் கொடுக்கிறார் மல்லிகார்ஜுன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.