முகப்பு
இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 50:  தன் மேலாண்மைத் திறன் - 10

கரோனா நோய்த் தொற்றால் உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் பலரும் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:


கரோனா நோய்த் தொற்றால் உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் பலரும் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.  உலகமே நோயின் கோரப்பிடிக்குள் சிக்கி  உழன்று கொண்டிருக்கிறது. இன்னொருபுறம்,  டிக்ரை, பாலஸ்தீனம் போன்ற பல பகுதிகளில் இனப்படுகொலைகள்  நடத்தப்படுகின்றன.  ஒன்றரை லட்சம் பேரை அழித்தொழித்த ஈழ இனப்படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவின் நினைவேந்தல் நடக்கிறது.   இவை  ஓர் எளிய உண்மையை நெஞ்சில் ஓங்கி எழுப்புகின்றன. உயிர்நேயம் என்பதே வாழ்க்கை; அதை விஞ்சிய அர்த்தம் வாழ்க்கைக்கு வேறேதுமில்லை. 

ஆதிசங்கரரின் திக்விஜயத்தின்போது, ஒரு பெண்மணி அவரிடம் சென்று இறந்துபோன தன் மகனை உயிர்ப்பித்துத் தரும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார். தாய்ப் பாசத்தால் தவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் உள்ளார்ந்த உணர்வுகளை உடனடியாக நிராகரிக்க விரும்பாத ஆதிசங்கரர், யாருமே இறக்காத ஒரு வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி அரிசி வாங்கி வருமாறும், அப்போது அவருடைய மகனை உயிர்ப்பித்துத் தருவதாகவும் உறுதியளித்தார். ஊர்கள்தோறும் அலைந்து திரிந்து, வீடு வீடாக ஏறி இறங்கி, கைப்பிடி அரிசி பெற முனைந்த அந்தப் பெண்மணிக்கு அப்போதுதான் வாழ்வின் யதார்த்தம் புரிந்தது. மரணம் என்பது எங்கும் நிறைந்திருப்பது. 

மரணம் குறித்து நம்மனைவருக்குமே ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. மரணம் என்றால் என்ன? அது இவ்வுலக வாழ்வின் முடிவா? அல்லது இன்னொரு வாழ்வின் தொடக்கமா? மரணமடைந்த பிறகு, ஏற்கெனவே மரணித்துவிட்ட நம்முடைய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்போமா?  

அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிர்ஷ்டவசமாக, நாமே மரணித்த பிறகுதான் இந்த கேள்விகளுக்கான பதில்கள் நமக்குத் தெரியவரும். அதிர்ஷ்டவசமாக என்பதற்கு காரணம், இப்போதே இந்த கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொண்டால், இம்மண்ணுலக வாழ்க்கை நரகமாகிவிடும். துரதிர்ஷ்டவசமாக என்று சொல்வதற்குக் காரணம், தற்போதைய குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியே இல்லாமலிருப்பதுதான். 

வாழ்வின் தொடக்கத்தில் இருக்கும் எங்களிடம் மரணத்தைப் பற்றிப் பேசுகிறீர்களே என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். உண்மைதான், மரணம் இளமையில் எண்ணப்படாதது; எதிர்கொள்ளக் கூடாதது.

காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்.

எனும் பாரதியாரின் அணுகுமுறையே சிறந்தது. சாவை நான் மதிக்கமாட்டேன். அதைத் தேடிப் போகமாட்டேன். அது என்னருகே வந்தாலும் மிதித்து விரட்டி விடுவேன் என்பதுதான் இப்போது நீங்கள் கைக்கொள்ள வேண்டிய வழிமுறை. 

"சத்தான இயற்கை உணவு உண்பேன்; உடற்பயிற்சி செய்வேன்; சாலை விதிகளை மதிப்பேன்; சாகும் விபத்தினைத் தடுப்பேன்; போதைப் பொருட்களைத் தவிர்ப்பேன்' என்றெல்லாம் வழிவகைகளை வகுத்துக் கொண்டு மரணத்தைத் தவிர்த்து தடுப்பாட்டம் ஆடுவதே சிறப்பு. இது மரணத்தை எதிர்கொள்ளும் முதலாவதும், முதன்மையானதுமான வழிமுறை. 

விபத்து, பேரிடர், நோய், முதுமை எனும் பற்பல காரணங்களால் மரணம் நம்மைச் சுற்றியிருப்போரைக் கவர்ந்து செல்கிறதே? பெரும்பாலான பறவைகள், விலங்குகளைப் போலல்லாமல், மனிதர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்களே? இம்மாதிரியான இழப்புகளை எப்படி எதிர்கொள்வது? 

பெரும்பான்மையானவர்களுக்கு அவரவர் மதநம்பிக்கைகளும், சடங்குகளும் கைகொடுக்கின்றன. மதங்கள் புண்ணியம், பாவம், சொர்க்கம், நரகம், இம்மை, மறுமை, மறுபிறவி, என்றெல்லாம் விளக்கங்கள் கொடுத்து, ஆறுதல் அளிக்கின்றன. திரையை விலக்கிப் பார்க்க முடியாத நாமும் நிரூபணங்கள் கேட்காமல் ஏற்றுக் கொள்கிறோம். 
ஒருவர் மரணமடையும்போது, உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி இறந்தவர் வாழ்க்கையைக் கொண்டாடுகிறோம். இறந்தவருக்கு இறுதி விடை அளித்துவிட்டு, இருப்பவர் தம்மிலான உறவு மாற்றங்களை உள்வாங்கி, வாழ்வைத் தொடர்வதற்கான 
வழிகளை அமைத்துக் கொள்கிறோம். 
"பிறப்பைப் போலவே மரணமும் வாழ்வு குறித்தது தான்' என்கின்றனர் அறிவுடையோர்.  நம்முடைய அம்மா, அப்பா (அல்லது யாராயினும்) வயதானவர்கள் என்றால், அல்லது மரணிக்கப் போகிறார்கள் என்றால், அவர்களுக்கு இம்மண்ணுலகில் இருக்கும் குறைந்த கால அவகாசத்தைப் புரிந்துகொண்டு, தற்போது சேர்ந்திருக்கும் தருணங்களை ரசிப்பது, கொண்டாடுவது, 
அனுபவிப்பது சரியான அணுகுமுறை. நம்மைச் சுற்றியிருக்கும் யாரும் பயத்தோடு, கவலையோடு, கோபத்தோடு, சோகத்தோடு சாகக் கூடாது என்பதில் குறிப்பாய் இருப்போம். ஒவ்வொருவரின் மரணமும் கண்ணியமானதாக, கவுரவம் மிக்கதாக இருக்கச் செய்வோம்.  
பிறக்கும்போதே சாகத் தொடங்குகிறோம்; உயிர்வாழும் ஒவ்வொரு நொடியிலும் செத்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வும், சாவும் பின்னிப் பிணைந்தே கிடக்கின்றன. மரணம் வரப்போகிறது என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால் அதைப் பற்றியே சிந்தித்து வாழ்வை இழக்க வேண்டிய  தேவையில்லை.
"உறங்குவது போலுஞ் சாக்காடு' என்கிறது வள்ளுவம். உறங்கப் போவதற்கு முன்னால், நாம் உட்கார்ந்து கவலைப்படுவதில்லையே? எனவே 
இரண்டாவது வழிமுறை மரணத்தைப் பற்றியே நினைத்துத் துவளாமல் இருப்பதும், வரும்போது துணிந்து எதிர்கொள்வதும்தான். 
உலகின் பெரும்பான்மையான மதங்களில், பண்பாடுகளில் சொர்க்கமும், நரகமும் முக்கியமான விடயங்களாக இருக்கின்றன. சொர்க்கம் உண்மையாகவே இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்; நீங்கள் அங்கே  போய்ச் சேர்வீர்களா என்று அமெரிக்காவில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. பங்கேற்றவர்களில் 88 விழுக்காடு பேர் உறுதியாக சொர்க்கத்துக்குப் போவோம் என்று நம்பினர். 
ஆனால் ஆறு விழுக்காடு அமெரிக்கர்கள் உறுதியாகத் தெரியவில்லை என்றும், எஞ்சிய ஆறு விழுக்காடு பேர் தாங்கள் சொர்க்கத்துக்குள் நுழைய வாய்ப்பேயில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த கடைசி ஆறு விழுக்காடு பேரின் உண்மைத்தன்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்களில் ஒருவர் என்னுடைய எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. ஆக வர வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
என்னுடைய 21-ஆவது வயதில் எத்தியோப்பியா நாட்டில் ஒரு பள்ளி ஆசிரியராக எனது வாழ்வைத் தொடங்கினேன். அந்நாட்டின் அடுக்கடுக்கான மலைகளுக்கிடையே அமைந்திருந்த, சுற்றிலும் "டிக்ரை மக்கள் விடுதலைப் படை' எனும் கொரில்லாக் குழுவினரால் 
சுற்றிச் சூழப்பட்ட, வன்முறை வயப்பட்ட ஒரு குக்கிராமத்தில் நானும், இரண்டு கேரளத்  தோழர்களும் பணியமர்த்தப்பட்டோம். மருத்துவமனைகள் ஏதுமற்ற, ஆனால் ஏராளமான ஆபத்தான நோய்கள் பரவிக் கிடந்த அந்த ஊரிலிருந்து நினைத்த நேரத்தில் வெளியேறக் கூட முடியாத நிலையில், மரணம் எந்நேரமும் எங்களைத் தாக்கும் அபாயத்தோடு வாழ்ந்தோம். 
ஒரு நாள் மூவருமாக ஒரு சிறிய பாதை வழியாக பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருந்தபோது, பல்லாயிரக்கணக்கான மாடுகள் தூள் கிளப்பிக்கொண்டு எதிரே ஓடி வந்துகொண்டிருந்தன. செய்வதறியாது திகைத்து நின்றபோது, ஒரு நண்பர் மலையாளத்தில் உரக்கக் கத்தினார்: ""ஒதுங்கு, ஒதுங்கு, வெளிநாட்டுக்குப்போய் மாடு முட்டிச் செத்திருக்கிறான் பார் என்று ஊரில் சிரிப்பார்கள்!'' வாய்விட்டுச் சிரித்தால், நோய்விட்டுப் போகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாடும் முட்டாமல் போகும் என்பதை அன்றுதான் அறிந்தேன். மரணத்தை எதிர்கொள்ளும் மூன்றாவது வழிமுறை, அதைக் கண்டு அஞ்சுவதைவிட, அதன் முகத்தை உற்றுநோக்கி சிரித்துவிடுவதுதான். 
சொர்க்கத்தின் வாசலைக் காவல் காத்துக் கொண்டிருந்த தேவதைக்கு அன்று கொஞ்சம் அதிகமான வேலைகள் இருந்தன. எனவே அங்கிருந்த நம்மூர் பெண் ஒருவரை அழைத்து, வாயிற்காவல் வேலையில் தனக்குக் கொஞ்சம் உதவும்படி  கேட்டுக் கொண்டது. செத்துப் போனவர்கள் யாராவது வந்தால், ஒரு வார்த்தையைச் சொல்லி, அதன் எழுத்துகளை அவர்கள் சரியாகச் சொல்கிறார்களா என்று பார்த்து, பிழையின்றிச் சொன்னால் மட்டும் சொர்க்கத்துக்குள்ளே அனுமதிக்கும்படிக் கேட்டுக் கொண்டது. 
சற்று நேரத்தில் மரணமடைந்த ஒருவர் வந்தார். நம்மூர் பெண்மணி "அன்பு' என்ற வார்த்தையைச் சொல்லி, எழுத்துகளை சொல்லச் சொன்னார். சரியாகச் சொல்லவே, அவர் அனுமதிக்கப்பட்டார். கொஞ்ச நேரம் கழித்து, இன்னொருவர் வந்தார். நமது பெண்மணி "காதல்' 
என்கிற வார்த்தையைச் சொல்லி, எழுத்துகளைக் கேட்டார். அவரும் சரியாகச் சொன்னதும், உள்ளே அனுமதிக்கப்பட்டார். 
திடீரென நம்மூர் பெண்மணியின் கணவர் மரணமடைந்து அங்கே வந்து நின்றார். தன் மனைவியையும், அவரது முக்கியமான  பொறுப்பையும் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த  கணவரிடம், நமது பெண்மணி நுழைவுத்தேர்வு முறையை விவரித்தார். ஆவலோடு 
தயாராக நின்ற கணவரிடம், அவருக்கான வார்த்தையைச் சொன்னார் நம்மூர் பெண்மணி: செக்கோஸ்லொவேக்கியா! 
மனிதம் போற்றும் திறனின் அங்கம்தான் மரணம் கடக்கும் திறன் என்பதை உணர்வோம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

முழு கட்டுரையைப் படிக்க →