2016ஆம் ஆண்டுக்கான சர்வதேச பெண்கள் கால்பந்து போட்டிகளில் ரெஃப்ரீயாக பணிபுரிவதற்கான வாய்ப்பினை தமிழகத்தைச் சேர்ந்த ஜி.ரூபாதேவிக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) அளித்துள்ளது. பென்ட்லா டி கோத்(கேரளம்), டைட்டலி பால்(மேற்குவங்கம்), மரியா ரெபெல்லோ ஃப்டேட்(கோவா) ஆகிய மூவர் ஏற்கெனவே இந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் 4ஆவது ரெஃப்ரீயாக, தமிழகத்தின் சார்பில் தேர்வு பெறும் முதல் வீராங்கனை என்ற சிறப்பு ரூபாதேவிóக்கு கிடைத்துள்ளது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த ரூபாதேவி. இதுகுறித்து நம்மிடம் பேசியது:
கால்பந்து வீராங்கனை அனுபவம் பற்றி?
பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கானப் படிப்பை முடித்துள்ளேன். சிறுவயது முதல் விளையாட்டு மீது ஏற்பட்ட ஆர்வம், ஒருகட்டத்தில் எனக்கு கால்பந்து மீது அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தமிழக அணிக்காக 6 முறை தேசிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. மத்திய கள வீராங்கனையாக கால்பந்து ஆடிய எனக்கு, காமராஜர் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை. அணி கேப்டனாக தலா ஒரு முறையும், தமிழக அணி கேப்டனாக 2 முறையும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
ரெஃப்ரீ பணியை தேர்வு செய்ததற்கு காரணம்?
கடந்த 2010 - 12ஆம் ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக மாநில அளவிலானப் பெண்கள் போட்டிகள் நடைபெறவில்லை. இந்தச் சூழலில், கால்பந்தாட்டத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட நான், மாற்று வாய்ப்பாக ரெஃப்ரீ பணியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது.
பிடித்த வீரர்?
அர்ஜெண்டினாவின் மெஸ்சி.
பிடித்தமான ரெஃப்ரீ?
2002ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளில் நடைபெற்ற உலக கோப்பைப் போட்டியில் ரெஃப்ரீயாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த சங்கர் கோமாளீஸ்வரர்.
முதல் ரெஃப்ரீ அனுபவம்?
2012ல் நடைபெற்ற இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் முதல் முறையாக ரெஃப்ரீயாக பணியாற்றினேன். அதனைத் தொடர்ந்து, மலேசியா, நேபாளம், பக்ரைன், மாலத்தீவு போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளேன்.
எதிர்கால திட்டம்?
சர்வதேச ரெஃப்ரீ வாய்ப்பினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு, உடல் தகுதி அவசியம். அதனால், முதல் கவனம் உடல் நலத்தின் மீது. அடுத்தது, துல்லியமான முடிவுகளின் மூலம் சிறந்த ரெஃப்ரீயாக திகழ வேண்டும்.
ரூபாதேவியின் இந்த சாதனை குறித்து, சர்வதேச ரெஃப்ரீ பயிற்றுநர் சுரேஷ் கூறுகையில்:
""பிற விளையாட்டுகளில் வீரர்கள் மட்டுமே களத்தில் இறங்கி ஆட வேண்டும். ஆனால், கால்பந்தாட்டத்தை பொருத்தவரை ஒரு ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த 22 வீரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் பந்தை உன்னிப்பாக கவனித்து, பந்துக்கு இணையாக ரெஃப்ரீகளும் ஓட வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பிற விளையாட்டுகளில் உள்ள நடுவர்களைப் போலன்றி, கால்பந்தாட்ட ரெஃப்ரீக்கள் தனிச் சிறப்பு பெறுகின்றனர்.
சவலான இந்தப் பணிக்கு, சமூகக் கட்டுப்பாடுகள் அதிகமுள்ள தமிழகத்திலிருந்து ஒரு பெண் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சர்வதேச ரெஃப்ரீயாக தேர்வு செய்யப்படுவதற்கான கடின உழைப்பு, அதனை தக்க வைத்துக் கொண்டு களத்தில் தொடர்வதிலும் இருக்க வேண்டும். 17 மற்றும் 20 வயதிற்குட்பட்டோர் உலக கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் முத்திரைப் பதித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்க்க ரூபாதேவிக்கு வாழ்த்துகள்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.