"அமெரிக்கா ஹாஸ் டேலண்ட்' என்ற நிகழ்ச்சியில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பலர் தாங்கள் வளர்த்துக் கொண்ட திறமைகளை பார்வையாளர்கள், நடுவர்கள் நிரம்பிய அரங்கில்எல்லாருடைய கரகோஷத்துக்கு இடையில் வெளிப்படுத்துகிறார்கள். சிறுவர், சிறுமியர், இளைஞர்கள்,
ஆண்கள், பெண்கள் ஏன் வயதானவர்களும் அநாயாசமாக பதற்றமின்றி தாங்கள் பயின்றதைச் செய்து காண்பிக்கிறார்கள்.
சிலருக்கு இயல்பாகவே சில திறமைகள் இருக்கின்றன. அதே சமயம் திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ள முடியும். தேவை தொடர் பயிற்சி. எந்த ஒரு கலையையும் 1000 மணி நேரம் லயித்து பயின்றால்ஓரளவு தேர்ச்சி பெறலாம் என்கிறார் ஒரு நிபுணர். நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் செலவிட முடிந்தால் நான்கு மாதங்களில் நமது இலக்கை அடையலாம். இல்லாவிட்டால், நாம் செலவிடும் நேரத்தை பொருத்து இலக்கை அடையலாம். ஆனால் இடைவெளி விடாது தொடர்ச்சியாகப் பயில வேண்டும் என்பது முக்கியம்.
இது ஓரளவு தேர்ச்சி பெற உதவும். ஆனால் அதிக வல்லமை பெற வேண்டும் என்றால் மிகப் பெரிய அர்ப்பணிப்பு தேவை. உலகில் பலர் படைத்த சாதனைகள் இடைவிடாத நம்பிக்கையுடன் கூடிய முயற்சிகளால்தான் சாத்தியமானது.
வில்லியம் ஹோல்மேன் ஹண்ட் என்ற ஆங்கிலேய ஓவியர் வாழ்நாள் சாதனையாக "லைட் ஆப் தி வோர்ல்ட்'- உலகத்தின் வெளிச்சம் - என்ற மகத்தான ஓவியத்தைஉலகத்திற்கு அளித்தார். "தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற சித்தாந்தத்தை விளக்கும்விதமாக யேசு பெருமான்கதவின் முன் நின்று தட்டுவதாக மிக அழகான ஓவியம் 1851-இல் தொடங்கி 1853 - இல் முடித்தார். நாற்பது ஆண்டுகள் உழைப்பின் பலன், தான் படைத்த ஓவியம் என்றார்! எதுவும் சாதாரணமாக வந்துவிடுவதில்லை.
எந்த ஒரு குறிக்கோளின் உச்சத்தை அடையவும் அதற்கென்று ஒரு வழி இருக்கிறது. எவ்வாறுஉச்சத்தை அடைய முடியும் என்பதை "மாஸ்டரி' என்ற புத்தகத்தில் ஆசிரியர் ராபர்ட் க்ரீன் விவரிக்கிறார்.
மன்னர்கள், ராணுவத் தளபதிகள், தலைவர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் என்று பல துறைகளில் உச்சத்தை எட்டியவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து எவ்வாறு அவர்களால் சாதிக்க முடிந்தது என்பதையும் அவர்கள் சிறு வயதிலிருந்தே எடுத்த முயற்சி, சந்தித்த சவால்கள் இவற்றையெல்லாம் பட்டிய
லிட்டு, ஒப்பிட்டு, சீர்தூக்கும் பணியை விரிவாக மேற்கொண்டார். வெற்றி கண்டவர் துறைகள் வெவ்வேறு ஆயினும், அவர்கள் எடுத்த முயற்சியில் ஓர் ஒற்றுமை இருந்தது. சிறு வயதிலிருந்தே தங்களைக் கவர்ந்தது, தங்களுக்கு ஈடுபாடு எதில் உள்ளது என்பதை துல்லியமாகக் கணித்து அதில் முழு கவனம் செலுத்தினர். அதைச் சார்ந்த புத்தகங்களைப் படிப்பது, சிந்தனை செய்வது இதன் மூலம் ஒரு பிரிக்க முடியாத பிணைப்பு ஏற்படுகிறது.
மேனாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன்
பள்ளிப் பருவத்திலேயே யாராவது கேட்டால் தான்
அமெரிக்க ஜனாதிபதியாவேன் என்று சொல்வாராம்!
குறிக்கோள் பற்றியே சிந்தனை; அதற்கான திட்ட
மிடுதல்; ஆளுமையை வளர்த்தல்; வெற்றியை நிலை
நாட்டுதல் என்ற கடுமையான பாதை. அதே சமயம்
பாதையைத் தானே தேர்ந்தெடுத்ததால் பயணம் சோர்வின்றி நல்ல முடிவை அடைய உதவுகிறது.
நெப்போலியன் பிரெஞ்ச் நாட்டுப் படை தளபதி. மிகச் சிறந்த போர் வீரன். எந்த சூழலிலும் வெற்றி வாகை சூடுவதைப் பற்றி யோசித்து தனது படை வீரர்களை வழி நடத்துவதில் கெட்டிக்காரன். சிறு வயதிலிருந்தே போர் வீரர்களின் வீர சாகசங்கள், போர்கள் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருந்தான். உரிய வயதில் இராணுவப் படையில் சேர்ந்தான்.
நெப்போலியன் படை வீரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பயிற்சியின் போது அவனது கவனம் எல்லாம் எவ்வாறு போர் களத்தில் வியூகம் வகுப்பது; எதிரிகளின் வியூகங்களை எவ்வாறு தகர்ப்பது என்பதை பற்றித் தான் இருந்தது. நெப்போலியனின் அசாத்திய திறமையினால் பயிற்சி முடிந்து சில வருடங்களிலேயே அவனுக்கு அதிக பொறுப்பு கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு பொறுப்பையும் திறம்படக் கையாண்டு பிரெஞ்சு இராணுவத்திற்குப் பெருமை சேர்த்தான்.
இராணுவ ஆளுமையில் இரண்டு முக்கியமான கோணங்கள் உண்டு. ஒன்று போர் வியூகங்கள், இரண்டு தளவாடங்களைப் பற்றிய நுண்ணறிவு. போர் நிபுணர்கள் வியூகங்கள் ஒன்றையே கவனிப்பார்கள். ஆனால் படைத் தளபதி, தளவாடங்கள் முறையே காலாட்படை வீரர்கள், அவர்களின் தேவைகள், போர் அணிகலன்கள், படை வீரர்களுக்குத் தேவையான உணவு இவற்றைப் பற்றி அதிக கவனம் செலுத்துவார். நெப்போலியனுக்கு இந்த நுண்ணறிவு இருந்தது. ஒரு போர்க்களத்தைப் பார்த்தவுடன் அதைக் கணித்து வெற்றிக்கு வழிவகுக்கக் கூடிய அசாத்திய திறமை இருந்தது. சக அதிகாரிகள் நெப்போலியனுக்கு தெய்வீக சக்தி உள்ளது என்று நம்பினார்கள். இதுதான் திறமையின் அமானுஷ்ய சக்தி!
"பிறப்பிலேயே எல்லாருக்கும் திறமை என்ற விதை விதைக்கப்பட்டிருக்கிறது' என்கிறார் ராபர்ட் க்ரீன். பேசும் திறமை , எழுத்துத் திறமை, ஓவியக் கலையில் ஈடுபாடு, இயந்திரங்களை ஆராயும் திறமை என்று பல வகையில் ஒவ்வொருவருக்கும் திறன்கள் இருக்கும். அவற்றைச் சார்ந்து நம்மை வளர்த்து கொண்டால், வாழ்க்கை ரம்மியமாக இருக்கும்.
உலகில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பலர் ஏழ்மையில் ஆரம்ப வருடங்களைக் கழித்தவர்கள். ஆனால் அவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை அழியாமல் எரிந்து கொண்டிருந்தது. அதுவே அவர்களை உச்சத்திற்கு இட்டுச் சென்றது.
சிலர் வேறு பாதையில் முதலில் சென்றாலும் அவர்கள் ஆழ்மனதில் பதிந்த லட்சியம் வெளிவருகையில் அதில் லயித்து மிகப் பெரிய அளவில் வெற்றி காண்பார்கள். இளம் எழுத்தாளர் சேதன் பகத், ஐஐடி தில்லியில் தொழில்நுட்ப பட்டம் பெற்று, பிரசித்தி பெற்ற அஹமதாபாத் இன்ஸ்டிட்யூட்டில் மேனேஜ்மெண்ட் முதுகலைப் பட்டத்தை முடித்தார். அதன் பிறகு வங்கி நிதி மேலாண்மைப் பணியில் பணமும் நல்ல அனுபவமும் பெற்றார். ஆனால் அவரது நாட்டமெல்லாம் எழுத்துத்துறையில் பெயர் பதிக்க வேண்டும் என்பதுதான். வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர எழுத்துப் பணியில் ஈடுபட்டார். அவரது புத்தகங்கள் அமோக வரவேற்பைப் பெற்றன. ஐந்து புத்தகங்கள் பாலிவுட் படங்களாக வெளி வந்தன.
