முகப்பு
மகளிர்மணி

உலக அளவில் சேம்பியன்ஷிப் வெல்ல வேண்டும்! - சொல்கிறார் கார் பந்தய வீராங்கனை: அலிஷா அப்துல்லா

""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். பள்ளி படிப்பு சர்ச் பார்க்கிலும், கல்லூரி எம்.ஓ.பி. வைஷ்ணவாவும்தான். என்

மகளிர்மணி

உலக அளவில் சேம்பியன்ஷிப் வெல்ல வேண்டும்! - சொல்கிறார் கார் பந்தய வீராங்கனை: அலிஷா அப்துல்லா

""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். பள்ளி படிப்பு சர்ச் பார்க்கிலும், கல்லூரி எம்.ஓ.பி. வைஷ்ணவாவும்தான். என்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். பள்ளி படிப்பு சர்ச் பார்க்கிலும், கல்லூரி எம்.ஓ.பி. வைஷ்ணவாவும்தான். என் அப்பா ஆர்.ஏ. அப்துலாவும் ரேஸர்தான். ஏழு முறை சேம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். அவர்தான் என் குரு. அப்பா ரேஸர் என்பதால்  எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்தே ஞாயிற்றுக்கிழமை என்றால் அப்பாவோடு ரேஸ் நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடுவேன். அந்த வயதில் நண்பர்களுடன் விளையாடியதைவிட ரேஸ் டிராக்கில்தான் அதிகம் விளையாடி இருக்கிறேன். பொதுவாக  18 வயதில்தான் டூ-விலர் ஓட்டுவதற்கு லைசன்ஸ்  எடுக்கமுடியும். ஆனால் பைக் ரேஸ் நடக்கும் இடம் உட்பகுதிக்குள் இருப்பதால்  ஜுனியருக்கென்று தனியாக லைசன்ஸ் இருக்கிறது.  அந்த வகையில் எட்டு வயதிலேயே முதல் பைக் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அப்போதே எனக்கான துறை இதுதான் என்று முடிவு செய்து சீரியஸôக பைக் ரேஸ் பயிற்சி எடுத்துக் கொண்டேன்'' என்கிறார் இந்தியாவின் முதல் பெண் கார் ரேஸர் அலிஷா அப்துல்லா. மேலும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

போப்காட் சேம்பியன் ஷிப் பெற்றிருக்கிறேன், அதையடுத்து பைக் ரேஸ் சேம்பியன் போட்டியில் 15 ஆண்களுடன் போட்டியிட்டதில் இரண்டாவது இடத்தை பிடித்தேன், அடுத்து சூப்பர் பைக் ரேஸ்ஸிங் சேம்பியன் ஷிப் போட்டியில் 600 இஇ பைக் ஓட்டி மூன்றாவது இடம் பிடித்தேன். இதுவரை பல பைக் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறேன். அத்தனையும் ஆண்

போட்டியாளர்களுடன்தான்.

 2014-இல் தாய்லாந்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கார் ரேஸில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட முதல் பெண் நான்தான். அந்த போட்டியில் உலகளவில் 18 பெண்கள் கலந்து கொண்டனர் . அதில் ஆறாவது இடம்

பிடித்துள்ளேன். 

தேசிய அளவில் கலந்து கொண்டதற்கும், உலக அளவில் கலந்து கொண்டதற்கும் என்ன வித்தியாசம் ?

 நிறைய வித்தியாசம் இருக்கிறது. உலகளவில் பார்க்கும்போது அதிகப்படியான தரம் இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம். அங்கே ஆணா, பெண்ணா என்று பார்ப்பதில்லை. இவங்க அப்படி, இவங்க இப்படி என்ற பேக் ரவுண்ட் எல்லாம் பார்க்க மாட்டார்கள். அவர்களை பொருத்தவரை கார் சீட்டில் அமர்ந்து களத்தில் இறங்கிவிட்டால் ஆண், பெண் என்பதெல்லாம் இல்லை. நல்ல உற்சாகம் கொடுப்பார்கள்.  

இந்தியாவில் உங்களைப் போன்ற  பெண் ரேஸர்கள் இருக்கிறார்களா?

நான் தேசிய அளவில், உலக அளவிலான போட்டிகளுக்குச் செல்லும்போது பெண் ரேஸர்கள் வேறு யாரும் இல்லை. அதன்பிறகு சிலர் வந்திருக்கிறார்கள். அதனாலயே தற்போது நிறைய பெண் ரேஸர்களை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பயிற்சி அனுபவங்கள்?

முதலில் பைக் ரேஸ், கார் ரேஸ் ஓட்ட வேண்டும் என்றால் அதற்கு முதற்கட்ட தகுதியே உடலை பிட்டாக வைத்துக் கொள்வதுதான். அதற்காக ஜிம்முக்கு சென்று தினமும் 3 மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். பயிற்சியின் போது லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு ஓட்டப் பயிற்சியும் செய்வேன். அதைப் பார்க்கும் சிலர் பைத்தியம் என்று சிரிப்பார்கள். ஆனால், கார் ரேஸின் போது காருக்குள் 65 டிகிரி வெப்பம் இருக்கும். அந்த வெப்பத்தை பழக்கி கொள்ள வேண்டும் என்பதால் இப்படி செய்வேன்.

   பைக் ரேஸ் பயிற்சி என்றால் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் ஒரு வாரத்திற்கு முன்புதான் பயிற்சி எடுப்பேன். காரணம், இந்த விளையாட்டு மற்ற விளையாட்டுகளைப் போன்று தினப் பயிற்சியோ, வாரத்திற்கு ஒருநாள் பயிற்சி எடுத்துக் கொள்வதோ முடியாது. இந்தப் பயிற்சிகளுக்கான செலவுகள் அதிகம். 

உங்கள் வெற்றிகளை உங்கள் தந்தை எப்படி பார்க்கிறார்?

நான் எந்த போட்டியில் வெற்றிப் பெற்றாலும் அப்பா எப்பவுமே என்னைப் பாராட்ட மாட்டார். காரணம், பாராட்டிவிட்டால்  புகழில் மயங்கி அடுத்த போட்டியில் சரியாக ஓட்டாமல் விட்டுவிடுவேன் என்று நினைப்பார். நல்ல மோட்டிவேட்டராக இருந்து என்னை ஊக்கப்படுத்துவார்.

இதுவரை எவ்வளவு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளீர்கள்?

நூற்றுக்கும் மேலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. நான் கலந்துகொண்டதில் பெரிய விளையாட்டு என்றால் கார் ரேஸýக்காக இன்டர்நேஷனல் அளவில்  கலந்து கொண்டதுதான்.

ஆண் போட்டியாளர்களுடன் கலந்து கொள்ளும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

 பொதுவாக போட்டிக் களத்திற்கு வரும்போதே என்னை எப்படி ஓரங்கட்டுவது என்று ஒரு பிளானுடன்தான் ஆண்கள் இறங்குவார்கள். அதனால் நானும் எத்தனை ஆண்களை ஓரந்தள்ளிவிட்டு முன்னிலைக்கு வர வேண்டும் என்ற பிளானுடன் தான் இறங்குவேன். ஆனால் சாலைகளில் பயணம் செய்யும்போதுதான் நிறைய தொந்தரவுகள் இருக்கும்.  கொஞ்சம் வேகமாக சென்றாலும் உடனே அருகில் வந்து கொண்டிருக்கும் ரோட் சைட் ரோமியோக்களுக்கு என்ன ஆகிவிடுமோ தெரியாது. கலாய்த்துக் கொண்டு, ஓவர்டேக் செய்து கொண்டே வருவார்கள். நான் அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்வதில்லை.

 மறக்கமுடியாத அனுபவம்?

 ஒரு முறை பைக் ரேஸ் போய்க் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக பைக் சறுக்கிவிட்டது. அவ்வளவுதான் பைக்குடன் அப்படியே தலைக்குப்பற கவிழ்ந்துவிட்டேன். அதன்பிறகு, கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு சுயநினைவே இல்லாமல் இருந்தேன். ஹெட் இன்ஜுரி ஆகிவிட்டது. மறக்கமுடியாத மிகப் பெரிய அடி அதுதான். அதன்பிறகுதான் கார் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 

பைக் ரேஸ், கார் ரேஸ் நீங்கள் சாதிக்க விரும்புவது?

 கார் ரேஸ்தான் மிகவும் பிடித்திருக்கிறது. கார் ரேஸில் உலகளவில் சேம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதில் கலந்து கொள்வது சாத்தியமில்லாத ஒன்று. காரணம், பார்முலா 1 செம்பியன் ஷிப்.  உலக அளவில் நடக்கும் போட்டி. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் செலவாகும். அந்தப் போட்டியில் கலந்து கொள்ள சூப்பர் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

தற்போது பெண் ரேஸர்களுக்கு டிரெய்னராகவும் இருக்கிறீர்கள்? இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?

 ரேஸராக இருப்பதை விட  டிரெய்னராக இருப்பதுதான் ரொம்பவும் சவாலான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் பைக் ஓட்டுவதற்கானப் பயிற்சி மட்டுமில்லாமல் பிட்னெஸ், டிசிப்ளின், கேரக்டர் பீல்டிங் என  ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஸ்போர்ட்ஸ் என்று எடுத்துக் கொண்டால் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு டிரெய்னராக இருப்பதே வித்தியாசமான அனுபவம்தான்.

உங்கள் அகாடமி பற்றி? 

"அலிஷா அப்துல்லா ரேஸ்ஸிங் அகாடமி ஃபார் யுமன்'. ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.  சென்னையில் மட்டும் 72 பெண்கள் இருக்கிறார்கள். அதில் 20 பெண்கள் தற்போது முழுமையாக போட்டிக்கு தயாராகிவிட்டார்கள். இதைத் தவிர திருச்சி பெண்களும் இருக்கிறார்கள். பைக் ரேஸில் ஆர்வம் இருந்து பயிற்சி எடுத்துக் கொள்ளும் அளவிற்கு வசதியில்லாதவர்களுக்கு ஸ்பான்சர்கள் மூலம் இலவச பயிற்சி அளித்து வருகிறேன். அந்த வகையில் உலகிலேயே இலவசமாக பைக் ரேஸ் பயிற்சி அளித்து வரும் முதல் அகாடமி எங்களுடையதாகத்தான் இருக்கும். இதன் மூலம் நிறைய இந்திய பெண்களை பைக் ரேஸராகவோ, கார் ரேஸராகவோ உருவாக்க வேண்டும் என்பது என் ஆசை.

முழு கட்டுரையைப் படிக்க →