கறுப்பு நிறத்திற்கும் அங்கீகாரம் வேண்டும்
டிவி தொகுப்பாளினி, குறும்பட நாயகி, நாடக நடிகை, பெரியதிரை நடிகை என இளம் வயதில் பன்முக ஆளுமை பெற்றவர் சரண்யா ரவிச்சந்திரன்.
டிவி தொகுப்பாளினி, குறும்பட நாயகி, நாடக நடிகை, பெரியதிரை நடிகை என இளம் வயதில் பன்முக ஆளுமை பெற்றவர் சரண்யா ரவிச்சந்திரன். அவர்
நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""எனக்கு பூர்வீகம் திருச்சி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். மைக்ரோ பயாலஜி படித்துள்ளேன். படிப்பு முடிந்ததும் ஒரு எம்.என்.சி நிறுவனத்தில் குவாலிட்டி கன்ட்ரோலராக பணிபுரிந்து வந்தேன். நான் கறுப்பாக இருப்பதால், நானும் அழகாக தெரிய வேண்டும் என்று மேக்கப் சாதனங்களை அதிகம் உபயோகிப்பேன். அதுபோன்று தோழிகளிடம் எப்பேதும் வாய் ஓய்யாமல் பேசிக் கொண்டே இருப்பேன். இதனால், என் தோழிகள் எல்லாரும் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள், "டிவி ஆங்கர்தான் உனக்கு சரியாக இருக்கும்' என்று. ஒரு கட்டத்தில் எனக்கும் டிவி ஆங்கர் தான் எனக்கு சரியான வேலையோ என்ற எண்ணம் வர, செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு டிவி ஆங்கராக வேண்டும் என்ற முடிவோடு திருச்சியில் இருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டேன். வீட்டில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர், என் பிடிவாதத்தைப் பார்த்து 6 மாதம் கெடு கொடுத்தார்கள். அதற்குள் நான் வேலையை தேடிக் கொள்ள முடியவில்லை என்றால், ஊர் வந்து சேர்ந்து விட வேண்டும் என்று கெடுவுடன் அனுமதித்தார்கள்.
சென்னையில் யாரையும் எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும், என் பள்ளி தோழியின் அண்ணன் ஒருவர் சென்னையில் இருந்தார். அவரின் உதவியோடு ஹாஸ்டலில் அறையெடுத்து தங்கினேன்.
ஆனால், அடுத்து என்ன செய்வது, யாரைப் பார்ப்பது, எங்கு செல்வது, எப்படி செல்வது என்று எதுவும் தெரியாது.
இருந்தாலும் நம்பிக்கையுடன் காலையில் கிளம்பிவிடுவேன். வழியில் தென்படுபவர்களிடம் எல்லாம் வழிக்கேட்டுக் கொண்டு ஒவ்வொரு டிவி நிறுவனமாக ஏறி இறங்கினேன். நான் கறுப்பு, கறுப்பு என்று எல்லோரும் என்னை நிராகரித்தார்கள். இதற்கிடையில், வீட்டில் கொடுத்த கெடு முடிந்துபோக, வீடு திரும்பும்படி அப்பா சொன்னார். இருந்தாலும் தொகுப்பாளினியாகாமல் வீடு திரும்ப மாட்டேன் என்று வைராக்கியமாக சொல்லிவிட்டேன். 18 மாதம் வீட்டுப் பக்கமே போகவில்லை. கையில் இருந்த பணம் எல்லாம் தீர்ந்து போக, பட்டினியும், பசியுமாக வேலையைத் தேடி அலைந்தேன். கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோன்று இருந்தது.
இந்த நிலையில்தான், தீரன் தொலைக்காட்சியில் எனக்கு தொகுப்பாளினியாக வேலை கிடைத்தது. பின்னர், வீட்டிற்கு சொன்னேன். அம்மா நம்பவில்லை. ஆனால், உறவினர்கள் சிலர் என்னை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு வீட்டுக்கு போன் செய்து விசாரித்ததும்தான் நம்பினார்கள். அதன்பின் அப்பா கொடுத்த நம்பிக்ûயில் ஓடத் தொடங்கினேன்.
இந்நிலையில், தீரன் டிவியில் எடிட்டராக இருந்த பாலாஜி அண்ணன், ஒரு குறும்படம் எடுத்தார். அதில் எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பும் கொடுத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, தொடர்ந்து குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினேன். இதுவரை சுமார் 70 குறும்படங்களில் நடித்துள்ளேன். குறும்படங்களில் நடிப்பதில் சம்பளம் எல்லாம் பெரிதாக கிடைக்காது. சாப்பாடு மட்டும் இரண்டு வேளை கிடைத்துவிடும். கிடைக்கும் சொற்ப பணத்தைச் சேர்த்து வைத்து ஹாஸ்டலுக்கு கட்டிவிடுவேன். ஒரு வேளை உணவு இல்லையென்றாலும் பரவாயில்லை சமாளித்துவிடலாம் ஆனால், தங்குவதற்கு பாதுகாப்பான இடம் முக்கியமல்லவா?.
இந்நிலையில், பெரிய திரையிலும் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தன. "காதலும் கடந்து போகும்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்தேன். அதைத் தொடர்ந்து சிறு சிறு வாய்ப்பு அவ்வப்போது வந்தது. நடித்துவிட்டு வருவேன். ஆனால், சிலது எடிட்டிங்கில் போய்விடும், சிலது தெரியவே தெரியாது. மேலும், என் நிறத்தினாலே எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பெரும்பாலும் தட்டிப் போய்விடும்.
இந்த சமயத்தில் தான் "தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்' பற்றி கேள்விப்பட்டேன். சினிமாவில் நான் இருக்க வேண்டும் என்றால் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தால்தான் முடியும் என்று நினைத்தேன். நான் என்னதான் குறும்படங்களில் நடித்திருந்தாலும், கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்துக் கொண்டால், ஒரு முழுமையான நடிகையாகலாமே என்ற எண்ணம் தோன்ற, ஸ்டேனிஸ்லாவ்ஸ்கி ( நபஅசஐநகஅயநஓஐ ஙஉபஏஞஈ ஞஊ அஇபஐசஎ நஇஏஞஞக) ஆக்டிங் ஸ்கூலில் சென்று சேர்ந்தேன். அதன் நிறுவனர் அருள்மொழி சார், பக்ரூன் மாஸ்டர் போன்றோர் நடிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக் கொடுத்து நல்ல நடிகையாக செதுக்கினார்கள். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பது கலை வடிவில் உள்ள நடிப்பு. இதில் பயிற்சி பெற்றுவிட்டால், ஒரு முழுமையான நடிகராகிவிடலாம். மேடை நாடகத்திற்கும் சினிமாவுக்கும் ரொம்ப வித்தியாசம் இருந்தது. பின்னர், மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன்.
மேடை நாடகங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த இன்னொரு விஷயம் இலக்கியம். ஜெயகாந்தன், சுஜாதா, சுந்தர ராமசாமி, பாமா போன்றோரின் நாவல்கள் என்னை பெரிதும் மாற்றியுள்ளது என்று சொல்லலாம். இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு கொஞ்சம் நேரமாவது புத்தகம் படிக்கவில்லை என்றால், எனக்கு தலையே வெடித்துவிடும்.
நிறைய மேடை நாடகங்கள் நடித்திருக்கிறேன். நீட் தேர்வுக்காக இறந்துபோன அனிதா பற்றி ஒரு ப்ளே, நடிகை ரோகிணி மேடமுடன் ஒரு ப்ளே, தற்போது மா. அரங்கநாதன் ஐயாவின் இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவரின் சிறுகதைகளான "மோனாலிஸாவும் கறுப்பு குட்டியும்' , "காடான் மலை' , "மண்டேலாவை நேசிக்கிறேன்' , "கண்ணோட்டம்' ஆகிய நான்கு சிறுகதைகளையும் நாடகமாக நடத்தினோம். காடான் மலை நாடகத்தில் மட்டும் நான் முழுமையாக நடித்திருந்தேன். மற்றவற்றில் எல்லாம் வந்து போவேன், அவ்வளவுதான். மேடை நாடகங்கள் நடிப்பில் என்னை நன்கு மெருகேற்றி உள்ளது.
இந்நிலையில், இயக்குநர் சுப்பிரமணிய சிவா சார் அவரது படத்திற்கு ஆடிஷன் நடத்துவதாகவும், அதற்காக கறுப்பு பெண்களை தேர்வு செய்வதாகவும் கேள்விப்பட்டு, ஆடிஷனில் கலந்து கொண்டேன். இப்போது சுப்பிரமணிய சிவா சார் இயக்கிவரும் "வெள்ளையானை' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஒரு வசனம் எனக்கு கிடைக்குமா? என்று ஏங்கி கொண்டிருந்த நேரத்தில் சிவா சார் எனக்கு முக்கியத்துவம் கொடுத்து கிட்டத்தட்ட 40 சீன்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து "வட சென்னை' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தோழியாக ஒரு சிறு கேரக்டரில் நடித்திருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் இருக்கும் பல பெண்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும். தமிழ் பெண்களுக்கும், கறுப்பு நிறத்திற்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இதுதான் எனது ஆசை'' என்றார்.