"த்ரீ இடியட்ஸ்' என்ற படம் அமோக வெற்றி பெற்றது. தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணம் முடித்தார். பகத் பஞ்சாப் மாநிலத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ்ப்பெண், பஞ்சாபி கணவன் என பல வேறுபாடுகள்! தனது வாழ்க்கையை வைத்தே அவர் எழுதிய " டூ ஸ்டேட்ஸ்' என்ற புத்தகம் பிரபலமானது. படமாகவும் வந்தது. பெரிய ஹிட் ஆனது!
இன்னொரு வெற்றி பெற்ற இளம் எழுத்தாளர் அமீஷ் திரிபாதி. சிவ பக்தர். இளம் வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு. காரணம், அவரது பாட்டி இடைவிடாது இதிகாச புராணங்களைக் கூறி நாட்டின் தொன்மையான கலாசாரத்தை ஊட்டி வளர்த்தார். கல்லூரி படிப்பு முடித்து, ஐஐஎம் கல்கத்தாவில் முதுகலைப் பட்டம் பெற்று, முதலீடு செய்யும் வங்கிகளில் பொருளாதார நிபுணராகப் பதினான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார்.
"எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல்' என்பதற்கிணங்க மனது எழுதவேண்டிய எழுத்திலேயே இருந்தது. வசதியான வேலையை ராஜினாமா செய்து முழு நேர எழுத்தாளரானார். " ஷிவா ட்ரைலாஜி' என்ற அவரது முதல் புத்தகம் அதிக விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில் இடம் பெற்றது. இதிகாசம், சரித்திரம் இதன் ஆதாரங்களைத் திரட்டி ஆழ்ந்த ஆரய்ச்சிக்குப் பிறகு புத்தகங்களைப் படைக்கிறார். இவர் புனைந்த சரித்திரக் கதைகளும் திரைப்படமாகின்றன.
நம்முள் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும் நேரத்தில் வாழ்க்கையில் பயன் அடைந்த அனுபவம் ஏற்படும்.
"மாஸ்டர்ஸ்' எனப்படும் சாதனையாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் அவர்களது சிந்தனையில் உள்ளது. சாதனையாளர்கள் தாங்கள் கண்டறிந்த திறமையோடு எப்போதும் ஒன்றி இருக்கிறார்கள். ஆனால் ஏனையோர் தம் திறமையை உணர்ந்தாலும் சக தோழர்கள் கூறுவது, உறவினர் பெற்றோர் எல்லாரும் சொல்லும் பாதையில் பயணிப்போம் என்ற பாதுகாப்பான மார்க்கத்தை தெரிவு செய்ய தூண்டப்படுதல் தடைகளாக உள்ளன என்கிறார் ராபர்ட் க்ரீன்.
மாஸ்டர்ஸ் வழியில் சாதிப்பதற்கு முக்கியமான வழிகள் உள்ளன. நாமே எல்லாவற்றையும் பழக முடியாது. அதற்கு சரியான ஆசான் தேவை. நாமே செய்வதில் பிரச்னை என்னவென்றால் தவறான பாதையில் செல்கிறோம் என்பது தெரிந்து ஒவ்வொரு முறையும் சரி செய்வதில் நேரம் விரயமாகும். கற்பதற்கு அளவே இல்லை; ஒரு வாழ்நாள் போதாது.
கற்றதை தக்க வைத்துக் கொள்ள தொடர் பயிற்சி தேவை. எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றி பெற முழுமையாக அதில் சரண் அடைய வேண்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் மனதில் உறுதி வேண்டும் என்பது பாரதியார் வாக்கு. ஜாக் நிகல்சன் என்ற விளையாட்டு வீரர் சர்வதேச போட்டிகளில் வெற்றியை நிர்ணயிப்பது மன உறுதி, "மைண்ட் கேம்'என்ற கருத்தை 1970 -களில் பதிய வைத்தார். வெற்றிப் பாதையை மனதில் இருத்தி, இறுதிக் கட்டத்தில் வெற்றிக் கனியைப் பறிக்க தெளிவாக மனதில் திட்டமிடுதல், வெற்றியை உறுதி செய்கிறது என்கிறார் நிகல்சன்.
