முகப்பு
இளைஞர்மணி

தற்கொலைகளைத் தடுக்க... மனநல ஆலோசனை தரும் மாணவர்!

இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அடிக்கடி  நிகழ்கின்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:


இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அடிக்கடி நிகழ்கின்றது. கூடுதலான படிப்புச்சுமை, போட்டித் தேர்வுகளில் வெல்ல வேண்டும் என்ற அதிகப்படியான வற்புறுத்தல் ஆகியவற்றை இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.
இப்படி 7 முறை தற்கொலைக்கு முயன்ற ஒரு மாணவர்தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த தருண் சாய்.
தற்கொலை செய்து கொள்வதற்காக அதிகப்படியான தூக்க மாத்திரைகளை விழுங்கிய தருண்சாய்க்கு, தூக்க மாத்திரை வேலை செய்யாமல் போனால் என்ன செய்வது? என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் கல்லூரியின் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மொட்டை மாடிக்கு அவர் செல்ல, அங்கே அவரின் கண்ணெதிரிலேயே அந்தக் கல்லூரியில் பயிலும் சக மாணவன், மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். அதைப் பார்த்து அதிர்ந்து போகிறார் தருண் சாய். "தற்கொலை என்பது மாபெரும் தோல்வி' என்ற எண்ணம் அப்போது அவருக்கு ஏற்படுகிறது. தற்கொலை செய்பவர்களைத் தடுத்து அவர்களை மனரீதியாக தேற்ற வேண்டும் என்று நினைக்கிறார் தருண் சாய். அதன் விளைவாக அவர் உருவாக்கியதுதான் "ஃபைண்ட் ஹோப்' என்ற இணையதளம். இது தொடர்பாக அவர் கூறியதிலிருந்து..
""எனது குடும்பம் பாரம்பரியமாகவே கல்வி கற்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம். நான் ஏழாவது படிக்கும்போது, ஐஐடி - ஜேஇஇ தேர்வுக்கு என்னைப் படிக்கச் சொன்னார்கள்.
ஒவ்வொரு நாளும் படிப்பதற்கென்றே 10 மணி நேரங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம்.
மனதில் எப்போதும் கூடுதலான அழுத்தம்.
இதனால் எனக்கு ஞாபக மறதி பிரச்னை ஏற்பட்டுவிட்டது.
படித்ததெல்லாம் மறந்து போனது. ஏற்கெனவே எனக்கு கால்பந்து விளையாடுவது, படம் வரைவது, கிராபிக் டிசைன், விடியோகிராபி ஆகியவற்றில் ஈடுபடுவதில் ஆர்வம் இருந்தது. ஆனால் அந்த ஆர்வம் எல்லாம் இல்லாமல் போனது. மனதில் எப்போதும் வெறுப்புணர்ச்சியும் அழுத்தமும் இருந்தது. ஆண்டுகள் சில கடந்தன.
எனது 16-ஆவது வயதில் சாலையை நான் கடந்து செல்லும்போது வேகமாக வந்த ஆட்டோ என் மீது மோதி முதுகில் பலத்த அடி. படுத்த படுக்கையாக மருத்துவமனையில் தங்கியிருந்தேன்.
தனிமை. பேசுவதற்கு ஆள்கள் இல்லை. மன அழுத்தம் அதிகமானது. ஓரளவு குணமாகி வீட்டுக்கு வந்தேன்.
இப்படிப்பட்ட கடுமையான சூழலிலும் நான் எனது இண்டர்மீடியட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றேன். ஜேஇஇ மெயின் தேர்வில் தோல்வி அடைந்தேன். எனக்கு அப்போது ஈஸ்னோபிலியா பிரச்னை ஏற்பட்டுவிட்டது.
அதனால் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்ததுவிட்டது. ஞாபக மறதி அதிகமாகிவிட்டது.
அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் நான் சேர்ந்து படிக்க வேண்டும் என்று வீட்டில் வற்புறுத்தினார்கள். அதற்காக சாட் தேர்வையும் எழுதச் சொன்னார்கள். எழுதினேன். அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன்.
ஆனால் வெளிநாட்டில் சென்று படிப்பதற்கான கல்விக்கடன் கிடைக்கவில்லை. எனவே அகர் தாலாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (என்ஐடி)யில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தேன்.
ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தால் எனக்கு அறுவைச் சிகிச்சை செய்திருந்தார்கள். அதனால் முதுகின் பின்புறம் கடுமையான வலி இருந்து கொண்டே இருந்தது. அதைத் தாங்க முடியவில்லை. அப்போதுதான் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். 7 முறை தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்க மாத்திரைகளை விழுங்கியும் நான் இறந்து போகவில்லை. என்னுடன் கல்லூரியில் பயின்ற மாணவன் ஒருவன் கல்லூரி மாடியிலிருந்து நேரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்ததுமே இனிமேல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. மன அழுத்தத்துக்கு உள்ளாகிறவர்களின் அருகிலிருப்பவர்கள் அவரிடம் பேசாததும்,
அவரைத் தேற்றாததும், அவருக்கு ஆலோசனைகள் சொல்லாததுமே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். எனவே மனரீதியான ஊக்கத்தை மனஅழுத்தம் உடையவர்களுக்குத் தந்தால் என்ன? என்று தோன்றியது.

அதனால்தான் சென்ற ஆண்டு "ஃபைண்ட் ஹோப்'பைத் தொடங்கினேன்.
ஃபைண்ட் ஹோப் ஓர் இணையதளம். இதில் மன அழுத்தம் உள்ளவர் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டால் போதும். உடனே அவரிடம் பேசி, அவருடைய பிரச்னைகளைக் கேட்டறிந்து, அவருக்கு உளவியல்ரீதியான ஆலோசனைகளைச் சொல்கிறோம். இதற்காக இந்தியா முழுவதும் உளவியல்துறை சார்ந்தவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். குறிப்பாக உளவியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கக் கூடிய மாணவர்கள் இதற்கு உதவுகிறார்கள்.
கூடுதலான மனநலம் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மனநல மருத்துவர்கள், ஆலோசகர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருகிறோம். தியானம், யோகாசனம், உடற்பயிற்சி, தசையின் இறுக்கத் தன்மையைக் குறைக்கும் பயிற்சி ஆகியவற்றை மனநல மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி அளிப்பதற்கான பயிற்சியையும் நாங்கள் சொல்லித் தருகிறோம்.
தற்போது தமிழ், தெலுங்கு, வங்காளி, இந்தி ஆகிய மொழி தெரிந்தவர்களுக்கு மனநல ஆலோசனை எங்களுடைய ஃபைண்ட் ஹோப் மூலம் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன் மூலம் மனதிற்கு ஊக்கம் தரும் விளையாட்டுகளை விளையாட அதற்கென செயலிகளை உருவாக்கி இருக்கிறோம். இந்த விளையாட்டை விளையாடும்போது மன இறுக்கம் குறைந்துவிடுகிறது. வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்க மன வலிமை பிறக்கிறது.
இதுமட்டுமல்ல, நான் பயிலும் என்ஐடி அகர்தாலா மற்றும் ஜேஎன்டியூ - காக்கிநாடா ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் விதமாக மென்டல் ஹெல்த் கிளப்களை ஏற்படுத்தி இருக்கிறோம். இதுவரை எங்களிடம் 3 ஆயிரம் பேர் வரை தொடர்பு கொண்டு பயன் அடைந்து இருக்கிறார்கள்'' என்கிறார் தருண் சாய்.

முழு கட்டுரையைப் படிக்க →