முகப்பு
மகளிர்மணி

என்னுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம்! சொல்கிறார்: பிரதிகா யாஷ்னி

""இந்த சமூகத்தில் உங்களுக்கென்று தனி அடையாளம் இருந்தால் மட்டுமே மக்கள் மதிப்பளிப்பார்கள். நம்முடைய சமூகத்தின் வேதனையான நிலைமை இதுதான்'' என்று கூறும் திருநங்கை

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:52 AM
பகிர்:

""இந்த சமூகத்தில் உங்களுக்கென்று தனி அடையாளம் இருந்தால் மட்டுமே மக்கள் மதிப்பளிப்பார்கள். நம்முடைய சமூகத்தின் வேதனையான நிலைமை இதுதான்'' என்று கூறும் திருநங்கை பிரதிகா யாஷ்னி, நீண்ட கால  நீதிமன்ற போராட்டத்திற்கு பின்னர்  இந்தியாவிலேயே முதல் முறையாக
சப் இன்ஸ்பெக்டர் பதவியை பெற்றுள்ளார்.

 சேலத்தில் பிறந்து வளர்த்த இவர், 14வது வயதில் தன்னுடைய உடலில் தோன்றிய மாறுதல்களை உணர்ந்தார். இந்த மாற்றத்தை நெருங்கிய நண்பர்களுடனும் கூறி பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்த இவர், 20வது வயதில்தான் பெற்றோர்களிடம் நிலைமையை விளக்கியபோது அவர்களாலும் இதை புரிந்து கொள்ள முடியவில்லை. மாறாக இவரை ஜோதிடர்கள், மனோதத்துவ நிபுணர்கள், மன நிலை சிகிச்சை மருத்துவமனை என அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தவர்,சென்னைக்கு வந்தார். சென்னையில் சில திருநங்கைகளை சந்தித்து விவரங்களை கூறிய பின்னரே, இவருக்கு உதவி கரங்கள் நீண்டன.

"" இந்த சமூகத்தில் எங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது தான் முக்கியமாகும். கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படை தேவைகள் அனைத்துமே கடுமையான முயற்சிக்குப் பின்னரே கிடைக்கும். அதைவிட எங்களுக்கு தங்குவதற்கு வசதியான இடம் கிடைப்பது மிகமிகப் பெரிய பிரச்னை'' என்று கூறும் பிரதிகா, தற்போது சமூகத்தில் திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரமும் பல சலுகைகளும் சட்டத்தின் மூலம் கிடைத்து வருவதால், போலீஸ் அதிகாரியாக வேண்டுமென்ற கனவு இவரது மனதில் எழுந்தது. அன்றாட நிகழ்வுகள் மற்றும் சமூக நிர்வாகங்களில் ஆர்வம் கொண்ட இவருக்கு, சென்னையில் சுலபத்தில் வேலை கிடைக்கவில்லை. பெண்கள் விடுதியொன்றில் வார்டனாக பணியாற்றிய இவர், தன்னார்வ தொண்டு நிறுவனமான "தோழி' உதவியுடன் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை துவக்கினார். கூடவே மருத்துவ மனைகளுக்கு சென்று சேவை செய்தார். "" நிறைய பேருக்கு டிரான்ஸ்ஜென்டருக்கும், டிரான்செக்சுவலுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை'' என்கிறார்.

முதன்முதலாக தமிழ்நாடு ஒருமித்த சேவை தேர்வாணையத்தில் விண்ணப்பித்தபோது திருநங்கைகளுக்கென்று தனிப்பிரிவு எதுவும் இல்லாததால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து முதன்முறையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, தேர்வு எழுதவும், உடல்

தகுதி மற்றும் பேச்சு திறனுக்குக்கும் நீதி மன்றம் இவருக்கு சாதகமாக

தீர்ப்பளித்தது. இவருக்கு துணையாக மனிதநேயம் ஐ.ஏ.எஸ் அகதெமி உதவியது. ஒவ்வொரு பிரிவினருக்கும் மதிப்பெண் சலுகை அளிக்கும்போது, திருநங்கை சமூகத்திற்கும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டுமென்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றிப் பெற்றார். ஒரு விநாடியில் வாய்ப்பை தவறவிட்டதற்காக உடல்தகுதி தேர்வில் நிராகரிக்கப்பட்டபோது மீண்டும் வழக்கு  தொடர்ந்து தன்னுடைய சப்-இன்ஸ்பெக்டர் கனவை நனவாக்கிக் கொண்டார்.

 ""இது என்னுடய வழக்கறிஞர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வழக்குகளுக்காக அவர்கள் பணம் ஏதும் பெறவில்லை. கடைசியில் என்னுடைய பெற்றோர்களும் உண்மையை உணர்ந்து இப்போது அடிக்கடி என்னை வந்து பார்த்து செல்கின்றனர்.

என்னுடைய படிப்புக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் இணையதளம், நண்பர்கள், வாசகசாலை மூலமாகவும் புத்தகங்களை வாங்கிப் படித்தேன். காலை 5 மணிக்கு எழுந்து 40 நிமிடங்கள் ஓட்டப் பயிற்சி, விளையாட்டு, தேக பயிற்சி போன்றவைகளில் ஈடுபடுவேன். இப்போதும் இந்த பயிற்சி தொடர்கிறது. இன்னும் ஓராண்டு கழித்து சப் - இன்ஸ்பெக்டருக்கான சீருடையை நான் பெறும்போது தான் என்னுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் துவங்கும் என்று கூறும் பிரதிகா, திருநங்கை சமூகத்தை உயர்த்தவும், பெண்கள் மற்றும் பெண் சிசுக்கள் பாதுகாப்பு குறித்து குரல் கொடுக்கவும் தீர்மானித்துள்ளார். ""ஒருவர் குரல் எழுப்பும் போதுதான் மேலும் பலர் ஆதரவளிக்க முன்வருவார்கள்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.