முகப்பு
இளைஞர்மணி

ஸ்டார்ட் அப்... விளம்பரப்படுத்துவது எப்படி?

ஸ்டார்ட் அப் நிறுவனத்தைப் பதிவு செய்து, போதுமான நிதியைச் சேகரித்த பிறகு அந்நிறுவனத்தை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டியது அவசியம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:


ஸ்டார்ட் அப் நிறுவனத்தைப் பதிவு செய்து, போதுமான நிதியைச் சேகரித்த பிறகு அந்நிறுவனத்தை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டியது அவசியம். நம் நிறுவனத்துக்கென தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும். அதுவே மக்களிடையே நம்மை அதிக அளவில் பிரபலப்படுத்தும். 
மக்களிடையே பிரபலமடைந்தால் மட்டுமே போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் நாம் வருவாயை ஈட்ட முடியும். எனவே, ஸ்டார்ட் அப் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதில் தொழில் முனைவோர் தனி கவனம் செலுத்த வேண்டும். நிறுவனத்துக்குத் தனித்துவமான பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். 
அந்தப் பெயரானது மக்கள் மனதில் எளிதில் பதிவாகும் வகையில் இருப்பதோடு, நிறுவனத்தின் செயல்பாட்டோடு ஒத்திருந்தால் சிறப்பு. பெரும்பாலும் ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பாட்டுக்கு வரும்போதே விளம்பரப்படுத்துதலைத் தொழில்முனைவோர் தொடங்குகின்றனர். 
ஆனால், விளம்பரப்படுத்துதல் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்த  பிறகே விளம்பரப்படுத்துதலைத் தொடங்கிவிடுவது நல்லது. நம் நிறுவனத்துக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துக் காணப்பட வேண்டும். 
நிறுவனம் செயல்பாட்டுக்கு வரும் முன்னரே அது குறித்த ஆர்வம் மக்களுக்கு எழ வேண்டும். அது நம் நிறுவனத்துக்குப் பெரும் வரவேற்பை ஏற்படுத்தித் தரும். 
ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான பெயரைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதற்கான சிறப்புக் குறியீட்டை (லோகோ) உருவாக்குவதில் தனி கவனம் தேவை. நிறுவனத்தின் பெயரும் குறியீடுமே மக்கள் மனதில் முதலில் பதியும். அவ்வாறு சிறப்புக் குறியீட்டை உருவாக்கும்போது வண்ணம், எழுத்தின் வடிவம், கிராஃபிக்ஸ் உள்ளிட்டவற்றைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அவை மக்களை எளிதில் கவர்வதாக இருக்க வேண்டும்.  
ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு வலைதளத்தை உருவாக்குவது பல்வேறு நன்மைகளைத் தரும். வலைதளத்தின் வாயிலாகவே பல வாடிக்கையாளர்கள் 
நம்மைத் தொடர்பு கொள்வார்கள். வலைதளத்தின் வாயிலாகவே நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை அவர்கள் அறிந்து கொள்வார்கள். எனவே, வலைதளத்தை சுயமாகவோ, மற்றவர்களின் உதவியுடனோ சிறப்பான முறையில் வடிவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 
வலைதளத்துக்கான டொமைன், அதற்கான தகவல்களைச் சேமித்து வைப்பதற்கான ஹோஸ்டிங் உள்ளிட்டவற்றை முறையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வலைதளம் மற்ற நிறுவனங்களுக்கான வலைதளத்திலிருந்து தனித்துவமாகத் திகழ்வது கூடுதல் சிறப்பாக அமையும். 
ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான அலுவலகத்தைத் தயார் செய்ய வேண்டியது முக்கியப் பணி. போக்குவரத்து உள்ளிட்ட பல வசதிகள் நிறைந்த இடத்தில் அலுவலகம் அமைவது சிறப்பு. அலுவலத்தில் பணியாளர்களையும் நுகர்வோரையும் கவரும் வகையில் வடிவமைப்புகளை மேற்கொள்ளலாம். அலுவலக இடத்தைத் திறம்படப் பயன்படுத்துவது செலவினங்களை வெகுவாகக் குறைக்க உதவும். 
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பிறகு ஸ்டார்ட் நிறுவனத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம். நாம் நிறுவனத்தைத் தொடங்கும் அதே நேரத்தில் வேறு நிறுவனங்களும் சந்தைக்கு வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப தேதியை முடிவு செய்து கொள்ளலாம். 
ஆரம்பத்தில் நம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கும் சேவை
களுக்கும் தள்ளுபடி, இலவசம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது பலனுள்ளதாக இருக்கும். இது மக்கள் மனதில் நம் நிறுவனத்தைப் பதிய வைக்கும். 
நிறுவனம் குறித்து செய்தித்தாள், தொலைக்காட்சி, ரேடியோ போன்ற
வற்றின் வாயிலாக விளம்பரப்படுத்துதல் நல்ல பலனைத் தரும். சமூக வலைதளம் மூலமாக விளம்பரம் செய்வது மலிவானதும் எளிதானதும் ஆகும். சமூக வலைதள விளம்பரங்கள், நுகர்வோர் பலருக்கு நிறுவனத்தை எளிதில் கொண்டு சேர்க்கவும் உதவும். 
ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பாட்டுக்கு வருவது நமக்கான கடைசி வேலை அல்ல. இனிமேல் தான் நமக்கு அதிக வேலை இருக்கிறது. நிறுவனத்தின் உற்பத்திப் பொருளை அல்லது சேவையை  பலரிடம் கொண்டு சேர்ப்பதே மிகப் பெரிய வேலை. அதற்கு தனித்துவமான முறைகளில் விளம்பரப்படுத்துதலைக் கையாள வேண்டும். அவையே நிறுவனத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யும். 
நிறுவனம் குறித்து எப்போது விளம்பரம் செய்ய வேண்டும், எப்போதெல்லாம் விளம்பரம் செய்யக் கூடாது என்பனவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியம். நிறுவனம் குறித்த சிறு கட்டுரைகளை சமூக வலைதளம் போன்றவற்றின் வாயிலாக அவ்வப்போது வெளியிடுவது முக்கியம். 
சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நிறுவனத்தின் சார்பில் ஆதரவு (ஸ்பான்சர்) அளிக்கலாம். நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்கென தனி நிதியை ஒதுக்கி வைத்துக் கொள்வது பலனைத் தரும். இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட எதிர்பாராத சூழல்களில் நிறுவனத்தை எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம் அத்தகைய சமயத்தில் எந்த மாதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது. 
ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு கால நேரம் என்று எதுவும் தனியாக இல்லை. நிறுவனத்தைத் தொடங்குவதற்கான வேலையை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். மனஉறுதியுடனும் துணிச்சலுடனும் செயலில் இறங்கினால் வெற்றி நமதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.