வாங்க இங்கிலீஷ் பேசலாம்
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும்ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது set the ball rolling எனும் ஒரு idiomatic expression-ஐ மன்னர் வீரபரகேசரி பயன்படுத்திட அதை தேர்தல் ஆணைய அமைச்சரும், உள்துறை அமைச்சரும் தவறாகப் புரிந்து கொள்ள அந்த குழப்பத்தினால் ஓர் உரையாடல் நடக்கிறது. அதன் முடிவில் அச்சொற்றொடரின் பொருள் என்னவென கணேஷுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. அவன் ஜூலியிடம் வினவுகிறான்.
ஜூலி: To set the ball rolling என்றால் ஒரு நடவடிக்கையை, செயலை ஆரம்பிப்பது, மற்றவர்களும் விரைவில் வந்து அதில் சேர்வார்கள் எனும் நம்பிக்கையில் அதைச் செய்வது.
உதாரணமாக, ஒரு கூட்டத்தைத் தொடங்கும் முன் யார் முதலில் பேச விரும்புகிறீர்கள் என அறியும் நோக்கில் Ok who would like to set the ball rolling? எனக் கேட்பார்கள்.
கணேஷ்: ஓ! ஆனால் ஏன் பந்தைப் பற்றி பேசுகிறார்கள்?
ஜூலி: ஓ... பந்தா? நீ என்ன நினைக்கிறாய்? இந்த பந்து எந்த விளையாட்டில் இருந்து வந்திருக்கும்?
கணேஷ்: கால் பந்தாட்டம்?
ஜூலி: ம்ஹும்...
கணேஷ்: டென்னிஸ்?
ஜூலி: இல்லை. Croquette என ஒரு விளையாட்டு உண்டு. பண்டைய இங்கிலாந்தில் இதை செல்வந்தர்கள், உயர்குடியினர் ஆடினர். இந்த ஆட்டம் வித்தியாசமானது. ஒரு மைதானத்தில் அல்லது தோட்டத்தில் நிறைய வளையங்களை வைத்திருப்பார்கள். உங்கள் கையில் உள்ள மரச்சம்மட்டியால் ஒரு பந்தை அந்த வளையங்கள் வழியாக அடித்து வெளிக்கொணர வேண்டும். ஆட்டம் துவங்கும் போது யார் டாûஸ வென்று முதலில் பந்தை அடிக்கிறாரோ அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். அவர் சரியாக எல்லா வளையங்கள் வழியும் வெளிவரும்படி பந்தை அடித்து விட்டால் அவரே வெற்றியாளர். இதனால் முதலில் பந்தை அடிக்கிறவருக்கு உள்ள கூடுதல் அனுகூலத்தை கருத்திற்கொண்டு set the ball rolling எனும் idiom 19-ஆம் நூற்றாண்டில் பிரபலமானது. அதாவது ஒரு விசயத்தை முதலிலே ஆரம்பித்து வெற்றியை நெருங்குவது எனும் பொருளில். ஆனால் போகப் போக இதன் பொருள் மாறத் தொடங்கி இப்போது ஒரு வேலையை, செயலை எப்படியாவது தொடங்கி வைப்பது, அப்படி தொடங்கி வைக்கப்படும் செயலின் விளைவு நம்மால் கணிக்க முடியாததாக இருக்கலாம் என அர்த்தப்படுகிறது.
கணேஷ்: ஓ... இவ்வளவு பெரிய ஹிஸ்டிரி இதுக்கு இருக்குதா?
ஜூலி: இது மட்டுமில்ல, ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டால் மொழியின் ஆழத்தை, சிறப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.
வீரபரகேசரி: சிறப்பாக சொன்னாய் ஜூலி.
என் அமைச்சர்களுக்கு இந்த வரலாறு தெரியாவிட்டாலும் குறைந்தபட்சம் அடிப்படை பொருளாவது தெரிந்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் என்ன பண்ணுவது. எல்லாம் என் தப்பு தான்.
ஜூலி: ஏன் மன்னா?
வீரபரகேசரி: நான் மெத்தப்படித்த, நிபுணத்துவம் கொண்ட அரசியல்வாதிகளை அமைச்சரவைக்கு எடுத்தால் அவர்கள் எனக்கு எதிராக அரசியல் பண்ணுவார்கள் என நினைத்து simpletons ஆகப் பார்த்து பதவியில் அமர்த்தி அழகு பார்த்தேன். கடைசியில் அது எனக்கே துயரமாகி விட்டது. It has come back to bite me.
கணேஷ்: simpleton என்றால்?
ஜூலி: அடிப்படை அறிவு கூட இல்லாதவன், பேக்கு, முட்டாள், common sense இல்லாதவன் என அர்த்தங்கள் உண்டு.
கணேஷ்: அப்போ அத்தகையோர் கடிப்பார்களோ?
ஜுலி: சேச்சே... மன்னர் சொல்ல வந்தது வேறு. ஒரு விசயத்தில் அது சின்ன பிரச்னையாக இருக்கும் போது சரி செய்யாவிட்டால் அது பெரிய பிரச்னையாக வளர்ந்து நிற்கும் போது நாம் திகைத்து தடுமாறிப் போவோம்.
கணேஷ்: அதாவது எதையும் முளையிலேயே கிள்ளணும்.
ஜூலி: Exactly. இந்த தற்குறி அமைச்சர்களை தன் கட்டுக்குள் வைக்கலாம் என அரசர் நினைத்து பதவியில் அமர்த்தினால் அவர்களோ அவருக்கு பெரும் தலைவலியாக இப்போது மாறி விட்டார்கள்.
தேர்தல் ஆணைய அமைச்சர்: மன்னிக்க வேண்டும் மன்னர் மன்னா. எனக்கு எல்லா தப்புகளும் புரிந்து விட்டன. இனி நான் ஒழுங்காக நடக்கிறேன்.
வீரபரகேசரி: என்ன தப்புகள்?
தேர்தல் ஆணைய அமைச்சர்: நீங்க அந்த குரோக்கட் பந்து விளையாட்டை ஆட நினைத்ததை நான் தப்பாக கால்பந்தாட்டம் எனப் புரிந்து கொண்டதால் உங்களுக்கு அது செம "கடியாக' இப்போது இருக்கிறது.
வீரபரகேசரி: அப்படியே தப்பாவே புரிஞ்சு வச்சுக்குங்க. நான் சொல்ல வந்த விசயத்துக்கு வரேன்.
(இனியும் பேசுவோம்)