மகளிர்மணி

குறளால் வந்த பெருமை!

கல்லூரியால் எனக்குப் பெருமை என்னால் இக்கல்லூரிக்குப் பெருமை எனக் கூறும் வகையில் செயல்படுவதே மாணவ, மாணவியருக்கான

ஜெயப்பாண்டி

கல்லூரியால் எனக்குப் பெருமை என்னால் இக்கல்லூரிக்குப் பெருமை எனக் கூறும் வகையில் செயல்படுவதே மாணவ, மாணவியருக்கான இலக்கணம் என்பர். அதன்படி ஆயிரக்கணக்கானோர் பயிலும் கல்லூரிகளில் குறிப்பிட்ட சிலரே கல்லூரிக்கும், தங்களுக்கும் ஒருசேர பெருமை தேடிக்கொள்வர்.

 மதுரை ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி தமிழ் இலக்கியம் முதலாண்டு மாணவி மீனாசங்கரி மாணவியின் இலக்கணமாகத் திகழ்வதாகக் கூறுகிறார் அக்கல்லூரி முதல்வர் சீ.மங்கையர்க்கரசி.

 சமீபத்தில் புதுதில்லியில் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்றங்கள் பாராளுமன்றத்தில் திருக்குறள் நிகழ்ச்சிக்குச் சென்று, மக்களவையில் திருக்குறளை உரக்கக்கூறி திருக்குறள் செல்வர் விருதையும், பாராட்டுச் சான்றையும் பெற்றுத் திரும்பியுள்ளார்  மீனாசங்கரி.

 திருக்குறளை உலகம் முழுதும் பரப்பும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்றம். இதன் அகில தேசியத் தலைவராக உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினர் (பாஜக) தருண் விஜய் உள்ளார்.

 அந்த அமைப்பின் சார்பில் திருக்குறளில் சிறந்த புலமை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 133 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு புதுதில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குடியரசுத் தலைவர் சந்திப்பு, மக்களவை வளாகத்தில் திருக்குறளை ஒப்புவித்தல் எனப் பல நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று தமிழின் பெருமையை மட்டுமல்ல, தாம் பயிலும் கல்வி நிறுவனங்களின் புகழையும் நிலைநாட்டி வந்துள்ளனர்.

 மதுரையிலிருந்து ஸ்ரீமீனாட்சி கல்லூரி மற்றும் அரசு சட்டக்கல்லூரி மற்றும் பள்ளி மாணவியர் பலரும் புதுதில்லி சென்று வந்துள்ளனர். அதில் மீனாட்சி கல்லூரி மாணவி மீனாசங்கரி மிக மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் கொத்தபுலிபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அய்யப்பன்-பூரணி தம்பதியின் மகள். ஏழ்மையால் தமது பெரியப்பா தங்கவேல், பெரியம்மா சிவகாமசுந்தரியின் ஆதரவால் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி வாசலைத் தொடும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர் இவர்.

 பாரதி கவிதை வழி பயணமே தனக்குப் பிடிக்கும் எனக் கூறும் மீனாசங்கரி இதுவரை ஏராளமான கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைக் குவித்துள்ளார். திருக்குறளை வேதமாகவும், வள்ளுவரை ஞானகுருவாகவும் கொண்ட இம்மாணவி, சுழன்றும் ஏர்பின்னது உலகம் எனும் குறளுக்கு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பொருள் கூறியதன் மூலம் புதுதில்லிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.

 உலகம் உருண்டை, அது தன்னைத்தானே சுற்றி வருகிறது என்று இந்த நூற்றாண்டுகளின் அறிவியல் வளர்ச்சியாலே நிரூபிக்கப்பட்டது. ஆனால், சங்ககால புலவரான நமது திருவள்ளுவர் சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்பதில், உலகம் உருண்டையானது, அது தன்னைச் சுற்றி வருகிறது என தீர்க்கதரிசனமாகப் பாடியிருக்கிறார் என்று அறிவியல் நோக்கிக் குறளை அணுகும் விதமே அவரை மற்ற மாணவ, மாணவியரிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.

கல்லூரிப் படிப்புக்காக மட்டுமே மதுரை வந்த மீனாசங்கரி, ""புதுதில்லிக்குப் போய்வந்தது திருக்குறளாலும், வள்ளுவராலும் கிடைத்த வாய்ப்பு.

 முழுக்க முழுக்க கிராமத்துத் தெருக்களில் மட்டுமே பழக்கப்பட்டவள் நான். புதுதில்லிப் பயணத்திற்கு கல்லூரி முதல்வர் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியை காந்திமதியின் உதவியை மறக்க முடியாது'' என்கிறார் இவர்.

 தில்லி அனுபவத்தை நம்மிடம் விவரித்த மீனாசங்கரி, ""அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். நாமெல்லாம் தில்லியைப் பார்க்க முடியுமா?  என நினைத்திருந்த வேளையில், திருக்குறளால் எனது கனவு நனவானது.  புதுதில்லி சென்றது வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், நமது நாட்டின் ஜனநாயக அச்சாணியாக விளங்கும் மக்களவையின் உள்ளே சென்று தனது குரலைப் பதிவு செய்து வந்திருப்பதுதான் மிகப்பெரிய கொடுப்பினை. மக்களவை வளாகத்தில் கருப்புக் கல் காந்தி சிலை முன்பு நின்று திருக்குறளை ஒப்புவித்த, அந்தத் தருணத்தை, இப்போது நினைத்தாலும், இது கனவா இல்லை நனவா என்றே எண்ணத் தோன்றுகிறது'' என்கிறார் மீனாசங்கரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT