2019 - ஆம் ஆண்டு தொடங்கிய கரோனா காலம் இன்னும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. பலரது வாழ்க்கையிலும் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள இந்த கரோனா தொற்றால் ஏற்பட்ட நேரடி பாதிப்பு என்பது ஒருபக்கம் இருந்தாலும், தனிமனிதர் ஒவ்வொருவரது பழக்கவழக்கங்களில் கரோனா மறைமுகமாக பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றங்களில் நல்லவையும் உள்ளன. தீயவையும் உள்ளன.
உணவு முறைகளில் மாற்றம், உடல்நலம் குறித்த கவனம், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ள கரோனா, வீட்டில் முடங்கியிருக்கச் செய்து நமக்கே தெரியாமல் சில கெட்ட பழக்கங்களையும் தொற்றச் செய்திருக்கிறது.
உடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்ட பலருக்கும் ஓர் ஆண்டுக்கும் மேலாக வீட்டில் முடங்கி இருந்த காரணத்தால் எதிர்பாராத அளவுக்கு உடல் எடை கூடியிருக்கும். ஒரு சர்வதேச கணக்கெடுப்பின்படி, கரோனா காலத்தில் சராசரி உடல் செயல்பாடு வாரத்திற்கு 108 இலிருந்து 72 நிமிடங்களாக குறைந்துவிட்டது என்றும் உட்கார்ந்திருக்கும் நேரம் 5 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக அதிகரித்துவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுபோல பலரும் நாள் முழுவதும் படுக்கையிலேயே உழன்று கொண்டிருக்கலாம். அளவாக சாப்பிட்டுக் கொண்டிருந்த பலரும் வீட்டில் இருந்த காரணத்தினால் அதிகமாகச் சாப்பிட்டிருக்கலாம்.
கரோனா காலத்தில் ஏற்பட்ட தவறான பழக்க வழக்கங்களை மிக விரைவாக மாற்றி அமைப்பது எப்படி?
மன அழுத்தம்... அதிக உணவு!
கரோனா தொற்றுநோயால் மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் அதிகம். அவர்களில் பலர் மன அழுத்தம் காரணமாக அதிக உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடுகின்றனர். சாப்பிடும்போது சிலருக்குக் கிடைக்கும் மன ஆறுதலே இதற்குக் காரணம். ஆனால் மன அழுத்தம் இருக்கும்போது அதிகமாகச் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகம். எனவே, மன அழுத்தத்தில் இருக்கும்போது அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்தை மாற்ற வேண்டும்.
மன அழுத்தம் அதிகரிக்கும்போது தனிமையில் உங்களுக்குப் பிடித்த இடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மெல்லிய இசை சூழ்ந்துள்ள இடத்தில் யோகாசனப் பயிற்சிகளைச் செய்யுங்கள். ஆரோக்கியமான சிற்றுண்டிகளை மட்டுமே சமையலறையில் வைத்திருங்கள்.
வீட்டிலேயே உடற்பயிற்சி:
உடற்பயிற்சி பல பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் திறந்திருந்தாலும் கரோனா அச்சம் காரணமாக பலரும் உடற்பயிற்சிக்கூடங்களுக்குச் செல்ல தயக்கம் காட்டுவார்கள். அவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்.
இப்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை இருப்பதால் நடக்கும் நேரம் குறைந்துள்ளது. எனவே, வீட்டு மொட்டைமாடியில் காலை அல்லது மாலை குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். அதற்கான நேரத்தை முன்னரே திட்டமிட்டு தினமும் தவறாது செயல்படுத்துங்கள்.
சமூக வலைதளங்கள் காலை எழுந்தவுடன் மொபைல் போன் வழியாக சமூக வலைதளங்களில் புகுவதை அறவே விட்டுவிடுங்கள். அது உங்களை மேலும் சோம்பேறியாக்கும்; உங்கள் மனநலனையும் பாதிக்கும்.
காலை எழுந்தவுடன் ஒரு கப் தேநீர், ஒரு நல்ல புத்தகம், தியானம் ஆகியவற்றுடன் அன்றைய நாளைத் தொடங்கலாம். அன்றாட வேலைகளை முடித்துவிட்ட பின்னர் தொலைபேசியை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்துங்கள்.
நீண்ட நேரம்... படுக்கையில்!
அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருக்கும்போது படுக்கையை விட்டு பலரும் எழுந்திருப்பதில்லை. படுத்துக்கொண்டே வேலை செய்வது, படுத்துக் கொண்டே படம் பார்ப்பது என நாள் முழுக்க படுக்கையிலே பொழுதைக் கழிப்பவர்கள் பலர். இந்தப் பழக்கத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தூங்குவதற்கு மட்டுமே படுக்கையைப் பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் தனிமையில் இருக்காமல் குடும்பத்தினருடன் நேரம் செலவழியுங்கள்.
செய்தி சேனல்கள்:
இன்று செய்தி சேனல்களின் எண்ணிக்கை பெருகியுள்ள நிலையில் அவற்றைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே பலருக்கும் போதையாகிவிட்டது. தொடர்ந்து செய்திகளை பார்ப்பதை தவிர்த்து குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் செய்திகளைப் பார்க்க வேண்டும் என மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டு நடப்பு நிகழ்வுகளை அறிந்து வைத்திருப்பது அவசியம் தான் என்றாலும் தொடர்ச்சியாக செய்தி சேனல்களை பார்ப்பது மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் என்கிறார்கள்.
செயல்பாடு குறித்த அட்டவணை:
ஒருநாள் முழுவதும் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்பதற்கான அட்டவணையைத் தயார் செய்து, அதன்படி செயல்படுங்கள். வீட்டில் இருந்தும் நேரம் இல்லாதது போன்று உணர்பவர்கள் இதைச் செய்யலாம். இது தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.
வேலை... வாழ்க்கை... சமநிலை...
நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது எதிலுமே முழு திருப்தி இல்லாதது போன்று உணரலாம். இதனால் வீட்டில் உங்கள் அறையில் ஓர் அலுவலகச் சூழலை ஏற்படுத்திக்கொள்ளலாம். வேலைக்கும் வீட்டிற்கும் இடையே அந்த சமநிலையை மேம்படுத்துவதே இதற்கு மாற்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.