மகளிர்மணி

பெண்களுக்கான வீர விளையாட்டு 'மல்லர் கம்பம்'!

ஆதி மனிதன் மரத்தின் மீது வீடு கட்டி வசித்தபோது மரத்தின் மீது ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு அவற்றை வழிமுறை படுத்தினான்.

மோகனா

ஆதி மனிதன் மரத்தின் மீது வீடு கட்டி வசித்தபோது மரத்தின் மீது ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு அவற்றை வழிமுறை படுத்தினான். அதற்காக தன்னைப்போன்ற மனித உருவத்தை மரம் அல்லது கல்லில் வடித்து அவற்றுடன் மல்லுக்கட்டி பயிற்சிகள் மேற்கொண்டதால் இந்த விளையாட்டுக்கு "மல்லர் கம்பம்' என்ற பெயர் உண்டானது. மன்னர்கள் காலத்தில் ஒற்றர்கள், மல்யுத்த வீரர்கள் மட்டுமே ரகசியமாக அறிந்து வைத்திருந்த இந்த கலை, தற்போது இந்திய அளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் விளையாடப்பட்டு வருகிறது என்று சொல்லும் அகில இந்திய மல்லர் கம்பக் கூட்டமைப்பின் துணை செயலாளர் மற்றும் பயிற்றுநர் எஸ். பரணிதரன், இப்பயிற்சியை பற்றி மேலும் விளக்குகிறார்:

திருவிழாக்காலங்களில் விளையாடப்படும் உரியடி விழாவிற்கு பயன்படுத்தப்படும் வழுக்கு மரம் அக்காலத்தில் சோழர்கள் விளையாடிய மல்லர் கம்பத்தின் மறு உருவாகும். காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மாமல்லனான நரசிம்மப் பல்லவன் இக்கலையைச் செழிக்கச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். எண்ணெய் தடவிய வழுக்குக் கம்பத்தின் உச்சியில் பரிசுப்பொருளை வைத்து அதை எடுக்கும் போட்டிகள் நடத்தப்படுவதும் இத்தகைய பயிற்சி முறையை ஒட்டியதே. மராட்டிய மற்றும் வட மாநிலங்களில் விளையாடப்படும் "மால்காம்' என்பது மல்லர் கம்பம் என்ற பெயரிலிருந்து மருவி வந்ததேயாகும்.

தமிழர்களின் வீர தற்காப்பு கலைகளான, வாள்சண்டை, வில் சண்டை, மல்யுத்தம், யோகா, களரி, சிலம்பம், குதிரை ஏற்றம், ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல், பிடிவரிசை, வர்மக்கலை போன்றவைகளில் ஒன்று இந்த மல்லர் கம்பம். இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. உடலையும் மனதையும் ஒரு நிலைப்படுத்தி வலுபடுத்தும் மிகச்சிறந்த உடல் வித்தை மற்றும் சீருடல் பயிற்சி கலையாகும்.

இந்த விளையாட்டு, நிலைக்கம்பம், தொங்குகம்பம், கயிறு விளையாட்டு என பிரித்து விளையாடப்படுகிறது. நிலைக்கம்பம் என்பது ஒரு பருமன் கொண்ட மரத்தை நட்டு வைத்து அதில் ஏறி பலவித ஆசனங்களை செய்து காண்பிப்பதாகும். இதை பெரும்பாலும் ஆண்கள் விரும்பி விளையாடுகிறார்கள்.

தொங்கு கம்பம் என்பது நட்டு வைத்த கம்பத்தின் மீது பயிற்சி செய்தவர்கள் மாறுதலாக, அதே மல்லர் கம்பத்தினை ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிட்டு அதில் எண்ணெய் தடவி வீரதீர விளையாட்டுகள், ஆசனங்கள், ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றை செய்து பழகுகின்றனர். கயிறு விளையாட்டு என்பது 11 அடி உயரத்தில் நட்டு வைத்த கம்பத்தில் செய்யும் ஆசனங்களை பெண்கள் 20 அடி உயர முடிச்சுகள் இல்லாத கயிற்றில் தொங்கியபடி செய்வதாகும். கயிற்றில் தொங்கும் கம்பம், அந்தரத்தில் தொங்கும் கம்பம் ஆகியவற்றின் மீது தாவி ஏறி ஆசனங்களைச் செய்வர்.

18 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பலம்பத்த தாதா தியோதர் என்பவரால் இவ்விளையாட்டு புத்துயிர் பெற்றது. மகாராஷ்டிராவில் பிரபலமானதாக விளங்கும் இந்த விளையாட்டு, இம் மாநிலத்தில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறை வணக்கத்துக்குப் பிறகு ஐந்து நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்வதாக சொல்கின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களிலும் தேசிய உடல்வித்தை போட்டியாக நடத்தப்படும் இந்த மல்லர் கம்பம் விளையாட்டை பல மாநில அரசுகள் அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன.

பொள்ளாச்சி, ஈரோடு, மற்றும் திருப்பூரில் தனியார் பள்ளிகளிலும் தனியாகவும் மல்லர் கம்பம் விளையாட்டை பயிற்சி அளித்துவருவதுடன் தற்போது கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மாணவ மாணவியருக்கு பயிற்சிகள் அளித்து வருகிறேன். சென்னையை பொறுத்தவரை அசோசியேஷன் மூலமாக பயிற்சி அளிக்கிறேன். இப்போது சுமார் 1300 மாணவ மாணவியர் மல்லர் கம்பம் பயிற்சியை எடுத்து வருகிறார்கள். மாணவிகளை பொருத்த அளவில் வருடாவருடம் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பான முறையில் பரிசுகளைப் பெற்று வருகிறார்கள்.

இப்பயிற்சியை 7 வயதிலிருந்தே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கலாம். இளைய தலைமுறையினர் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. வயதானவர்களுக்கு கால் கைகள் மட்டுமல்லாது உடலையும் வளைத்து செய்யும் திறன் அதிகம் இருக்காது என்பதால் இப்பயிற்சி அவர்களுக்கு பொருந்தாது.

மல்லர் கம்பம் விளையாட்டினால் பெண்களின் உடலின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும். அதனால் அவர்களால் எந்த ஒரு விஷயத்தையும் மிகச் சரியாக திட்டமிட்டு இலகுவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்ய முடிகிறது. மேலும் மனம் மட்டுமல்லாமல் உடலளவிலும் ஆணுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கின்றனர்.

மல்லர் கம்பம் பயிற்சியை பொருத்தவரை உள்ளரங்கு விளையாட்டரங்கம், சிறிய திறந்த வெளிகளிலும் செய்யலாம். இன்றைய இளம் தலைமுறையினருக்கு உடல் வலு குறைந்து போனதிற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாத இப்பயிற்சிகளை செய்வதன்மூலம் உடல் வலிமை, மன வலிமையுடன் நோயில்லாத வாழ்வும் நீண்ட ஆயுளும் பெறமுடியும். எந்த ஓர் ஆசாதாரணமான சூழ்நிலையிலும் பெண்களுக்கு இந்த மல்லர் கம்பம் பயிற்சி பெரிதும் உதவும்.  

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த வீர விளையாட்டில் முன்னணியில் இருக்கின்றன.

தமிழக அரசிடம் இந்த மல்லர் கம்பம் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரிக்கும்படி நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை: ரிசா்வ் வங்கி

காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

SCROLL FOR NEXT