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், இளமைப் பருவம் சோகத்தில் நிறைந்தது. பெற்றோருக்கு ஐந்தாவது பிள்ளை. தந்தையை சிறுவயதிலேயே இழந்து, தாய் குழந்தைகளோடு தமையனார் வீட்டில் வறுமையின் விளிம்பில் அண்ணியின் குத்தலான ஏளனமான வசவுகளைத் தாங்கி கஷ்ட ஜீவனத்தின் உச்ச கட்டத்தில் உழன்றார். வேறு வழியின்றி குடும்பம் சென்னை ஏழு கிணறு பகுதியில் குடியேறியது. தாய் வீட்டு வேலை செய்து குழந்தைகளைக் காப்பாற்றினார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு சிறுவன் இராமலிங்கம், தமிழ் இலக்கணம், இலக்கியம் பயின்றார். அந்த காலத்தில் ஆன்மீகச் சொற்பொழிவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அண்ணன் சபாபதி பல இடங்களில் சொற்பொழிவு ஆற்றி பொருள் ஈட்டி வந்தார்.
அவரோடு அடிகளாரும் செல்வார். ஒருமுறை உடம்பு சொளகரியம் இல்லாதலால் அண்ணன் நிகழ்ச்சிக்கு செல்ல இயலவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த செட்டியார் வேறு வழியின்றி தம்பி இராமலிங்கத்தை மேடையேற்றி ஏதோ இரண்டு வார்த்தை கூட்டத்தை ஆசுவாசப் படுத்த பேசட்டும் என்று பணித்தார்.
பதினொன்றே வயது நிரம்பிய சிறுவன் இராமலிங்கம் திருஞான சம்பந்தர் வடிவாக ஆறு மணி நேரம் தேவாரப் பாடல்களோடு அபாரமான சொற்பொழிவு ஆற்றினார். கூட்டம் எங்கும் நகராமல் ஆழ்ந்து கேட்டது. அடுத்த நாளிலிருந்து செட்டியார், "அண்ணன் வேண்டாம்... தம்பி பேசட்டும்' என்று ஏற்பாடு செய்ததில் வள்ளலார் புகழ்பரவியது. அண்ணன் சபாபதி தம்பியின் தெய்வீக சக்தியை உணர்ந்து வள்ளலார் புகழ் ஓங்க செய்தார். தனது எளிமையான தமிழ் மூலம் ஜாதிகள் அற்ற சமய சன்மார்க்க ஜோதி வழிபாட்டினை தமிழ் சமுதாயத்திற்கு உணர்த்தினார். தமிழ் இலக்கிய பன்னிரு திருமுறைகளில் வள்ளலார் பாடல்கள் ஆறாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
வள்ளலார் தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பாராம். வீட்டு மாடியில் ஒரு நிலைக் கண்ணாடி. அதன் முன் விளக்கு ஏற்றி ஜோதி வழிபாட்டில் ஈடுபடுவார். கண்ணாடி பிம்பத்தில் அவர் தெரியமாட்டார்; விளக்கு தெரியாது; ஜோதி ஒன்றுதான் தெரியும். ராபர்ட் க்ரீன் சொன்னது போல, முழு கவனம் தன் உள்ளிருக்கும் சக்தியை வளர்க்கும் மார்க்கத்தில் வள்ளலார் ஈடுபட்டார். ஆன்மீக உலகில் நீங்கா இடம் பெற்றார். அவரது எளிமையான கீழ் வரும் பாடலை இளைஞர்கள் தினமும் படித்து தெளிவு பெற வேண்டும்.
"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வுநான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தக்கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வ மணியே'
சென்ற வாரக் கேள்விக்கு பதில்: உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் தேர்தல் உரிமைகள் பல்லவ சாம்ராஜ்ய பேரரசன் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சியில் உருவாக்கப்பட்டது .
இந்த வாரக் கேள்வி: நெப்போலியன் தொடுத்த கடைசிப் போர் எங்கு, எந்த வருடம் நடந்தது?
(விடை அடுத்த வாரம்)
கட்டுரையாளர்:
மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.