மகளிர்மணி

கவர்ச்சி மட்டுமே அழகு அல்ல!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்  ரோமானியாவைச் சேர்ந்த   பெண்  புகைப்பட  நிபுணர் மிஹேலா நோராக் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு  உலகை சுற்ற கிளம்பினார்.

பனுஜா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்  ரோமானியாவைச் சேர்ந்த   பெண்  புகைப்பட நிபுணர் மிஹேலா நோராக் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு உலகை சுற்ற கிளம்பினார்.  பல நாடுகளில்  பெண்களின் அழகில் இருக்கும் வேற்றுமைகளில்  ஒற்றுமையை    புகைப்படங்களாக வார்த்து  The  Atlas  of  beauty என்ற  தொகுப்பை வெளியிடவே  இந்த உலக சுற்றுப் பயணம்.  

மிஹேலா ஐம்பத்திமூன்று நாடுகளை சுற்றி ஆயிரக்கணக்கான  இளம், வயோதிக பெண்களை  ஆயிரக்கணக்கில் படங்கள் எடுத்து அதில் ஐநூறு படங்களைத் தெரிவு செய்து  தொகுப்பினை  வெளியிட்டுள்ளார்.  மிஹேலா இந்தியா வரவும் மறக்கவில்லை. தொகுப்பிற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு.  ஒவ்வொரு படம் குறித்தும் எங்கே எப்போது படம் எடுக்கப்பட்டது என்ற விளக்கமும் உண்டு. பாடகி, ஹெலிகாப்டர் பைலட், காய்கறி விற்பவர், புற்றுநோய் வந்து குணமானவர், கவிதாயினி, செவிலி, வீட்டுத் தலைவி    என்று பல தரப்பட்டவர்களை  படம் எடுத்திருக்கிறார். 

"பெண்களை காட்சிப் பொருளாக்கி, பாலியல் பண்டமாக காண்பிக்கப்படுவதுதான் அழகு  என்று சொல்லப்படுகிறது. அழகான பெண் என்று கூகுளில்  தேடினால் கவர்ச்சியான பெண்களின் படங்கள்தான் வரும். அழகு என்பதின் பொருளே மாறிவிட்டிருக்கிறது. கவர்ச்சியும்  அழகுதான். ஆனால் கவர்ச்சி மட்டுமே அழகு  அல்ல. அழகில் பாலியல் கவர்ச்சியை பார்க்கும்  அணுகு முறைதான் அதிகமாக உள்ளது. பெண்கள் விரும்பியும் விரும்பாமலும்  அவை நடந்து விடுகின்றன. என்னைக் கவர்ந்த பெண்களைப் படம் பிடித்திருக்கிறேன். அழகு என்பதன்  உண்மையான பொருளினை  விளக்கவே  இந்த   தொகுப்பு.   

“ஒரு புகைப்படம்  எடுப்பதில் சில  நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செலவழித்தேன். இந்தத் தொகுப்பின் அட்டைப் படத்தில்  இருக்கும் பெண் இந்தியர். காசியில் கங்கையில்  அந்தப் பெண் பூஜை செய்யும் போது எடுக்கப்பட்டப்  படம்.  

அதிகாலையில் கங்கைக்கு வந்திருந்த அந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்டு பல படங்களை  எடுத்து முடித்தேன்.  இந்தத் தொகுப்பு மூலமாக  நான் பெரிதும் பக்குவப்பட்டிருக்கிறேன். பல நாட்டுப் பெண்கள் குறித்து பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

நான்  இயல்பாகவும்  எளிமையாகவும்  இருக்கும் சாதாரண சாமான்ய பெண்களின் வித்தியாசமான அசாதாரண அழகினை கூடுமானவரை ஒப்பனை இல்லாமல் பிரதிபலித்திருக்கிறேன். அதனால் படங்களை பார்க்கும் அனைவருக்கும்   ஆச்சரியம். செயற்கைத்தனம் எனது படங்களில் சற்றும் இல்லாததால்  என் படங்களை மக்கள் விரும்புகிறார்கள். சில பெண்கள்  லேசாக  மேக்கப்  செய்து கொண்டு  வந்தார்கள். அது அவர்கள் விருப்பம். நான் அதற்கு ஒத்துப் போனேன். அவர்களது விருப்பங்கள் மதிக்கப்பட  வேண்டாமா?

சில பெண்களை படம் எடுக்கும் போது வீட்டில் அனுமதி பெற்று  காமிரா முன் நின்றார்கள். சிலர் "படம் எல்லாம் பிடிக்க வேண்டாம்' என்று ஒதுங்கி விட்டார்கள். பெர்லின் நகரில் என்னை  ஒரு பெண் சந்தித்தாள்...  நான் பெர்லின் வந்த நோக்கத்தைச் சொன்னதும்... " உங்களுக்கு ஒரு  யோசனை' என்றாள். நல்ல தரமான புதிய காமிரா வாங்கச் சொல்லப் போகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் சொன்ன  யோசனையைக் கேட்டதும்  நான் கலகலவென்று சிரித்தே விட்டேன். நல்ல ஷூ ஒன்றை வாங்குங்கள்.. ஏனென்றால்  நீங்கள் இன்னும் பல நாடுகள் சுற்ற வேண்டும்...பல நாட்டுப் பெண்களை சந்தித்து படங்களை  காமிராவினால் பிடிக்கவேண்டும். இதற்கு நீங்கள் நடை நடை என்று நடக்க வேண்டும்... அதனால் சொல்கிறேன்.. நல்ல ஷூ வாங்கிக் கொள்ளுங்கள்'' என்றாள்..  

அழகு என்பது இயல்பாக  இருப்பதுதான். இயல்பாக வெளிப்படுவதுதான். எனது தொழில்   அந்த இயல்பைப்   பதிவு செய்வது. பெண்கள் வல்லமை கொண்டவர்கள்.  பன்முகத் தன்மையைக் கொண்டிருப்பவர்கள்.  அதிலும் இந்திய பெண்கள் தைரியமும் அழகும் கொண்டிருப்பவர்கள். இந்தப் பண்புகளை  மீண்டும் உலகுக்கு  உரக்கச்   சொல்வதற்காக   வரும்   செப்டம்பர் மாதம் என்னுடைய "த அட்லஸ் ஆஃப் ப்யூட்டி' இரண்டாவது பாகத்தை பிரசுரிக்க உள்ளேன்''  என்கிறார்  மிஹேலா நோராக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமை காவலரை தாக்கியவா் கைது

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

உத்தமபாளையத்தில் பலத்த மழை!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? ஈ.ஆர்.ஈஸ்வரன்

SCROLL FOR NEXT