கண்டுபிடியுங்கள்... நண்பர்களை!
மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர்கள் நண்பர்கள். நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் அளவுக்கு வல்லமை மிக்கவர்கள் அவர்கள்.
மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர்கள் நண்பர்கள். நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் அளவுக்கு வல்லமை மிக்கவர்கள் அவர்கள். தொழில்நுட்ப வசதிகளும், சமூக வலைதளங்களும் மிகுந்துவிட்ட காலத்தில் நல்ல நண்பர்களை எங்கிருந்து தேர்ந்தெடுப்பது என்பதில் பலருக்கு சிக்கல் நிலவுகிறது.
சில வழிகளைக் கடைப்பிடித்து பல நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும். முதலில் புதிய நபர்களை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அன்றாடம் பல நபர்களைச் சந்திக்கும்போதுதான் அவர்களில் இருந்து நண்பர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
புதிய நபர்களைச் சந்திப்பதும் எளிதானதே. நமக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் அதிகம் என்பதைக் கண்டறிந்துவிட்டால், அந்த விஷயம் சார்ந்த நண்பர்களை எளிதில் கண்டறிய முடியும். உதாரணமாக, சமூக சேவையில் ஈடுபாடு உடையோர், தன்னார்வ தொண்டு அமைப்புகளில் தன்னார்வலர்களாக இணையலாம். அங்கு ஒத்த எண்ணங்கள் கொண்டோரை எளிதில் இனங்கண்டு நண்பர்களாக்கிக் கொள்ள முடியும்.
கல்லூரி, பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் அமைப்பில் இணைந்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
கல்லூரி காலச் சம்பவங்களை நினைவுகூர்வதன் மூலமாகவும் அந்த அமைப்பு முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் நண்பர்கள் பலர் கிடைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
சங்கீதம் உள்ளிட்டவற்றைக் கற்பதற்கான வகுப்புகளில் இணைவதன் வாயிலாக புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நாடகம், இசைக் கச்சேரிகள், புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள், கோயில் வழிபாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நம் மனதுக்கு நெருங்கிய நண்பர்களைக் கண்டறிய முடியும்.
புதிய நபர்களைச் சந்திக்கும்போது கண்களைப் பார்த்து பேசுவது அவர்களை எளிதில் நண்பர்களாக்கும்.
ஒருசில நபர்களிடம் வெறும் அறிமுகம் மட்டுமே நமக்கு இருக்கும். அவர்களை நெருங்கிய நண்பர்களாக எளிதில் மாற்றிக் கொள்ளமுடியும். நம்முடன் நட்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் முன்வரவில்லை என்றாலும், அதற்கான முதல் அடியை நாமே எடுத்து வைக்கலாம். அவர்களை உணவகத்துக்கோ திரையரங்குக்கோ அழைத்துச் செல்லலாம். இது நட்புறவை ஏற்படுத்தவும் அதை மேம்படுத்தவும் உதவும்.
அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுடன் நட்பு கொள்ள விரும்பினால், அவர்களுடன் அலுவலகத்துக்கு ஒன்றாக ஒரே வாகனத்தில் பயணிக்கலாம். இடைவேளையின்போது அவர்களுடன் உணவு அருந்தலாம்; தேநீர் அருந்தச் செல்லலாம். பரஸ்பரம் இருவருக்கிடையேயான நெருக்கம் அதிகரித்து நட்புறவு மேலும் வலுப்படும்.
பள்ளி, கல்லூரி நண்பர்களைக் காலப்போக்கில் நாம் இழந்திருப்போம். அவர்களுடன் தொடர்பு இல்லாத சூழல் நிலவும்.
அவர்களையும் மீண்டும் நண்பர்களாக்கிக் கொள்ள முடியும். அதற்கு சமூக வலைதளங்கள் உதவிகரமாக இருக்கும். தற்போதைய சூழலில், இளைஞர்கள் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அவற்றின் வாயிலாக பள்ளி, கல்லூரி நண்பர்களைக் கண்டறிந்து தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அதைத் தொடர்ந்து நீட்டித்துக் கொள்வதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஓய்வில்லாத பணிச்சூழல் காரணமாக, நண்பர்களை அவ்வப்போது சந்திக்க முடியாத நிலைமை ஏற்படலாம். அத்தகைய சூழலில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளையோ நேரத்தையோ நண்பர்களுக்காக ஒதுக்கி வைக்கலாம். அந்நாளிலோ நேரத்திலோ நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதற்கோ, நேரில் சந்திப்பதற்கோ செலவிடலாம்.
நண்பர்களைச் சந்தித்துப் பேசுவதற்கென தனியாக நேரத்தை ஒதுக்க முடியாவிட்டால், கடையில் பொருள்களை வாங்கச் செல்லும்போது நண்பர்களுடன் செல்லலாம். வேறு வேலைகளுக்காக வெளியே செல்கையில்
நண்பர்களையும் அழைத்துக் கொண்டு செல்லலாம். வேலையும் முடிந்த மாதிரி ஆகும்; நண்பர்களைச் சந்தித்த திருப்தியும் உண்டாகும்.
விதிகளை உருவாக்கி அதனடிப்படையில் நட்பை எடுத்துச் செல்ல வேண்டாம். கண்டிப்பான முறையிலும் நண்பர்களிடம் பழக வேண்டாம். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது, நிறைய நபர்களை நண்பர்களாக்கிக் கொள்ள உதவும். நண்பர்களைப் பெருக்கி நட்பைக் கொண்டாடுவோம்.