இளைஞர்மணி

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி... இப்போதே பயிற்சி!

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் வெல்வதே குறிக்கோளாக இருந்த நிலையில் 2028-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில்

ஏ. பேட்ரிக்


சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் வெல்வதே குறிக்கோளாக இருந்த நிலையில் 2028-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் பதக்கம் வெல்வதை குறிக்கோளாகக் கொண்டு உதகையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், இதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அனைவரும் பழங்குடியினத்தவராவர்.

கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கும் இந்த முயற்சிகள் கடந்த 2 ஆண்டுகளாக உதகையில் நடைபெற்று வருகின்றன. விளையாட்டுத்துறைக்கும், தடகளத்திற்கும் அவ்வளவாக ஆதரவு கிடைக்குமா,
சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புகள் நமக்கு கிடைக்குமா என்ற கேள்விகளுக்கு உரிய விடையளிக்கிறார் "இந்தியன் டிராக் பவுண்டேசன்' என்ற அமைப்பின் நிறுவனரான கரன் சிங்.

பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் உள்ள திறமைகளை வெளிக்கொணர பல்வேறு துறைகளிலும் பல்வேறு அமைப்புகள் உள்ளன.

ஆனால், தடகளத்தில் இத்தகைய திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென்ற நோக்கத்துடனும், இந்தியாவிற்கு ஒலிம் பிக்கில் தடகளத்தில் ஒரு பதக்கத்தையாவது வென்றாக வேண்டுமென்ற உத்வேகத்துடனும் செயல்பட்டு வருபவர்தான் கரன் சிங்.

தில்லியை சேர்ந்த 35 வயதான இவர், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் போன்ற நீண்ட தூர ஓட்டங்களில் பங்கேற்று வந்த தடகள வீரராவர். தில்லியிலிருந்து பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு சென்ற இவர், சுமார் 6 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்தபோது பல்வேறு விளையாட்டு அமைப்புகளுடன் கொண்டிருந்த தொடர்பின் காரணமாக தடகளத்தில் இந்தியாவும் ஏன் உயர்ந்த நிலைகளை அடையக் கூடாது என எண்ணியதன் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் "இந்தியன் டிராக் கிளப்' என்ற அமைப்பு. அதையடுத்து அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதும் கடந்த 2018- ஆம் ஆண்டில் "இந்தியன் டிராக் பவுண்டேசன்' என்ற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். பின்னர் தனது அமைப்பிற்கான பயிற்சிக்கான இடமாக உதகையைத் தேர்ந்
தெடுத்துள்ளார்.

தற்போது உதகையில் வசித்துவரும் கரன் சிங், கவுகாத்தியில் நடைபெறும் தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக தனது குழுவினருடன் செல்வதற்கு முன்னர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:

""உதகைக்கு வந்த பின்னர் இவ்வமைப்பின் சார்பில் தடகளத்தில் திறமையானவர்களைக் கண்டறியும் முயற்சிகளைத் தொடங்கியபோது தமிழகம்தான் நாட்டிலேயே சிறந்த, அமைதியான வாழ்விடமாகத் தெரிய வந்தது. அதில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மலைப்பகுதி என்பதால் தேவையான பயிற்சிகளை எடுப்பதற்கும் ஏற்ற இடமாக இருந்தது. இதையடுத்து நடைபெற்ற தேடும் முயற்சிகளில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து 10 முதல் 16 வயதிற்குட்பட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பிறவியிலேயே தடகளத்தில் திறமை உள்ளதும், வாய்ப்பில்லாமல் பிரகாசிக்க முடியாமல் உள்ளதும் தெரியவந்தது. இவர்களில் 5 பேர் மகளிராவர். இவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து வந்த சூழலில், போட்டிகளில் பங்கேற்பதற்கான முயற்சிகளுக்கு நீலகிரி மாவட்ட தடகள சங்கத்தின் செயலர் ராஜேந்திரன் உதவ முன்வந்தார். இவர் தமிழக தடகள சங்கத்தின் மாநிலப் பொருளராகவும் இருந்ததால், மாநில தடகள சங்கத்தின் செயலாளரான லதாவின் உறுதுணையோடு மேலும் பல்வேறு உதவிகளையும் பெற முடிந்தது.

இந்த குழுவினருக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள் தரப்படுகின்றன. தங்கு
மிடமும், தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளும், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கான வசதிகளும் இவ்வமைப்பின் சார்பிலேயே இலவசமாக ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இவர்களில் கடந்த 2020- ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகளில் வால்டர் கண்டுல்னா என்பவர் ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இவரே 2021-ஆம் ஆண்டில் சிவகாசியில் நடைபெற்ற போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றதோடு, தேசிய அளவிலான ஜூனியர் கிராஸ் கன்ட்ரி பந்தயத்திலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதேபோல, அகான்சா கெட்கேட்டா என்பவரும் ஜூனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர்களோடு ஹரிபஜன் சிங் மற்றும் பஷ்வந்தி பார்டோ ஆகியோரும் ஜூனியர் தடகள போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் 25 பேர் பங்கேற்றிருந்த சூழலில், ஏடிபி அமைப்பினைச் சார்ந்த நால்வர் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்'' என்கிறார் கரன் சிங்.

தடகளப் போட்டிகளில் சாதிப்பதோடு, பதக்கம் வெல்ல வேண்டுமென்ற கனவோடு இருக்கும் சூழலில் 2028- ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பழங்குடியினரை வைத்தே பதக்கம் வாங்கிவிட வேண்டுமென்ற கரன் சிங்கின் முயற்சி வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.

""நீலகிரி மாவட்டத்திலும் பழங்குடியின இளைஞர்கள் ஏராளமானோர் இருந்தாலும் அவர்களால் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் திறன் இல்லாததாலேயே இதுவரையிலும் எனது குழுவில் அவர்களைச் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. நீலகிரியில் திறமையானவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்களை எனது குழுவில் சேர்த்துக் கொள்வேன். தற்போது தேசிய அளவில் பதக்கங்களை பெற்றுள்ள நால்வருக்கு மட்டும் உதகையிலுள்ள தேசிய விளையாட்டு மேம்பாட்டு மையத்தின் சிந்தடிக் தரையில் பயிற்சி பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 7 பேரும் திறமையானவர்கள் என்றாலும் அவர்களால் உதகையில் சிந்தடிக் தரையில் பயிற்சி பெற முடியாத சூழல் உள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனது குழுவினர் அனைவரும் சிந்தடிக் தரையில் பயிற்சி பெற உதவ வேண்டும்'' என்கிறார் கரன்சிங்.

விளையாட்டு அமைப்புகளில் முன் அனுபவமிக்க தகுதியான பயிற்சியாளர்கள், உரிய பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் என பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், தில்லியிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வந்து இங்கேயே நிரந்தரமாகத் தங்கி 2028 -ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளில்
இந்தியா பதக்கம் வென்றிட பயிற்சி அளித்துவரும் கரன் சிங்கின் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளித்தால், ஒலிம்பிக்கிலும் நம்மால் பதக்கத்தை வெல்ல முடியுமென்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT