இளைஞர்மணி

கண்காணியுங்கள்...  மனநிலையை!

சுரேந்தர் ரவி

மனதின் எண்ணங்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கின்றன. சூழ்நிலைகளில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்கள் கூட நமது எண்ணங்களை பாதிக்கின்றன.அதனால் ஏற்படும் மனநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. தற்கால இளைஞர்களின் எண்ணவோட்டங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. வேலைப்பளு, பணிஅழுத்தம் உள்ளிட்டவை காரணமாக அவர்களின் மனநிலை பெரும் மாறுதலைச் சந்திக்கிறது.

சில நேரங்களில் அதீத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழும் அவர்கள், சிறிது நேரத்துக்குப் பிறகு கவலையுடனோ கோபத்துடனோ இருக்கிறார்கள்.

இத்தகைய மனநிலை மாற்றங்கள் இளைஞர்களிடையே பெரும் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பிரச்னைகளை இளைஞர்கள் சந்திக்கின்றனர்.

நம் மனநிலையானது, நமது அன்றாடச் செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சில இளைஞர்கள் இந்த மனநிலை மாற்றங்கள் காரணமாக கூடுதல் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.

அத்தகைய மனநிலையில் தம்மைச் சார்ந்துள்ளவர்களை அவர்கள் துன்புறுத்துகின்றனர். அத்தகைய வாய்ப்பு காணப்படாத இடங்களில், அவர்கள் தங்களையே துன்புறுத்திக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

மனநிலையைப் பாதுகாப்பதில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனநிலையில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படுவதாக உணரும் இளைஞர்கள், குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி எளிதில் அதிலிருந்து விடுபட முடியும். மனநிலையில் ஏற்படும் மாறுதல்களைக் கண்காணிப்பது அவசியம்.

மனநிலை மாறுதல்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

அதற்காக நாள்குறிப்பைப் பயன்படுத்தலாம். தனி பதிவேட்டைப் பயன்படுத்தலாம். மனநிலையைக் கண்காணிப்பதற்கென பல்வேறு கருவிகளும் இணையவழி சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி இளைஞர்கள் தமது மனநிலையைக் கண்காணித்து, மனநிலையில்செய்ய வேண்டிய மாற்றங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

காலை, மதியம், மாலை, இரவு ஆகிய வேளைகளில் எந்த மாதிரியான மனநிலைகளில் காணப்படுகிறோம் என்பதைப்பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் எந்த மாதிரியான விஷயங்கள் நமது மனநிலையைப் பாதிக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தூக்கம், உணவுப் பழக்கம், அன்றாடச் செயல்பாடுகள் உள்ளிட்டவை மனநிலையில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும்இந்த மனநிலையைக் கண்காணிக்கும் செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மனநிலைகளைக் கண்காணித்து பதிவு செய்த பிறகு, அவற்றை முறையாக ஆராய வேண்டும். எந்த மாதிரியான சூழலில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம், மனநிலை மாற்றங்கள் நிகழும்போது நம்முடைய செயல்பாடுகளில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறோம், நமக்குள் எவ்வாறு கட்டளைகளைப் பிறப்பித்துக் கொள்கிறோம் என்பன போன்றவற்றை ஆராய வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஆராய்வது நம் மனநிலைகளை நாம் கட்டுப்படுத்த, நெறிப்படுத்தஉதவும்; அன்றாடச் செயல்பாடுகளை முறைப்படுத்த உதவும். 
மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதையும் பெருமளவில் குறைக்க முடியும்.

மனநிலையைப் பதிவு செய்யும்போது நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தன்னிச்சையாக மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தையும் பதிவு செய்யுங்கள். ஒருசிலவற்றைப் பதிவு செய்வது, மற்றவற்றைப் பதிவு செய்யாமல் விடுவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். அதேபோல், எதிர்மறையான மனநிலையை மட்டும் சிலர் பதிவு செய்வார்கள். மகிழ்ச்சியாக இருப்பதைப் பதிவு செய்யாமல் விட்டு விடுவார்கள். ஆனால், மகிழ்ச்சியான தருணங்களும் மனநிலை மாற்றத்தில் இடம் பெற வேண்டும்.

மகிழ்ச்சியோ, சோகமோ, குழப்பமோ, கோபமோ அனைத்து மனநிலைகளையும் முறையாகப் பதிவு செய்யுங்கள்.

மனநிலையைப் பதிவு செய்ய மறக்கும் சூழல் ஏற்பட்டால், அதற்கென கைப்பேசியில் நினைவூட்டல்களை (ரிமைண்டர்) அமைத்துக் கொள்ளுங்கள். அது தொடர்ச்சியாகப் பதிவு செய்வதற்கும் அவற்றைக் கண்காணிப்பதற்கும் பெரிதும் உதவும். மனநிலையை சுயமாகக் கண்காணித்தும் உரிய தீர்வு காணமுடியவில்லை எனில், மருத்துவரை அணுகுவது நல்லது.

மனநிலையைக் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது. அன்றாட நிகழ்வுகளை நிர்ணயிப்பதில் மனநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, மனநிலையை உரிய முறையில் பேணி வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக மாற்றுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT