முகப்பு
இளைஞர்மணி

தொடர் முயற்சி... வெற்றி!

தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கு மளிகைப் பொருள்கள், பனியன், தேயிலை உள்பட பல பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:


தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கு மளிகைப் பொருள்கள், பனியன், தேயிலை உள்பட பல பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கீரையை ஏற்றுமதி செய்வதும் நடைபெறுகிறது என்பது வியப்பான செய்தியாகும். ஆம். கீரையை உலர வைத்து பொடியாக்கி, அதில் சூப்புக்குத் தேவையான பொருள்களைக் கலந்து, தேயிலை பை போல தயாரித்து 15 வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

கோவையைச் சேர்ந்த ஜி.ஸ்ரீராம் பிரசாத் என்ற இளைஞரே இந்த புதுவிதமான ஏற்றுமதித் தொழிலைச் செய்கிறார். அவர் தன்னுடைய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

""நான் ஒரு பொறியியல் பட்டதாரி. படித்து முடித்ததும் நான் வெப் டிசைனிங் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.வேறு ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என எண்ணம் எனக்குள் உருவானது. இதையடுத்து நான் ஆன்லைன் மூலம் மளிகைப் பொருள்கள் விற்பனைத் தொழிலை செய்யத் தொடங்கினேன். போதிய பண வசதி இல்லாததால் அந்த வியாபாரத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டேன்.
கோயம்புத்தூரில் எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் கீரை வகைகளைப் பயிரிட்டேன். குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவான கீரையை விற்பனை செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.
கீரையை இயற்கை முறையில் பயிரிட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருகூரில் உள்ள எனக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில், அங்குள்ள விவசாயிகளின் ஆலோசனைப்படி கீரை பயிரிட்டேன்.
இதற்காக இரண்டு ஆண்டுகள் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி பெற்றேன். பின்னர் 2017- இல் கீரை வணிகத்தைத் தொடங்கினேன். முதல் நாளில் ரூ.100க்கு கீரை விற்பனையானது. நான் மனம் தளரவில்லை. தொடந்து அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்தேன். பின்னர் அதே ஆண்டு சாய்பாபா காலனியில் கீரைக்கு மட்டும் ஒரு ஷோ ரூம் திறந்தோம். இதற்கு என தனி செயலி மற்றும் யூ ட்யூப் சேனல் என பல்வேறு ஏற்பாடுகளுடன் கீரை வணிகத்தைத் தொடர்ந்தேன். அதனால் குறுகிய காலத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இது குறித்து விவரங்கள் தெரிந்துவிட்டன. பல வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் எங்களுக்கும் கீரை வேண்டும் என கூறி வந்தனர்.
ஆனால் கீரை 24 மணிநேரத்தில் வாடிவிடும். எனவே கீரையைக் காய வைத்துப் பொடி செய்து, கீரை சூப் வைக்க தகுந்தபடி அதை மாற்றி அமைத்து அனுப்ப முடிவு செய்தேன். முதலில் கீரையைப் பொடியாக்கி அதில் இஞ்சி, மிளகு, உப்பு, சீரகம் போன்றவற்றைச் சேர்த்து, தேயிலை பை போல சிறு பையில் போட்டு அனுப்பினேன். அதனை வெந்நீரில் போட்டால் கீரை சூப் கிடைக்கும்.
இந்த முறையை கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய கொடுத்தேன். வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனது தயாரிப்பை அங்கீகரித்தது. இந்த கீரை சூப் முற்றிலும் இயற்கையானது. 18 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. முதலில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தமிழர் மூலம் அந்த நாட்டுக்கு கீரைப் பொடியை அனுப்ப முடிவு செய்தோம். அங்குள்ள தமிழர் அந்த நாட்டின் உணவு பொருள் சட்டங்கள் குறித்தும், பேக்கிங் முறைகள் குறித்தும், அந்த நாட்டில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டு ஏங்களுக்கு தகவல் கொடுத்தார்.பின்னர் அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பேக்கிங் மற்றும் அதில் உள்ள வாசகங்களை அச்சிட்டு ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தேன். இது எனது முதல் வெற்றியாகும்.
இதற்கு பொறுமை மிகவும் அவசியம். ஒரே நாளில் எதுவும் நடந்து விடாது. முயற்சிகள் தோற்றாலும் முயற்சிக்காமல் இருக்கக் கூடாது என இதன் மூலம் தெரிந்து கொண்டேன். தொடந்து பல நாடுகளில் தமிழர்களின் மூலம், அந்த நாட்டு சட்டதிட்டங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி கீரைப் பொடியை அனுப்பி வைக்கிறேன். அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களை எனக்குத் தெரிவித்தவர்களையே அந்த நாட்டின் முகவர்களாக நியமித்தேன். அரபு நாடுகளில் லேபிளில் அரபு மொழி அச்சிடப்பட வேண்டும். சிங்கப்பூர் என்றால் மலேயா மொழியில் லேபிள் அச்சிடப்பட வேண்டும். இப்படி ஒவ்வொரு நாட்டின் சட்டங்களைத் தெரிந்து கொண்டு தற்போது 10 வகையான கீரைப் பொடிகளை அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறோம். அனைத்து நாடுகளிலும் பிளாஸ்டிக் தடை உள்ளதால் கெட்டியான காகித அட்டையில் பெட்டி தயாரித்துள்ளோம். பெட்டியை நூல் வைத்து தைப்பதால் பிரச்னை இல்லை.
இலங்கை அரசு எங்களது தயாரிப்பை 4 முறை நிராகரித்தது. பின்னர் அனைத்துக் குறைகளையும் நீக்கி 5 முறையாக அனுப்பியபோது ஏற்றுக் கொண்டது. எனவே தொடர் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
தற்போது கீரைகூட்டு, வாழைப்பூ பொரியல் ஆகியவற்றை உணவு பொருள் பேக்கிங் செய்யும் நவீன முறையில் பேக் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறோம். அதாவது ரெடிமேட் உணவு வகைகள். அதனை சூடாக்கி உண்ண வேண்டும். இதில் தர நிர்ணயம் மிகவும் முக்கியம். இயற்கை விவசாய முறைப்படி கீரையைப் பயிரிட்டு, அந்த கீரையை இயற்கை முறையிலேயே உணவாக்கி மக்களுக்குக் கொடுப்பதால், மக்கள்அதனை விரும்பி வாங்குகிறார்கள். பயிரிடுவது, பொடி தயாரிப்பது, பேக்கிங் செய்வது என தனித்தனியே நிபுணர்கள் உள்ளார்கள்.
ஏற்றுமதி தொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்கள் முதலில் என்ன பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என முடிவு செய்து, அது எந்த நாட்டிற்குத் தேவைப்படுமோ அதற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஏற்றுமதி செய்யப் போகிற அந்த நாட்டின் சட்டதிட்டங்களை நன்றாகத் தெரிந்து கொண்டு, அவர்களின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு பொருள்களை ஏற்றுமதி செய்தால் வெற்றி பெறலாம். ஒவ்வொரு கட்டத்திலும் மிகவும் கவனம் வேண்டும். சவால்களைச் சந்திக்காமல் வெற்றி பெற இயலாது. இளைஞர்கள் பொறுமை, கவனம், திறமை, இலக்கை நோக்கிய பயணம் எனக் கொண்டால் வெற்றி பெறலாம்'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.