மகளிர்மணி

காய்கறிகள் மற்றும் பழத்தோல்களின் பயன்கள்!

காய்கறிகள் மற்றும் பழங்களின் தோல்களை சீவி விட்டுப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

DIN

காய்கறிகள் மற்றும் பழங்களின் தோல்களை சீவி விட்டுப் பயன்படுத்துவது
 வழக்கமாக உள்ளது. ஆனால், தோல்களாலும் பயன்கள் உண்டு.
 உருளைக்கிழங்கு, வாழைக்காய்

உருளைக்கிழங்கு, வாழைக்காயின் தோல்களை நீக்கக் கூடாது. தோலோடு சேர்த்து சமைப்பதால் அவற்றில் உள்ள வாயுவுக்கு தோல்களே மருந்தாகின்றன. வேக வைத்த வாழைக்காயின் தோலை நறுக்கி வதக்கி துவையல் செய்யலாம்.
 பீர்க்கங்காய்

பீர்க்கங்காய்த் தோலை வதக்கி துவையல் செய்யலாம்.
 பீட்ரூட் , கேரட்
 பீட்ரூட், கேரட் தோல்களை சுத்தம் செய்து உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய், பெருங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து துவையல் செய்தால் சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
 ஏலக்காய்
 ஏலக்காய்த் தோலை வாணலியில் வறுத்துப் பொடித்து தேயிலைத் தூளுடன் போட்டு வைத்தால் டீ மணக்கும்.
 வெள்ளரிக்காய்,
 பூசணிக்காய், மாங்காய்

வெள்ளரிக்காய், பூசணிக்காய், மாங்காய் போன்றவற்றின் தோலை மேலாக லேசாக சீவினால் போதும். ஏனென்றால் அவற்றின் தோல்களின் அடியில் சத்துக்கள் நிறைய உள்ளன. வெள்ளரிக்காய்த் தோலை அரைத்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் சருமத்தின் உள்ளே உள்ள நுண்ணிய துளைகளில் இருக்கும் அழுக்குகளைப் போக்கிவிடும்.
 எலுமிச்சம் பழம்
 எலுமிச்சம்பழத்தோலை வெயிலில் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது அதனுடன் உப்பு, மிளகாய்ப்பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து இட்லி , தோசை, சாதத்துக்கும் நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
 எலுமிச்சம் பழ மூடியால் நகங்களைத் தேய்த்து வந்தால் நகங்கள் உடையாது.
 எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்துப் பொடித்து முகம், கை, கால்களில் தடவி ஐந்து நிமிடம் கழித்துக் கழுவினால் சருமம் மினு மினுக்கும்.
 எலுமிச்சைத் தோலினால் செம்புப் பாத்திரங்களைத் தேய்த்தால், செம்புப் பாத்திரங்கள் பளபளக்கும்.
 எலுமிச்சைத் தோலை வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது ரசத்தில் சிறிது சேர்க்கலாம். ரசம் சுவையும், மணமும் கூடும். இதனுடன் உப்பு சேர்த்து பல்பொடியாகவும் பயன்படுத்தலாம்.
 எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தியதும் அதன் தோலை துண்டுகளாக நறுக்கி இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து உப்பு மிளகாய்த்தூள் கலந்து கடுகு, பெருங்காயம் தாளித்து விட்டால் திடீர் ஊறுகாய் ரெடி.
 எலுமிச்சை தோலால் பாதங்களைத் தேய்த்தால் கணுக்கால், விரல்களில் படியும் கருப்பு நிறம் மறைந்து பளபளக்கும்.
 மாதுளம்
 மாதுளம் பழத்தின் தோலை அரைத்து மோருடன் கலந்து குடித்தால் வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.
 பப்பாளி

பப்பாளிப் பழத்தின் தோலில் "பப்பைன்' என்ற எண்ணெய் உள்ளது. இது நம் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி புத்துணர்வு தருகிறது. இதன் தோலின் பொடியை பாலில் கரைத்து முகத்தில் பேக் செய்யப் பயன்படுத்தலாம்.
 வாழைப்பழம்
 வாழைப்பழத் தோலை அனலில் வாட்டி காலில் உள்ள ஆணி உள்ள இடங்களில் வைத்து கட்டினால் சரியாகும்.
 ஆரஞ்சு

ஆரஞ்சுத் தோலில் சுவையான துவையல், புளிக்குழம்பு போன்றவை செய்யலாம். ஆரஞ்சுத் தோலை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடித்து தினமும் குளிக்கும்போது உடம்புக்குத் தேய்த்துக் கொண்டால் சரும நோய்கள் வராது. ஆரஞ்சு பழத்தோல்களை வெயிலில் காய வைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொளுத்தினால் வரும் புகையில் கொசு எட்டிப் பார்க்காது.
 காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், இரும்பு, கால்சியம் சத்துகள் நிறைய உள்ளன. இனிமேலாவது காய்கறிகளில் உள்ள சத்துக்களோடு தோல்களில் உள்ள சத்துக்களையும் பயன்படுத்துவோம். இவ்வளவு சத்துகளையும் வீசி எறியலாமா?
 - ஆர்.ஜெயலட்சுமி
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT