இளைஞர்மணி

மனம்... நீங்கள்! கண்காணிப்பு!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்று மிகவும் பரபரப்பான ஓர் உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

கோமதி எம். முத்துமாரி

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்று மிகவும் பரபரப்பான ஓர் உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதிலும் நகரங்களில் அமைதியான சூழ்நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. எங்கும் எதிலும் அவசரம்... இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மனநல பாதிப்புகள். வீடு, வேலைப்பளு, பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களினால் பெரியவர்கள், வயதானவர்களுக்குத்தான் மன அழுத்தம் ஏற்படும் என்று கருதினால், பள்ளி செல்லும் குழந்தைகள், இளைஞர்கள் கூட மன அழுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் உள்ள பிரச்னை இது. அதனாலேயே பொது மருத்துவர்களுக்கு சமமாக இன்று மனநல மருத்துவர்களும் ஆலோசகர்களும் பெருகியுள்ளனர். வியாபார நோக்கிலும் இது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பது வேறு விஷயம்.

தற்போதைய சூழ்நிலையில் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும்மிகவும் மெனக்கெடுகிறார்கள். ஏதேனும் ஒரு வழியில் மனதை சாந்தப்படுத்தவும், மனநிலையை அறிந்து கொள்ளவும் முயற்சிக்கின்றனர்.

அந்தவகையில், உங்கள் மனநிலையை அறிந்துகொள்ள தொழில்நுட்பம் பல வழிகளைக் காட்டுகிறது.

மனநிலையைக் கண்டறிவது:

சீரான இடைவெளியில் மனநிலையைப் பதிவு செய்யப் பயன்படுவதே "மூட் ட்ராக்கர்'. சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும் மனநிலையை வெவ்வேறு நேரங்களில் கண்காணிக்க வேண்டிய அவசியத் தேவை இருக்கிறது. எந்த சூழ்நிலையில் எந்த மாதிரி மனநிலை வேறுபடுகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள இதுஉதவுகிறது.

சில இக்கட்டான சூழ்நிலையில், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநலப் பிரச்னைகள் ஏற்படும் நபர்களுக்கு இந்த மனநிலை கண்காணிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

மனநிலையை கண்காணிப்பதற்கு பல வழிமுறைகள் இருப்பினும் அவற்றில் உங்களுக்கு எது உகந்ததாக இருக்குமோ அதனைப் பின்பற்றலாம்.

மனநிலையைக் கண்காணிக்கும்வழிமுறைகள்:

மனநிலையில் மாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளவும், வாழ்க்கையில் அந்த காரணங்களைத் தவிர்ப்பதற்கும் மனநலனை மேம்படுத்துவதற்கும் இது உதவும்.

தூக்கம், உணவுமுறை மற்றும் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்கவும், இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் வழிகளைக் கண்டறியவும், சவால்களை எதிர்கொள்ளவும் உதவும்.

குறிப்பாக குழந்தைகள், இளம் பருவத்தினரிடம் ஏற்படும் பிரச்னைகளை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகஇருக்கும்.

தினசரி அட்டவணை

ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன மனநிலையில் இருந்தீர்கள் என்பதைக் குறித்து வைக்க வேண்டும். ஒரு நோட்டில் இந்த மாதத்திற்கான ஓர்அட்டவணையைத் தயார்செய்து அதில் ஒவ்வொரு நாள் மனநிலையையும் எழுத வேண்டும். மனநிலைக்கான காரணத்தையும் எழுதி வைக்க வேண்டும்.

அந்த குறிப்பிட்ட வாரம் அல்லது மாதம் முடிந்தவுடன் ஒருமுறை திரும்பிப்பார்த்து அடுத்த முறை மனஅழுத்தத்திற்கான சூழ்நிலைகளைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

விஷுவல் டிராக்கர்:

நவீனத்தின் ஒரு பகுதியாக மனநிலையைக் கண்காணிக்கும் விடியோ/கிராபிக்ஸ் வடிவிலான விளக்கப் படங்களையும் பயன்படுத்தலாம். மனநிலைக்கு ஏற்ப வண்ணங்களை அதில் நிரப்பலாம். இறுதியாக, குறிப்பிட்ட வாரத்தில் எந்த வண்ணங்கள் அதிகமாக இருக்கிறதோ அதுவே அந்த வாரத்தின் உங்கள் சராசரி மனநிலை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மொபைல் செயலிகள்:

உடல்நிலை குறித்து கண்காணிக்கும் மொபைல் செயலிகள் பல இருக்கின்றன. அதுபோலவே, மனநிலை குறித்து அறியும்/கண்காணிக்கும் செயலிகளும் தற்போது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். இந்த செயலிகள் உங்களின் தூக்கம், உணவு, உடற்பயிற்சி, தியானம் உள்ளிட்ட உங்களின் அன்றாட நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றன.

உதவும் செயலிகள்/ இணையதளங்கள்:

மனநிலை மற்றும் உணர்ச்சிகளைக் கண்காணிக்க உதவும் கருவிகளைக் கொண்ட இணையதளங்களும் பல உள்ளன. மோசமான மனநிலை கொண்டவர்கள், அடிக்கடி மனச்சோர்வு, பதற்றம் ஏற்படும் நபர்கள் இணையதளங்களின் உதவியை நாடலாம் (உதாரணமாக, மூட் ட்ராக்கர்.காம்).

இவற்றில் உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் ஒரு வழியை பின்பற்றலாம்.சிபிடி தாட் டைரி - ஆப்பிள் ஸ்டோர், கூகுள் பிளேவில் கிடைக்கிறது.

டேலியோ - ஆப்பிள் ஸ்டோர், கூகுள் பிளேவில் கிடைக்கிறது.
மை தெரபி - ஆப்பிள் ஸ்டோர், கூகுள் பிளேவில் கிடைக்கிறது.
மூட் கிட் -ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

உங்களுடைய மனநிலை என்னவென்பதை நீங்களே முடிவு செய்வதால் அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும். உண்மையில் நீங்கள் இன்று என்ன மனநிலையில் இருந்தீர்களோ அதைத்தான் குறிப்பிட வேண்டும். மற்ற விஷயங்களிலும் நேர்மையாக இருக்க இது உதவும்.

எந்த சூழ்நிலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள உதவும். சில நேரங்களில் நீங்கள் மனச்சோர்வு அடையும்போது அவற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று உங்களுக்கு இது நினைவுபடுத்தும். இரண்டு விதமான மனநிலைகளையும் கண்காணிப்பது அவசியம்.

சீரான இடைவெளியில் மனநிலையைக் கண்காணிப்பது அவசியம். உதாரணமாக, காலை, பிற்பகல், மாலை, இரவு நேரங்களில் உங்கள் மனநிலையைப் பதிவு செய்யலாம். எந்த நேரத்தில் மனநிலை எவ்வாறு மாறுகிறது என்பதை அறிந்து
கொள்ளலாம்.

சாத்தியமான சவால்

உங்கள் மனநிலையை நீங்களே பதிவு செய்ய வேண்டும் என்பதால் இதனைப் பயன்படுத்துவது சற்று சவாலான காரியம்தான். ஆனால், தற்போதைய மற்றும் எதிர்கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், உங்கள் உடல்நிலை, மனநிலையைக் கவனத்தில்கொண்டும் இதனைப் பயன்படுத்துவதும் உங்கள் மனதின் நிலையைக் கண்காணிப்பதும் அவசியமாகிறது.

உங்கள் மனநிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது எளிதானது அல்ல என்றாலும், ஏதேனும் ஒரு வழிமுறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமாக எதிர்கால அதீத விளைவுகளைத் தடுக்கலாம். ஏனெனில், வருங்காலத்தில் மனநலப் பிரச்னைகள் அதிகமாகலாம். மனநலப் பிரச்னையால் உடல்நலமும் பாதிக்கப்படலாம். எனவே மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT