வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 286
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வீரபரகேசரி: யோவ் அமைச்சரே!
தேர்தல் ஆணைய அமைச்சர்: மன்னர்... மன்னா... உங்களுடைய கட்டளையை எதிர்பார்த்து நிற்கிறேன்.
வீரபரகேசரி: அதெல்லாம் இருக்கட்டுமய்யா. இந்த தேர்தலில் நாம ஜெயிக்கப் போவது நிச்சயம் தானே?
தேர்தல் ஆணைய அமைச்சர்: இந்த மண்ணில் சுவாசிக்கும் சின்னக் குழந்தை கூட உங்களுக்கே வாக்களிக்கும் மன்னா! your popularity is unsurprised மன்னா.
வீரபரகேசரி: ஆங்?
தேர்தல் ஆணைய அமைச்சர்: மன்னா, உமது புகழ் நிகரற்றதுன்னு சொல்ல வந்தேன்.
வீரபரகேசரி: அது unsurprised அல்ல, unsurpassed. நமக்குத் தான் வராதில்ல. அப்புறம் ஏன்யா?
தேர்தல் ஆணைய அமைச்சர்: இதைப் பேசினாலே தப்பு வருது மன்னா. வெள்ளைக்காரன் மொழி நமக்கு எதுக்கு? ஆங்கிலத்தைத் தடை செய்வோம். It is the enemy within. கூடவே இருந்து கழுத்தறுக்கும் எதிரி அது மன்னா.
வீரபரகேசரி: ஓஹோ! முதலில் ஒரு மொழியை சரியாப் பயன்படுத்தத் தெரியலை உனக்கு. முதலில் அதைக் கற்றுக் கொள். அதன் பயன்களை அனுபவிக்க தெரிஞ்சுக்கோ. அப்புறமா அது ஆபத்தானதா இல்லையான்னு பார்க்கலாம். The enemy within என்கிறதை நீ எங்கேயே காதில கேட்டுக்கிட்டு தப்புத் தப்பா புரிஞ்சிக்கிட்டு எங்கிட்ட எடுத்து விடுறியா? தோலை உரிச்சிருவேன்.
தேர்தல் ஆணைய அமைச்சர் மண்டியிடுகிறார்: மன்னியுங்கள் மன்னா... இனி அப்படிப் பேசவே மாட்டேன்.
கணேஷ்: மன்னா, enemy within அப்படீங்கறது சரியாத்தானே தெரியுது? அதை ஒரு உருவகமா பார்க்கலாகாதா, காலனிய சக்திகளுக்கு, அவர்களுடைய
கருவிகளுக்கு?
வீரபரகேசரி அமைச்சரின் தண்டனையை நிறுத்துகிறார்.
வீரபரகேசரி (கணேஷிடம்): உனக்கு அப்படித் தோன்றலாம். ஆனால் அது சரியல்ல. ஏனென்றால் அந்த சொற்றொடர் ஒரு பிரத்யேக வரலாற்றுச் சூழலில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, அரசியல், தேசப் பாதுகாப்பு, இறையாண்மை சம்பந்தப்பட்டு அது பயன்படுத்தப்படுகிறது. அதை நாம் இஷ்டத்துக்கு வளைத்து பயன்படுத்தலாகாது. இதுக்கு மேல் விளக்க எனக்குப் பொறுமையில்லை. இவனுங்களை சமாளிச்சே தாவு தீர்ந்து போகுது. இவனுங்களோட பேசும் போது எவ்வளவு லோக்கலா என் தமிழே மாறிடுது. ச்சே!
கணேஷ் (புரொபஸரிடம்): சார், மன்னர் சொல்வது உண்மையா?
புரொபஸர்: ஆமாம், நீ வின்ஸ்டன் சர்ச்சிலோட இந்த பிரசித்தமான மேற்கோளை கேட்டதில்லையா? When there is no enemy within, the enemies outside cannot hurt you.
கணேஷ்: ஓ... புரிஞ்சிருச்சு சார். அரசாங்கத்துக்கு எதிரானவர்களை enemy within சொல்கிறார். அதாவது துரோகிகள், உள்நாட்டு எதிரிகளை.
புரொபஸர்: கரெக்ட். பொதுவாக வின்ஸ்டன் சர்ச்சில், மார்க்கரெட் தாச்சர் மாதிரியான வலதுசாரி அரசியல் தலைவர்கள் தங்களுடைய தாராளவாத பொருளாதார முடிவுகளை மக்கள் எதிர்க்கும் போது அவர்களை இடதுசாரிகள் என்றும், enemies within என்றும் அழைத்து தேசத்துரோகியாக முத்திரை குத்துவது வழக்கம். காலங்காலமாக இது மட்டும் இன்னும் மாறவில்லை. 1984- இல் தாச்சரின் அரசு ஏகப்பட்ட நிலக்கரி சுரங்களை மூட முடிவெடுத்தார். லாபம் போதவில்லை என்று தான். அதனால் பல எளிய மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என அவர் கவலைப்படவில்லை. இதற்கு எதிராகத் தொழிலாளர்களின் பெரிய போராட்டம் நடந்தது. அப்போது தாச்சர் இதை பிரிட்டன் ராணுவம் 1982 -இல் அர்ஜென்டினாவுக்கு எதிராக நடத்திய போருடன் ஒப்பிட்டு At the time of the conflict, we had to fight the enemy without; but the enemy within, much more difficult to fight, is just as dangerous to liberty என்று சொன்னார். அதாவது அர்ஜென்டினாவுடன் நடத்திய போரை விட போராடும் உள்ளூர் மக்கள் ஆபத்தானவர்கள், தேசத்தின் சுதந்திரத்துக்கு பாதகமானவர்கள் என்றார்.
கணேஷ்: சொந்த மக்களையா?
புரொபஸர்: வலதுசாரிகளுக்கு அப்படி மக்களை அப்படி அழைப்பதே வாடிக்கை.
கணேஷ்: ஆனால் சார் இதில் இலக்கணப் பிழை உள்ளதே?
புரொபஸர்: என்ன பிழை?
(இனியும் பேசுவோம்)