ஸ்டார்ட் அப்... தொடங்குவதற்கே தேவை நிதி!
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகவும் அவசியத் தேவை போதுமான நிதி. போதிய நிதி கிடைக்காததால் 90 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குள்ளாகவே மறைந்து போகின்றன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகவும் அவசியத் தேவை போதுமான நிதி. போதிய நிதி கிடைக்காததால் 90 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குள்ளாகவே மறைந்து போகின்றன. சில சமயங்களில் போதுமான அளவு நிதி கிடைத்தாலும், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாமல் வீழ்ச்சியடைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் உண்டு.
எனவே ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்துபவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குப் போதிய நிதி திரட்டுவதற்கான வழிகளையும் அந்நிதியைத் திறம்படக் கையாள்வதற்கான வழிகளையும் அறிந்து கொள்வது அத்தியாவசியமானது. நிதி மேலாண்மைத் திறனைத் தொழில்முனைவோர் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நிறுவனத்தைத் தொடங்கியதிலிருந்தே நமது பட்ஜெட்டுக்குள் செலவுகளை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே அளவுக்கு அதிகமாகச் செலவு செய்வது பெரும் தவறாக முடியும். ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான நிதியைத் திரட்டுவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன.
எல்லாருக்கும் தெரிந்த முதலாவது வழி, குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் நிதி கோருவது. ஆரம்பக்கட்ட நிதித் தேவைகளை இந்த வகையில் பூர்த்தி செய்து கொள்ளலாம். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் நிதியைப் பெறுவது எளிதாக இருந்தாலும், இதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. யாரும் இலவசமாக எதையும் தர விரும்பமாட்டார்கள். எனவே நிதி பெறும்போது அவர்களிடம் தெளிவாகப் பேசி பெற வேண்டும். நிதியைத் திருப்பிக் கொடுப்பதற்கான திட்டமிடல்களும் அவசியம். நண்பர்கள், உறவினர்களிடம் நிதி பெறும்போது அதன் சாதக, பாதகங்களை முறையாக ஆராய்ந்து அவர்களிடம் நிதியைப் பெறலாம்.
அடுத்த எளிய வழி, நம் சேமிப்பையே நிதியாகப் பயன்படுத்துவது. இதில் எந்தவிதத் தொல்லையுமில்லை. பணத்துக்காக யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், பணத்தை சரியான வழியில் ஆராய்ந்து செலவழிக்க வேண்டும். நம் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் மிகப் பெரிய லாபத்தை அளிக்கும் வகையில் செலவுகள் இருக்க வேண்டும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதை, சில பெரிய நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. "இன்குபேட்டர்' என்ற இந்த வசதியின் மூலமாக நமக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடியும். நிதியுதவி அளிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ஆலோசனைகள் உள்ளிட்டவற்றையும் இந்த வசதியில் பெற முடியும்.
சில பெரிய நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதையே பிரதானமாகக் கொண்டிருப்பார்கள். வளர்ந்து வரும் நிறுவனங்களில் அவர்கள் முதலீடுகளை மேற்கொண்டு வருவாய் ஈட்ட முயற்சிப்பார்கள். அத்தகைய முதலீட்டாளர்களைக் கண்டறிந்து, ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு நிதி கோரலாம். இந்த வகை முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவதால், சரியான முதலீட்டாளர்களைக் கண்டறிந்து நமது நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த முடியும்.
"வென்சர் கேபிடலிஸ்ட்ஸ்' வகை முதலீட்டாளர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பர். அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வாயிலாக நமது நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொண்டு நம் நாட்டில் காலூன்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வர்.
"கிரவுட் ஃபண்டிங்' என்ற முறையின் வாயிலாக மக்களிடமிருந்து பணத்தைப் பெற முடியும். இந்த முறையில் நிதியைத் திரட்டுவதற்குப் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன. நமது புத்தாக்க சிந்தனைக்காக நம் நிறுவனத்தில் பலர் முதலீடு செய்யலாம். இதில் மற்றுமொரு பலனும் உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனம் வளர்ச்சி கண்டு வருவாயை ஈட்ட வேண்டும் என்ற நோக்கில், நம் நிறுவனத்தை சந்தைப்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். இதன் மூலமாக இலவசமாகவே நம் நிறுவனம் பிரபலமடையும்.
பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வங்கியிலிருந்து கடன் பெறுவதையே முழுமையாக நம்பியிருக்கின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல சிறப்பு கடனுதவித் திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.
நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், "ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முத்ரா திட்டம், வட்டிச் சலுகையுடன் கடனுதவி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் வாயிலாக நமது நிறுவனத்துக்குப் போதுமான நிதியைத் திரட்ட முடியும்.
"ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தின் வாயிலாக மேலும் பல்வேறு பலன்களைப் பெற முடியும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களை எளிதில் பதிவு செய்து கொள்ள முடியும். நிறுவனங்கள் வளர்ச்சி காண்பதற்கான வழிகளும் கிடைக்கும். வரிச்சலுகை, அறிவுசார் சொத்து காப்புரிமை உள்ளிட்டவற்றையும் இத்திட்டத்தின் கீழ் பெற முடியும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி மிகவும் அடிப்படை ஆதாரமாகிறது. போதுமான நிதியை எளிய வழியில் திரட்டுவதோடு அதை முறையாகப் பயன்படுத்தி ஸ்டார்அப் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்வோம்.