முகப்பு
இளைஞர்மணி

வன்முறை காட்சிகள்... மூடிக் கொள்ளுங்கள்...கண்களை!

காட்சி ஊடகங்களில் வெளி வரும் காட்சிகள்  இளைஞர்களிடமும், மாணவர்களிடமும்  தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

காட்சி ஊடகங்களில் வெளி வரும் காட்சிகள் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதேசமயம் வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ள காட்சியை காணும் ஒருவர் அல்லது காட்சி ஊடகத்தில் தொடர்ந்து கொலை செய்யக்கூடிய கதாநாயகனை பார்க்கும் பலர் அதுபோல மற்றவர்களை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணுவதில்லை எனவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஊடகங்களில் வெளியாகும் வன்முறை காட்சிகள் மட்டுமே ஒருவருக்கு வன்முறை எண்ணங்களை உருவாக்குவதில்லை . ஒருவர் வன்முறையில் இறங்குகிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்றாகத்தான் ஊடகங்களில் வெளிவரும் காட்சிகள் இருக்கக் கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் 1950- 60- ஆம் ஆண்டுகளிலேயே தொலைக்காட்சி ஒவ்வொருவரின் வீட்டிற்கும் வந்து சேர்ந்து விட்டது. அன்றைய காலகட்டத்திலேயே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறிப்பாக, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வன்முறைக் காட்சிகள் சமூகத்தில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தொலைக்காட்சிகளில் காட்டப்படும் வன்முறைக்காட்சிகள் சமூகத்தில் நேரடியான, உடனடியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று கண்டறியப்பட்டது.

ஆனால் ஊடகங்களில் வெளியாகும் வன்முறைக் காட்சிகளின் விளைவுகள் மிகவும் நுட்பமானவை. மறைமுகமாக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்கின்றன ஆய்வுகள். குழந்தைப் பருவத்தில் பார்க்கும் காட்சிகள் ஒருவித அதிர்ச்சியை குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடும். காலப்போக்கில் ஒருவிதமான வன்முறை மனப்பான்மையுடன் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிடுவதற்குக் காரணமாகிவிடும்.

காட்சி ஊடகங்களில் வன்முறைக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கு வன்முறையில் ஈடுபடும் வாய்ப்பு 10% அதிகம் என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. 100 வன்முறைச் செயல்கள் நடக்கும் ஒரு பகுதியில் 110 வன்முறைச் செயல்களாக அது மாறுவதற்கான வாய்ப்புகளை வன்முறைக் காட்சிகள் ஏற்படுத்தித் தரும். எனினும் காட்சி ஊடகங்களில் வன்முறை காட்சிகளை முற்றிலும் தடை செய்துவிட முடியாது. ஏனெனில் வாழ்க்கையில் வன்முறையான செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஊடகங்கள் அவற்றைப் பிரதிபலிக்கின்றன. அதைத் தடுப்பது கருத்து உரிமையைப் பறிப்பது போலாகும் என்று கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் ஊடகங்களைப் பார்க்கும் இளம் வயதினருக்கு நாம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஊடகத்தில் வரும் விளம்பரங்களைப் போலவே வன்முறைக் காட்சிகளும் அவர்களுடைய மனதை ஈர்த்து ஆழ்மனதில் வன்முறைச் சிந்தனைகள் பதிந்துவிடக் கூடும். எனவே, ஊடக நிகழ்ச்சிகளில் எதைத் தேர்வு செய்வது ? எதை ஒதுக்குவது என்ற விவரத்தை பெரியவர்கள் இளம் வயதினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். காட்சி ஊடகங்களுக்குச் செலவிடும் நேரத்தை படிப்படியாகக் குறைத்து அவர்களுக்கு மாற்று வழியை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பும் சமூகத்திற்கு இருக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் படத்தைப் பார்க்கும் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு, சுற்றி நின்று நூறுபேர் துப்பாக்கியால் சுட்டாலும், ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலாக நடந்து செல்லும் காட்சிதான் கண்ணுக்குள் தோன்றும். அது போலவே தாங்களும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அவர்களை அழைத்து ஒரு சிறு கல்லெடுத்து அவர்கள் மீது எறிந்து வலிக்கிறதா ?என்று கேளுங்கள். ஆம் என்பார்கள். ஒரு சிறு கல் பட்டாலே இவ்வளவு வலிக்கிறது என்றால் 100 துப்பாக்கியால் சுட்டால் என்ன ஆவது? என்று விளக்கமாக சொல்லிப் பாருங்கள். அவர்களுக்கு உண்மை புரிந்துவிடும்.

ஊடங்களில் ஒளிபரப்பப்படும் வன்முறைக் காட்சிகள், பார்வையாளர்களுக்கு ஒருவித பதற்ற மனநிலையை எப்பொழுதும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இதனால் அடுத்தடுத்து வரும் காட்சிகளை காண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கிறது. இதனால் தான் காட்சி ஊடகங்களில் வன்முறைகள் அதிகம் இடம்பெறுகின்றன என்கின்றன ஆய்வுகள்.

மேலும் பொழுதுபோக்கு கலாசாரத்தில் இன்றைய உலகம் மூழ்கிக் கிடக்கின்றது. அதற்கு இத்தகைய வன்முறைக் காட்சிகள் தீனி போடுகின்றன. பெரும் பதற்றத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகின்றன.

எந்த ஒரு விஷயமும் நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. காட்சி ஊடகங்களில் காட்டப்படும் பல்வேறு நல்ல கருத்துகளை எடுத்துக் கொண்டு, வன்முறைக் காட்சிகளை தவிர்ப்பதுதான் இளம் வயதினர் முன்பிருக்கும் ஒரே வழி.

முழு கட்டுரையைப் படிக்க →